ஜனவரி 24, 2020

தமிழரின் உழவு - ஆய்வுக்கட்டுரை

தமிழரின் உழவு - ஆய்வுக்கட்டுரை - பதிவிறக்கம்.
Volume: 4 - Issue:2


தமிழரின் உழவு


இரா.சசிகலா,(பதிவு எண் 2241)
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழாய்வுத்துறை
அரசு மகளிர் கலைக் கல்லூரி,
சிவகங்கை.
கைப்பேசி எண்: 9080033131.
rsasivnr1989@gmail.com

முன்னுரை
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்மற் றெல்லாம்
 தொழுதுண்டு பின்செல் பவர்”
என்ற வள்ளுவ வரிகள் உழவின் மேன்மையை எடுத்தியம்புகிறது. தமிழினத்தின் பெருமையை பறைசாற்றும் காரணிகளுள் மிக முக்கியமான ஒன்றாக உழவுத் தொழில் அமைகின்றது.  இத்தொழில் மூலம் இயற்கையோடு இயைந்த வாழ்வில் இயன்றளவில் தன் சமூக மேம்பாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிப் படிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளான் தமிழன்.  நாட்டின் இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற தொழில்களில் முதன்மையானது உழவுத் தொழிலாகும். இதில் ஈடுபட்டுள்ள மக்களை உழவர் என்றனர். உழவுத்தொழிலை மேற்கொண்டு நாட்டு மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தனர். மக்களுக்கு உணவினைக் கொடுக்கும் உழவுத்தொழிலே, மற்ற எல்லா தொழில்களுக்கும் அடிப்படையாக அமைகின்றது. தமிழர்கள் தங்களது நுண்ணறிவு கொண்டு உழவை கையாண்ட விதத்தை இக்கட்டுரை வழி ஆராயலாம்.

உழவின் தோற்றம்
            மனிதகுல வரலாற்றில் மாபெரும் மாற்றத்தினை ஏற்படுத்தக் காரணமாற் அமைந்தது உழவுத்தொழில் ஆகும். உழவுத் தொழிலை மனிதன் செய்யத் தொடங்கி ஏறத்தாழ சுமார் நூறு நூற்றாண்டுகள் இருக்கலாம் என ஆய்வியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இதனை, “உழவுத்தொழில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வால் கோதுமையை விதைப்பதோடு எகிப்தில் தோன்றி, உலகின் எல்லா பகுதிகளுக்கும் பரவிற்று என்ற கருத்துடையவர் பேராசிரியர் ஸ்மித் அவர்கள். கற்காலக் கருவிகள் சான்று அளிப்பதிலிருந்து அதே காலத்தில், அல்லது அதனினும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நெற் பயிரிடுதலும், பருத்தி ஆடை நெய்தலும் தென்னிந்திய சமநிலப் பகுதிகளில் தொடங்கி விட்டன. ஆகவே, இந்திய உழவுத் தொழில் வளர்ச்சி, அது எகிப்தில் பெற்ற வளர்ச்சியின் விளைவு அன்று”1 என்று கருத்து நிறுவுகிறது.
            “தமிழ் நூல்களில் மிகப் பழமையதாகிய தொல்காப்பியம் வேளாளர்களுக்கு அவர்களுக்கே சிறப்பாக உரிய உழவுத் தொழிலும் ஒருங்கே வைத்துச் சொல்லப்படுதல் பெரிதும் நினைவிற் பதிக்கற்பாற்று. தொல்காப்பியம் ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலாகையால், அதில் குறிக்கப்பட்ட வேளாளர்கள் அந்நூலுக்கு முற்பட்ட காலத்திலேயே அஃதாவது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே உழவுத்தொழிலைக் கண்டறிந்து பெருக்கி, அதனால் தாமும் நாகரிகத்திற் சிறந்து, பிறரைச் சிறப்புறச் செய்து வாழ்ந்தமை புலனாம்”2 பண்டைத் தமிழர்களின் உழவுத்தொழில் என்பது மிகவும் தொன்மையானது என்பதை உணர முடிகின்றன.
உழவு – விளக்கம்
            உழவு என்னும் சொல்லிற்கான விளக்கத்தினை க.வெள்ளைவாரனார் அவர்கள் சங்ககாலத் தமிழ்மக்கள் என்னும் நூலில், “நிலத்தை நன்றாக உழுது புழுதியாக்கி, நீர்ப்பாய்ச்சி, நெல் முதலியவற்றை விளைவிக்கும் பயிர்த்தொழிலை மேற்கொள்பவர் உழவர் என வழங்கப் பெறுவர். ‘உழத்தல்’ என்பது இடைவிடாது முயலும் மெய்ம்முயற்சியைக் குறிக்கும் சொல்லாகும். மழை, பனி, வெயில் என்னும் கால வேறுபாட்டால் உடம்புக்குளவாகுத் தொல்லைகளை ஒரு சிறுpதும் பொருட்படுத்தாது, நெற்றி வியர்வை நிலத்தில் விழ இடைவிடாது உழைக்கும் மெய்ம்முயற்சி இப்பயிர்த் தொழிலுக்கு வேண்டப்படுவதாகலின், இத்தொழிலை ‘உழவு’ என்ற சொல்லால் பண்டையோர் வழங்கினர்”3 என்று விவரிக்கின்றார்;.
உழவின் சிறப்பு
சங்க இலக்கியங்கள் மனிதனின் உணவுத் தேவையினை நிறைவு செய்யும் தொழிலான உழவின் சிறப்புகளையும் அத்தொழிலை மேற்கொண்ட உழவர்களின் சிறப்புகளையும் பல பாடல்களில் பதிவு செய்துள்ளனர். தமிழரின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியத்தில் வேளாண்மைத் தொழிலில்; ஈடுபடும் வேளாளருக்கும் பயிர்களை விளைவித்த பயனைத் தருவதன்றி வேறு தொழில் இல்லை என்பதை,
“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
 இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”4
என்ற நூற்பா சுட்டுகிறது. தமிழர்கள் எல்லாத் தொழில்களையும் விட தலைசிறந்ததாக உழவையே சிறப்பித்தனர். மக்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு பொருள் சேர்த்தனர். இருப்பினும் உணவுக்காக உழவர்களையே நம்பி எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. திருவள்ளுவர் உழவின் சிறப்பையும் உழவனின் மேன்மையினையும் போற்றுகிறார். உலகிலுள்ள உயிர்களின் பசி நீங்க உழுதலைச் செய்யும் உழவன் உலகத்திற்கு அச்சாணி போன்றவன் என்பதை,
“உழுவார் உலகத்திற்கு ஆணி அஃதுஅற்று
 எழுவாரை எல்லாம் பொறுத்து”5
என்ற குறளில் உணர்த்துகிறார்.
உழவின் உயர்வு
உணவுத்தொழிலில் உயர்ந்து விளங்கும் நாடே பஞ்சத்தில் வீழ்ந்து பரிதவிக்காது. அந்நாட்டிலேயே வாழ்வோன் இன்புறுவர், அந்த நாடே செல்வத்தில் சிறந்து வாழும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர்.
“கருவி வானம் தண்டளி சொரிந்தெனப்
 பல்விதை உழவிற் சில் ஏராளர்
 பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்
 கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி
 விளங்கு கதிர் திருமணி பெறூஉம்,
 அகன்கண் வைப்பின் நாடு கிழவோனே”                (பதி.பா.76)
            கூட்டமாகிய மேகங்கள் மழைபெய்தவுடன் பலவிதமான விதைகளையும் வைத்திருக்கின்ற உழவிலே சிறந்த உழவர்கள் தங்கள் வேலையை ஊக்கத்துடன் செய்கின்றனர். குளிர்ந்த நீர்த்துறையை அடைகின்றனர். அழகான பகன்றைப் பூமாலைகளை கதிர்களிலிருந்து அழகிய தானிய மணிகளைப் பெறுகின்றனர். ஒரு நாட்டின் உயர்வுக்கு உழவுத்தொழிலே காரணம் என்பதை உணர்ந்து உழவைப் போற்றி பாதுகாத்தனர்.
            உணவுப் பஞ்சம் தாண்டவமாடும் நாட்டில் ஒரு சிறிதும் சமாதான வாழ்வு நிலைத்திராது. உணவுப் பொருட்களின் விளைவு பெருகினால் தான் பட்டினிக் கொடுமையும் பஞ்சமும் பறந்தோடும். உணவுப் பண்டங்களைப் பெருக்குகின்ற உழவன் ஒரு துயருமின்றி உரிமையுடன் வாழ்ந்தால் தான் உணவுப் பண்டங்கள் பெருகும். இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் உணர்ந்திருந்தனர். ஆதலால் அவர்கள் உழவர்களிடம் உள்ளன்பு காட்டினர். உற்பத்தியைப் பெருக்கினர்.
உழவுத்தொழில் கல்வி
            உழவுத்தொழிலே தமிழர் தம் அடிப்படைத் தொழிலாகும் உழவுத்தொழிலைச் சார்ந்தே பிற தொழில்கள் நடைபெற்றன. உயிர்களுக்கு உணவு கொடுக்கும் உழவுத்தொழிலைப் பட்டறிவாலும் குடி வழியாக மூத்தோரிடம் இருந்து கற்றும் செய்தனர். உழவுத் தொழில் அறிவியல் முறையில் சிறந்த கருவிகள் துணைகொண்டு இயற்கையோடு இயைந்து செய்தனர். இதனையே,
“இருவகையான் இசைஎன்ற
 சிறுகுடில் பெருந்தொழுவர்”                                                (மது.பா.21)
என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றது.
உழவுக்குரிய செயல்பாடுகள்
            உழவுக்குரிய செயல்பாடுகளான நிலத்தை உழுது பண்படுத்தி விதைதேர்வு, நாற்று நடவு, களையெடுப்பு, நீர்ப்பாய்ச்சல், பூச்சிகள் மற்றும் விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாத்தல், அறுவடை செய்த தானியங்களைச் சேமித்தல் போன்றவற்றை அறிவியல் முறைகளில் மேற்கொண்டான் தமிழன். இதனையே திருவள்ளுவர்,
“ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டாள்
 தீரினும் நன்றுதன் காப்பு”6
 என்னும் குறளிள் குறிப்பிடுகின்றார்.
உழவுசார் கருவிகள்
            உழவர்களுக்கு வேளாண்மைத் தொழிலில் நிலத்தினை உழுது பண்படுத்துவதற்குப் பணன்பட்ட கருவிகள் உழுக்கருவிகள் என்பபடும். சங்க இலக்கியத்தில் உழுதல் தொழிலுக்கு விலங்குகளின் துணையோடு கலப்பை, தளம்பு, கொழு போன்ற கருவிகளும் பயன்படுத்தப்பட்டதற்கு சான்றுகள் உள்ளன. இது தமிழரின் உழவுத்தொழில் வளர்ச்சியைக் காட்டும் தன்மையில் அமைகின்றது. உழவுக்கு முதன்மையானது கலப்பை. இக்கலப்பையானது சங்க இலக்கியங்களில் ஏர், உழுபடை, நாஞ்சில் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதை,
“தேஎர் பரந்தபுலம் ஏஎர் பரவா
 களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா”                                              (பதி. புh 26)
என்ற பதிற்றுப்பத்து பாடல் வரிகள் புலப்படுத்துகிறது. கலப்பையின் உழுகின்ற பகுதியாகிய நுனியில் கொழு எனும் உறுப்பு அமைந்துள்ளது. கொழுவினை மண்ணில் நன்கு புதையுமாறு அழுத்தி உழுவதை,
“கொல்லை உழுகொழு வேய்ப்பப் பல்லே”                                               (பெரு.பா.117)
என்ற  வரிகளில் குறிப்பிட்டுள்ளனர். பண்டைத் தமிழர்கள் நன்செய் நிலத்தினை உழுகின்ற பொழுது ஏற்படுகின்ற கட்டிகளை உடைக்க ‘தளம்பு’ என்ற ஒருவிதமான கருவியைப் பயன்படுத்தினர். தளம்பு என்பது சேற்றுக் கட்டிகளை உடைக்கும் தன்மை வாய்ந்தது. அத்தகைய  நிலத்தைச் சமன்படுத்தும் பிரம்பு எனும் ‘தளம்பு’ பற்றி,
“மல்குமிளர் செறுவின் தளம்புதடிந் திட்ட”                                                (புறம்.பா.67)
என்று கூறப்படுகிறது. இவைகளால் தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு கலப்பை, கொழு, தளம்பு போன்ற உழற்கருவிகளைப் பயன்படுத்தினர் என்பதை அறிய முடிகிறது.
உழவு முறைகள்
            நிலத்தை அதிகமுறை உழ வேண்டும். உழுதலின் அளவுகோலின் அடிப்படையில் தான் அதில் பயிரிடப்படும் பயிரின் வளர்ச்சியும் விளைச்சலும் இருக்கும். மீண்டும் மீண்டும் உழுது மண்ணைப் புழுதியாக்குதல் பயிரிடப்படுவதற்கு ஏற்றது என்பதை,
“நல்லேர் நடந்த நசைசால் விளைவால்”                                         (மது.பா0173.)
என்று மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார். இதனால் நிலத்தை உழவு செய்தலின் தேவையைத் தமிழர் அறிந்து தொழில் செய்தமை அறியப்படுகிறது. நிலங்களைக் கிளறிப் புழுதியாக்கினால் தான் வேளாண்மைக்குப் பயன்படுத்த முடியும் என்பதைத் தமிழர் அறிந்துவைத்திருந்தனர். பண்டைத் தமிழர்கள் உழவில் அகல உழுதல், ஆழ உழுதல் என இருவகையான முறைகளை மேற்கொண்டுள்ளனர். ஒருமுறை மட்டும் உழுதலை ‘ஒரு சால் உழவு’ என்றும் இரண்டு முறை உழுதலை ‘இருசால் உழவு’ என்றும் ஒன்றிற்கும் மேற்பட்ட பலமுறை உழுதலை ‘பல சால் உழவு’ என்றும் வழங்கியுள்ளனர்.
            மண்ணில் ஈரத்தன்மை உலர்வதற்கு முன் நிலங்களை உழுதனர். அவ்வாறு உழுதால் தான் நிலம் உழுவதற்கு எளிதாக இருக்கும் என்பதனை உணர்ந்திருந்தனர். ஈரநிலம் காய்வதற்கு முன் ஓர் ஏரினைக் கொண்டு நிலத்தினை உழ முயலும் உழவனின் நிலையினைக் குறுந்தொகையில் காண முடிகிறது. இதன் வாயிலாக மண்ணின் ஈரப்பதத்தினை அடிப்படையாகக் கொண்டே உழுதல் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. இதனை,

“ஈரம்பட்ட செவ்விப் பைம்புனத்து
 ஓர்ஏர் உழவன் போல”                                                                    (குறு,பா.131.)
என்னும் குறுந்தொகைப் பாடல் எடுத்தியம்புகிறது. இதை வலியுறுத்தும் தன்மையில்,
“மலை இடம் படுத்துக் கோட்டிய சொல்லைத்
 தளிடதம் பெற்ற கான் உழுகுவர்”                                                             (நற்.பா.209)
என்ற நற்றிணைப் பாடலும் அமைந்துள்ளது.
ஆழ உழுதல்
            பண்டைத் தமிழர்கள் அகல உழுவதைவிட ஆழ உழுவதே சிறந்தது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். கலப்பையைக் கொண்டு மண் நன்கு பிளவுபடுமாறு ஆழமாக உழுதனர். இரவில் மழை பொழிந்தால் செம்மண் நிலம் உழுவதற்கான பதத்தினை அடைந்தது. அதனால் உழவர்கள் விடியற்காலை நேரத்தில் வயலின் இருபுறமும் மண் கீழ்மேலாக புரளும் படியாக ஏரினைக் கொண்ட ஆழமாக உழுத முறையினை,
“பேர் உறை தலைஇய பெரும்புலவர் வைகறை
 ஏர்இடம் படுத்த இறுமறுப் பூழில்
 புறம்மாறு பெற்ற பூவல் ஈரத்து
 ஊன் கிழத்தன்ன செஞ்சுவில் நெடுஞ்சால்”                                  (அகம்.பா.194.)
என்ற அகநானூற்று வரிகள் காட்டுகிறது. நெற்கதிர்களை அறுவடை செய்த வயலில் அரிதாள்கள் காணப்படும். வயலில் அரிதாள்களை உடைய நிலம் பிளவுபடுமாறும் மண்கட்டிகள் பிறழும் படியாகவும் ஆழமாக அறுவடைக்குப் பின் உழுத முறையினையும் அகநானூறு,
“நெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்து
 குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர
 ஆரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்”                                                 (அகம்.பா.41)
என்று பதிவு செய்துள்ளது.

பலசால் உழவு
            நிலத்தினை ஒன்றிற்கு மேற்பட்டப் பல முறைகள் உழுதலைப் பலசால் உழவு முறை என்றழைத்தனர். இம்முறை மண்ணின் கடினத் தன்மையினை இலகுவாக்குகிறது. நீரினை மண் எளிதாக ஏற்றுக் கொள்வதற்கும் வேர்கள் நன்கு தூர்விட்டு வளர்வதற்கும் ஏற்ற வகையில் பலசால் உழுவுமுறையினை மேற்கொண்டுள்ளனர். மழைநீரை ஏற்றுக் கொள்ளும்படியும் கலப்பையின் கொழு மண்ணில் மறையும்படியும் பலமுறை உழுத முறையினை,
“கார்ப் பெயர் கலித்த பெரும்பாட்டு ஈரத்து
பூமி மயங்கப் பலவுழுது வித்து”                                                       (புறம்.பா.120)
என்ற புறநானூற்று பாடல் வரிகள் காட்சிப்படுத்துகிறது.
விதைத்தல்
            கட்டாந்தரையில் விதைகளைப் போட்டால் பறவைகள் அவற்றைப் பொறுக்கித் தின்றுவிடும். எறும்புகள் இழுத்துச் சென்றுவிடும் என்பதால் நிலத்தைக் குச்சியால் கீறி விதையினை முதன்முதலாக விதைத்தனர். இவ்வாறு விதைப்பதால் மழை நீர் விதைகளை அடித்துச் செல்வது இல்லை. எனவே நிலத்தைக் கிளரி புழுதியாக்கி அப்புழுதியில் விதைகளை விதைக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தனர். விதைகளை ஒரே இடத்தில் விதைக்காமல் பரவலாக விதைத்துள்ளனர்.
“சிற்சில வித்தல் பற்பல விளைந்து”                                                (நற்.பா.93)
“சிலவித்து அகல இட்டெ பலவிளைந்து”                                       (நற்.பா.209)
என்ற நற்றினை வரிகள் குறிப்பிடுகிறது.
பயிர் இடைவெளி
பல்வேறு வகையான பயிர்களை வெவ்வேறு இடைவெளிகளில் பயிர் செய்தனர் தமிழர். சீரான இடைவெளியில் நட்டு மேற்கொண்டாலே காற்றோட்டம், சூரிய ஒளி கிடைத்துப் பயிர்கள் செழித்து வளரும் என்று உழவுத் தொழில் நுட்பத்தை அறிந்திருந்தனர்.
“பால் வார்ப்பு கெழீஇப் பல்கவர் வளி போழ்வு
 வாலிதின் விளைந்தன ஐவனம்”                                        (மலை.பா.வ. 114-115)
என்ற வரிகள் உணர்த்துகிறது. சங்க காலத்தில் பயிரை விளைவிக்கும் விதையைச் சமைத்து உண்பதை இழிவான செயலாகக் கருதப்பட்டது. இருப்பினும் தவிர்க்க இயலாத சூழலில் விதிவிலக்காக விதைகளை உணவாகச் சமைத்துள்ளனர். திணைகளை எல்லாம் இரவலர்களுக்குக் கொடுத்து தீர்ந்து விட்டதாலும் கடனாகத் தந்தவற்றை பெற இயலவில்லை என்றதாலும் விதைப்பதற்கென காயவைத்திருந்த தினையை உணவு சமைத்துள்ளனர்
“வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
 இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென
 குறித்து மால எதிர்ப்பை பெறா அமையின்
 குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப்பெய்து
 சுpறில புறப்பட்டன்றோ இலளே”                                                             (புறம் பா.399)
நீர்ப்பாசன முறைகள்
            உழவுத்தொழிலிலுக்கு நீர் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். “நீரின்றி அமையாது உலகு” என நீரின் முக்கியத்துவத்தை வள்ளுவர் குறிப்பிடுகிறார். நிலத்தில் ஈரம் குறையும் போது செயற்கை முறையில் நீர்பாய்ச்சும் முறையே நீர்ப்பாசனம் எனப்படுகிறது. தமிழன் மழைநீர், அருவி நீர், சுனைநீர்;, ஆற்றுநீர் போன்ற இயற்கை நீர்வள ஆதாரங்களைக் கொண்டு உழுவை மேற்கொண்டனர். இயற்கை நீர்நிலை வளம் குன்றிய போது குளம் போன்ற செயற்கை நீர்நிலைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
“நீர் இன்று அமைய யாக்கை எல்லாம்
 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
 உண்டி முதற்றே உணவின் பண்டம்
 உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே”                                      (புறம்.பா.18)
            சங்ககாலத் தமிழர் புன்செய் நில வேளாண்மையை மழையினை ஆதாரமாகக் கொண்டே செய்தனர். அதுகுறித்து மழைவளச் சடங்கு பாடல் ஒன்று பதிவுசெய்துள்ளது.
“பணைத்த பகழிப் போக்கு நினைந்து கானவர்
 அணங்கொடு நிற்பது மலைவான் கொள்கென
 கடவுள் ஓங்குவரை பேண்மார்”                                                     (நற்.பா.165)
மலையில் பொழியும் மழையானது மலை முகடுகளின் வழியாக அருவிகளில் வழிந்து ஓடுகிறது. குறிஞ்சி நிலமக்கள் அருவிநீரைப் பயன்படுத்தி தினை, ஐவன நெல்,கொள்ளு போன்ற பயிர்களை பயிரிட்டனர்.
“அருவி பரப்பின் ஐவனம் வித்தி”                                                   (குறு.பா.100)
            நன்செய் நிலமான மருதநிலப் பகுதிகளில் ஆற்றுநீர்ப்பாசன முறையைப் பய்படுத்தி பயிர் விளைவித்தனர் என்பதை,
“வான் பொய்;ப்பினும் தான் பொய்யா
 மலைத் தலைய கடற்காவிரி
 புனல் பரந்து பொருள் கொழிக்கும்”                                              (பட்டி.பா.5-7)
என்ற பட்டினப்பாலை வரிகள் காட்டுகிறது. சோழநாட்டில் காவிரியானது பாய்ந்து வயல்களை வளப்படுத்துகிறது. சங்க காலத்தில் வேளாண்மை மற்றும் பிற தேவைகளுக்கு குளங்களை வெட்டி அதில் நீரை சேகரித்தனர். தேவையான போது குளத்து நீரைப் பயன்படுத்தினர்.
“குளக்கீழ் விளைந்த கரைக்கொல் வெண்ணெல்”                                    (புறம். 35)
 என்ற வரிகள் தெரிவிக்கன்றது. ஏரைப் பாதுகாக்கும் உழவர்களைப் பாதுகாத்து இதன் மூலம்  நாட்டு மக்களின் பசிக்கொடுமை நீங்கி வாழ வைப்பவர்களைக் கண்டால் பகைவர்களும் அஞ்சுவர் என்பதை,
“பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக்
 குடி புறந்தருகுவை யாயின்நின்
 ஆடி புறந்தருகுவர் அடங்காதோரே”                                            (புறம்.பா.35)
என்று வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் கிள்ளிவளவன் என்னும் சோழமன்னனுக்குக் கூறுகிறார். நீர்ப்பாசன வசதியைப் பெருக்கினால்தான் நிலம் வளப்படும். உழவர்களும் ஊக்கமுடன் உழைத்து உற்பத்தியை பெருக்குவார்கள். ஆதலால் அரசாங்கத்தின் முதற்கடமை நாட்டிலே நல்ல நீர்ப்பாசன வசதிகளை ஏற்படச் செய்வது தான்.
பயிர் பாதுகாப்பு உத்திகள்
            தமிழர்கள் உழவுத்தொழிலில் பல்வேறு  விதமான பயிர் பாதுகாப்பு உத்திகளை மேற்கொண்டுள்ளனர். பயிர்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க நெருப்பிடல், பொறிவைத்தல். வலை விரித்தல், புனம் காத்தல், பொம்மை வைத்தல் போன்ற பலவிதமான உத்திகளைக் iகாயண்டுள்ளனர்.
            மனிதநடமாட்டம் இருக்கும் இடங்களில் விலங்குகள் வருவதில்லை என்பதை உணர்ந்து நெருப்பினை மூட்டி நடமாட்டம் இருப்பதாக ஒரு சூழலை உருவாக்கி விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாத்தனர். பறவைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க வலைவிரித்துப் பிடித்தனர். இரவு நேரங்களில் தினைப்புனம் காவலின் போது புலி, மனிதன் போல உருவ பொம்மைகளை வைத்தும் விலங்;குகளை விரட்டியுள்ளனர் என்பதை முறையே,
“ஐவனம் காவலர் பெய் தீ நந்தின்
 ஓளி திகழ் திருந்து மணிநளி”                                                          (புறம்.172)
“ஓரி முருங்கப் பீலி சாய
 நன்மயில் வலைப்படாங்குயாம்”                                                   (குறு.பா.244)
“கண்முகை வயப்புலி கழங்கு மெய்படூஉ
 புன்புலம் வித்திய புனவர் புணர்த்த
 மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து”                                                  (ஐங்.பா.246)
என்ற வரிகளில் உணர்த்துகின்றன.
அறுவடை
            வேளாண்மை செய்த பயிரை முழுமையாக முற்றியவுடன் அவற்றை அறுத்து சேகரிக்கும் முறைக்கு அறுவடை என்று பெயர். அறுவடை செய்வதே உழவின் அடிப்படை நோக்கமாகும். புன்செய் நிலத்தில் பயிரிடப்பட்ட திணை வரகு, அவரை, எள் போன்ற பயிர்களை அறுவடைக்குரிய பதம் அடைந்தவுடன் அறுவடை செய்தனர். தினைப்புனக் கதிரை அறுவடை செய்ய அதன் மேல் இலைகள் காய்ந்து போவதை அறிகுறியாகக் கொண்டு அறுவடை செய்தனர் என்பதை,
“செங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புலம்
 கொய்பதம் குறுகும் காலை”                                                          (நற்.பா.57)
என்ற நற்றிணைப் பாடல் தெரிவிக்கின்றது. அது போல நன்செய் நிலத்தில் பயிரிடப்பட்ட நெல், கரும்பு முதலிய பயிர்களை அறுவடைக்குரிய பதமடைந்தவுடன் அறுவடை செயதனர் என்பதை,
“காலம் அன்றியும் கரும்பு அறிந்து ஒழியாது”                               (பதி.பா.20)
என்னும் வரிகள் காட்டுகிறது.
பதப்படுத்துதல்
            பண்டைத் தமிழர்கள் வேளாண்மை செய்த விளை பொருட்களை அறுவடை செய்ததோடு அவற்றைப் பதப்படுத்தி பலகாலம் பயன்படுத்தும் வழி காணுதலையும் அவர்கள் முக்கிய பணியாக மேற்கொண்;டனர். அறுவடை செய்த பயிர்களை பதப்படுத்துவதற்கு கடாவிடுதல், தூசு நீக்கல், உலர்த்தல் போன்ற முறைகளைப் பயன்படுத்தினர். அறுவடை செய்த கதிர்களைக் கைகளால் சுழற்றி அடித்தும் எருதுகளால் மிதிக்கச் செய்தும் தானியங்களைப் பிரித்தெடுத்தனர். உழவு மாடுகளைக் கொண்டு போரடித்து நெல்லையும், பதரையும், வைக்கோலையும் தனித்தனியாகப் பிரித்தனர். இதனைக் கடாவிடுதல் என்பர். இது குறித்த பதிவை,
“அருவி ஆம்பல் நெ;யதலோடு அரிந்து
 செறுவினை மகளிர் மலிந்த வெக்கை
 படூஉப்பகடு உதித்த மென் செந்நெல்”                                          (பதி.பா.71)
என்ற வரிகளில் காணலாம். கதிரிலிருந்து பிரிக்கப்பட்ட தானியங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க சூரிய வெப்பத்தில் உலர வைத்தனர். மறு விதைப்பிற்கான தினைகளை வெயிலில் உலர்த்தும் முறையினை,
“செந்தினை உணங்கள் தொகுக்கும்
 இன்கல் யாணத்தம் உறைவு இன் ஊரே”                                                (நற்.பா.344)
என்று வரிகளில் சுட்டுகிறது.
சேமித்தல்
            தமிழர்கள் மிகுதியான தானியங்களை வறட்சி போன்ற காலங்களில் பயன்படுத்த சேமிப்பு முறையினை மேற்கொண்டனர். தானியங்களைப் பாதுகாக்க குதிரைப் பயன்படுத்தினர். குதிரில் தானியங்களைப் பாதுகாத்து வந்தமையை,
“நெடுநகர் வீழ்ந்த கரி குதிர்ப்பள்ளி”                                              (மது.169)
என்னும் மதுரைக் காஞ்சி பாடல்வரி புலப்படுத்துவதை அறிய முடிகிறது.
பயிர் சுழற்சி முறை
            விளை நிலங்களில் தானியங்களையும் பயிர்களையும் மாற்றி மாற்றிப் பயிரிடும் முறைக்கு பயிர்சுழற்சி முறை எள்று பெயர். ஒரு குறிப்பிட்ட நிலத்தில் ஒரே வகையான பயிரை மீண்டும் மீண்டும் பயிர்செய்வதால் மண்ணிலுள்ள கனிமச்சத்து குறைகிறது. எனவே பண்டையத் தமிழர்கள் பயிர்சுழற்சி முறையின் பயனை அறிந்து அறுவடை செய்த வயல்களில் மாற்று பயிர்களை பயிரிட்டனர். மறுபயிரிடுவதற்கு நிலத்தினை உழுது பயன்படுதிதி முறையை,
“அரிகால் மாறி அம்பண் அகல்வயல்
 மறுகால் உழுத ஈரச் செறுவின்
 வித்தொடு சென்ற வட்டி பற்பல”                                                  (நற்.210)
என்ற பாடல் வரிகள் எடுத்தியம்புகிறது.
தொகுப்புரை
        பண்டையத் தமிழர் விளைநிலங்களின் அடிப்படையில் தினையை பயிரிட்டனர். நிலங்களைக் கீறி அல்லது உழுது விதைகளை விதைத்தால் மட்டுமே தானியங்கள் வளரும் என்பதை அறிந்தனர். நிலங்களை உழுவதற்கு விலங்குகளையும் கலப்பினையும் பயன்படுத்தினர் என்பதை அறிய முடிகிறது.
        நிலங்களை உழுதலில் ஆழ உழுதல், அகல உழுதல். புலசால் உழுதல் போன்ற உழுதல் முறைகளைக் கையாண்டனர். உழுவதற்கு நிலத்திற்கேற்ற கருவிகளை வடிவமைத்துப் பயன்படுத்தினர் என்பதை அறிய முடிகிறது.
        வேளாண்மைக்கு இன்றியமையாதது நீராகும். இயற்கை அளிக்கும் மழை, அருவி, சுனை, ஆற்று நீரினை வேளாண்மைக்கு பயன்படுத்தினர். நீர் வற்றிய காலங்களில் குளம், குட்டை போன்ற செயற்கை நீர்நிலைகளை பயன்படுத்தி வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர்.
        வேளாண்மை செய்யப்பட்ட பயிர்களைக் காக்க நெருப்பிடல், தினைப்புனம் காத்தல், வலைவிரித்தல்,பொம்மை அமைத்தல் போன்ற உத்திகளை மேற்கொண்டுள்ளனர்.
        விளைந்த பயிர்களை அறுவடை செய்வதற்கு உரிய காலத்தைப் பயன்படுத்தினர். அறுவடை செய்த பயிரிலுள்ள தூசிகளை கடாவிடுதல். உலர்;த்தல், தூசி நீக்கல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி, குதிர் என்ற கலயங்களில் சேமித்து அவற்றை மறுவருட வித்தாகவும் உணவாகவும் பயன்படுத்தி வந்தமையை அறிய முடிகிறது.
        தமிழர்கள் பயிரிடுதல் முறையை ஒரே மாதிரியாக கையாளாமல் பயிர்சுழற்சி முறையில் கலப்பு பயிரிடுதல் முறையை பின்பற்றி விளைச்சலை அதிகரித்துள்ளனர்.
        பண்டைத் தமிழன் உழவினையும், உழுவுக்கு துணை நின்றவைகளையும் தன் உயிரைவிட மேலாக நேசித்து வாழ்ந்துள்ளனர். உழவை நேசித்த உழவனை மன்னர்களும் ஊக்கவித்துள்ளனர்.
        உலகிலுள்ள மக்களுக்கெல்லாம் உணவளித்து வாழ்ந்த உழவனின் இன்றைய  நிலையானது இயற்கைக்கும் அதிகார வர்க்கத்திற்குமிடையே பல இடர்ப்பாடுகளை சந்திக்க நேரிடுகிறது. பண்டையத் தமிழன் உயிராய் நேசித்த உழவைக் கற்று உழவின் நாயகனுக்கு எதிர்கால சந்ததியினராகிய நாம் என்றென்றும் தோள் கொடுப்போம் என்பதை உறுதி கொள்வோம்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
 உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்”

துணைநின்றவை
1.         புலவர் கா.கோவிந்தன், ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசிததாந்த நூற்பதிப்புக் கழகம், 522,டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை,சென்னை 600018. புதிப்பு 1999. ப.117.
2.         மறைமலையடிகள், வேளாண் நாகரிகம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசிததாந்த நூற்பதிப்புக் கழகம், 522,டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை,சென்னை 600018. புதிப்பு 1923 ப.13.
3.         க.வெள்ளைவாரனார்,சஙககாலத் தமிழ்மக்கள் (கட்டுரைகள்), நாம் தமிழர் பதிப்பகம், 6-16,தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600005. பதிப்பு2015. ப.93.
4.         ச.வே.சுப்பிரமணியன், தொல்காப்பியம் இளம்பூரணர் உரை (எழுத்து- சொல் -பொருள்), மரபியல், மெய்யப்பன் பதிப்பகம்,53,புதுத்தெரு, சிதம்பரம் - 605001. பதிப்பு 2009. நூ.1565.
5.         பரிமேலழகர் (உ.ஆ), திருக்குறள், கங்கை புத்தகநிலையம், 23 தீனதயாளு தெரு, பாண்டி பஜார்,பார்த்தசாரதி புரம், தி.நகர்,சென்னை -600017. பதினொன்றாம் பதிப்பு 2017. கு.எ.1032.
6.         மேலது., கு.எ.1038



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக