மே 04, 2022

டாணாக்காரன் படத்துக்கு ஒரு ராயல் சல்யூட்.

டாணாக்காரன் படத்துக்கு ஒரு ராயல் சல்யூட்.


ஆம். இப்படத்திற்கு ஒரு ராயல் சல்யூட் செய்யலாம் போலத்தான் இருக்கிறது. இயக்குனர் தமிழ் அவர்கள் காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் அதிகார அத்துமீறல்களை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது, இத்தனைக் கொடுமைகளையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டுதான் ஒவ்வொருவரும் பயிற்சி பெறுகிறார்களோ என்று மேலோட்டமாகப் பார்க்க விரும்பவில்லை. மாறாக அதிகாரவர்க்கம் தனக்கு வளைந்து கொடுப்பவர்களைத் தன் கட்சியாக சேர்த்துக் கொள்வதும், தனக்கு வளைந்து கொடுக்காதவர்களை ஒதுக்கி அவர்கள் மீதான வன்மத்தை கட்டமைப்பதும் இங்கே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்றே நோக்கலாம். உண்மையில் மேற்சொன்ன அத்தனையும் நான் அனுபவித்தவன் என்கிற அடிப்படையில் இப்படத்திற்கான இந்த விமர்சனத்தை இங்கு பதிவு செய்கிறேன். ஆதிக்கம் செலுத்தும் கொடியவர்களுடைய மனப்போக்கை இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது. தேசிய மாணவர் படை என்று சொல்லக்கூடிய  கல்லூரிகளில் கொடுக்கப்படும் அடிப்படை இராணுவப் பயிற்சிகளிலும் கூட இத்தகைய கொடுமைகள் காலங்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன. காரணமே இல்லாமல் ஒரு வன்மத்துடன்  சீனியர்கள் என்று சொல்பவர்கள் நடந்து கொள்வதும், காரணமே இல்லாமல் ஜூனியர்கள் தண்டிக்கப்படுவதும் ஆதிக்கம் செலுத்துபவர்களின் மூர்க்க வெறியைக் காட்டுகிறதே ஒழிய பயிற்சியின் உடைய தன்மை, நோக்கம், அதனால் விளையப் போகும் பயன், சக மனிதர்களை மதிக்கும் மாண்பு போன்றவைப் புறக்கணிக்கப்படுகின்றன.

சுயமரியாதையோடு வாழத்தான் இந்தப் பயிற்சி என்கிற நிலை ஒருபுறமிருக்க அந்தப் பயிற்சியை அவ மரியாதையோடு கொடுப்பது இழிவினும் இழிவு. பயிற்சி என்கிற பெயரில் அவமரியாதையாக நடத்தப்பட்ட மாணவர்கள் இதை நன்கு அறிவர்.
படத்தின் இறுதியில் இந்தக் கொடுமைகளுக்கு எப்படி முடிவு காண்பது என்பது பற்றியும் இயக்குனர் கூறியிருப்பது உள்ளபடியே வியப்பைத் தருகிறது. வெறுமனே கொடுமைகளை மட்டும் பதிவு செய்யாமல் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்றும் சமுதாயத்தில் அது எந்த மாதிரியான மாற்றத்தைத் தரும் என்பது பற்றியும் இயக்குனர் தமிழ் அவர்கள் சிறப்பாகப் படம்பிடித்துள்ளார். அடி வாங்கினாலும் மிதி வாங்கினாலும் வலிகளை தாங்கிக் கொண்டாவது அதிகாரத்தை நோக்கி நகர்ந்து அதிகாரம் பெற்று, பிறகு அந்த அதிகாரத்தை ஆதிக்கத்துக்கு பயன்படுத்தாமல் சமுதாய நலனுக்கு எப்படிக் கொண்டுசேர்ப்பது என்பது பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். டாணாக்காரன் போன்ற படங்கள் இன்னும் சமுதாயத்தின் வெளிவராத பக்கங்களைப் புரட்டி,  ஆதிக்கக் காரர்களைச் சற்றே சீர்திருத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதிகாரம் நல்லதைச் செய்யவே பயன்படவேண்டும்! ஆதிக்கம் செய்வதற்கு அல்ல.
ஆம். இப்படத்திற்கு ஒரு ராயல் சல்யூட் செய்யலாம் போலத்தான் இருக்கிறது.

- தமிழறிவு-
03.05.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக