மார்ச் 05, 2020

யாவையும் திருக்குறள் - புதுக்கவிதை

யாவையும் திருக்குறள் - புதுக்கவிதை
ஐயன் வள்ளுவன் வடித்துத் தீட்டிய குறளை
அடியேன் பருகுகையில்
சுவைக்கின்றன,
நாவை விடுத்து
சிந்தையில் ..

நீக்கமற நின்று
அழகுற மிளிர்கிறது தரணியிலே
இணையில்லாக் கருத்துக்களை
ஓதும் அந்த மறை..

சித்துவித்தை கற்றவன்போலும் வள்ளுவன்
இவன் செப்புகின்ற அளவுகோல்-மிகத்
துல்லியமாக இருக்கின்றது

நெய்தெடுத்துச் சேர்த்தெடுத்துள்ளான் பொய்யாமொழிப் புலவன்
133 அதிகாரம்கொண்ட 1330 குறளையும்..

வெளிநாட்டவரும்கூட
கவ்வி எடுத்துக்கொள்கின்றனர்
திருக்குறளை...
நன்மையைக் கால்கொண்டிருக்கும்
வித்தென விளைவதால்..

தின்றுச்செரித்து,
ஏப்பம் விட்டவன் போலும்
வாழ்க்கைப் பாடங்களை! 
குறள் ஒவ்வொன்றும்
முக்காலமும் ஏற்கின்ற
எதார்த்த உண்மை.

மெய்சிலிர்க்கவைக்கும்
வியக்கத்தக்க செய்திகள்
ஈரடி எழுவார்த்தைகளில்

முழு அர்த்தங்களை
வேர்காணமுடியா ஒரு முடிவிலி
குறளின் விளக்கம்

உற்றார் உறவினரிடத்தில் உயர்வு
ஓங்கிய ஒழுக்கத்துடன் ஆராயாத ஆண்மை
அத்தனைக்கும் கடவுச்சொல்
திருக்குறளே..

பொக்குகின்றது அகத்தை
காதலைப் புகட்டும் காட்டாறாய்.
உடைத்தெடுக்கிறது ஊடலை
காமப் பசியினைத் தூண்டும் மாங்கனியாய்.

அளிக்கதகும் அகிலத்தையும்
வெகுமானம் வேண்டுமென கேட்கையில்
ஐயன் எழுதிய திருக்குறளுக்கு..

செவிட்டில் அறையப்பட்டு
திருத்தம் பெறாதவனும்
தெளிந்துத் தேறிவிடுவான்
அறிவுரைத் திகட்டும்
இப்புலவனின் ஆக்கத்தைப் பார்த்து

கதைக்க கதைக்க
காலம் போதவில்லை
இந்நூலைப்பற்றி

கட்டுப்பாடில்லாப் படகு போல்
கரை திரும்ப மறுக்கிறது

நீ.. கொண்டோடிவிட்ட
காதலர்கள் அதிகம்.
என்னையும் உட்பட்டு...

முகவரி:
க.சரத்குமார்,
இளங்கலைத் தமிழிலக்கியம் (மூன்றாமாண்டு),
திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு
கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக