லண்டன் என்ற பயண இலக்கிய நூல் விமர்சனம் : முனைவர் ச.தமிழரசன்.
நூல் பெயர்: லண்டன்
வகை: பயண இலக்கியம்
ஆசிரியர்: சமஸ்
வெளியான ஆண்டு: ஜனவரி 2022.
பக்கங்கள்: 128.
வெளியீடு: அருஞ்சொல் வெளியீடு, சைதாப்பேட்டை, சென்னை-15.
இது ஒரு பயணக்கட்டுரை என்று தோன்றவில்லை மாறாக நல்ல படிப்பினை என்றே தோன்றுகிறது.
உற்சாகம் தரும் திட்டமும், குளுகுளு பயண அனுபவமும், விதவிதமான உணவு பதார்த்தங்களும் சுவாரஸ்யம் ஊட்டும் சம்பவங்களும் நிறைந்திருக்கும் என்று நான் வாசிக்கக் கையிலெடுத்த இந்த நூல். இடை வைக்காமல் ஒரே படிப்பில் வாசிக்கப்பட்டது. அத்தனைத் தகவல்கள். வியப்பூட்டும் செய்திகள் என ஆர்வம் பெருகியது.
சமஸ் என்கிற எழுத்தாளரை தி இந்து தமிழ் நாளிதழ் நடுப்பக்கக் கட்டுரை வழியாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் ஒரு பயண இலக்கிய வழிகாட்டியாக இப்போது அறிகிறேன். அவருடைய வாசிப்பை எப்போதும் நான் நேசிப்பேன். சமூகக் கவலையும் அதை சுட்டிக்காட்டும் எழுத்துக்களையும்
இவரது பேனா மையாக நிரப்பி வைத்திருக்கும். அவற்றில் ஒன்று, "அறிவாளிகளின் மௌனம் ஆபத்தானது" என்ற கருத்துடைய கட்டுரையாகும். அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விருந்தினராக இலண்டனுக்குச் சென்ற திரு. சமஸ் அவர்கள் பத்திரிக்கையாளர் பிரதிநிதியாகக் கலந்துகொண்டிருக்கிறார். உயர் அதிகாரிகளைச் சந்தித்ததோடு இல்லாமல் இலண்டன் மாநகரத்தின் சாதாரண மனிதர்களின் வழியாக அந்த நாட்டின் மேன்மைகளை உண்மைகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இலண்டன் நகரை குறுக்கும் நெடுக்குமாகக் கருத்துகளின் வழியே அளந்து, அதன் மக்கள் நலக்கொள்கைகளைச் சேகரித்து வந்திருக்கிறார்.
சமஸ் தன் பயண அனுபவ நூலைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். "ஒரு மக்கள் நல அரசு எப்படியானதாக அமைய வேண்டும் என்ற வரையறையை உருவாக்க இந்த நூல் தலைப்படுகிறது" ஆட்சியாளர்கள் தொடங்கி மாணவர்கள் வரை வாசிக்க வேண்டிய நூல் எனப் பின் அட்டையில் குறிப்பிட்டுள்ளார். நூலில் தன் பயண அனுபவங்களை 15 பகுதிகளாகப் பிரித்து எழுதியுள்ளார்.
பிரிட்டன் நகரத் தூய்மையைப் பற்றி ஓரிடத்தில் சொல்லும்போது, சிட்டி ட்ரீ என்பதைச் சொல்கிறார். அந்த சிட்டி ட்ரீ என்ற ஒரு வகை மரம் பார்க்கப் பச்சை பசேல் என்று இருக்கிறது. அதன் ஈரப்பசை காற்றில் கலந்து வரும் மாசுகளையும் கெடுதல் செய்யும் கிருமிகளையும் ஈர்த்துக்கொள்ளும். இதுவே அந்நகரின் தூய்மைக்குக் காரணம் இந்த முதல் செய்தியே வாசிப்பை ஈர்க்கிறது.
இலண்டன் மாநகரத்தில் செத்து விட்டதாகக் கருதப்பட்ட தேம்ஸ் என்ற நதி பின்னர் உயிரூட்டப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டு நகரத்தின் பிரதானமான நதியாக மாற்றப்பட்ட கதையைக் குறிப்பிடுகிறார். அந்த நதியில் அடித்துக் கொண்டு வரப்பட்ட பல பொருட்களையும், வீசப்பட்ட கருவிகளையும், கைவிடப்பட்ட தொலைத்த பொருட்களையும் அந்த நதியைத் தூர்வாரும் போது எடுத்து வைத்து அருங்காட்சியகமாக வைத்திருக்கிறார்கள். இந்த நதி சுமார் 150 வருடங்கள் மாசுபட்டுக் கிடந்ததாகவும், பின்னர் அது மேம்படுத்தப்பட்டு இலண்டன் நகரைப் போலவே அழகாகவும் பொலிவோடும் மாற்றப்பட்ட கதையைச் சொல்லும்போதும் ஆச்சரியமாக உள்ளது. நம் நாட்டில் எத்தனை நதிகளைத் தொலைத்து இருக்கிறோம் என்கிற கவலை வாசிக்கும்போது வந்துபோகிறது.
இந்த பயண அனுபவத்தின் ஊடாகப் பல்வேறு வரலாற்றுத் தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். படித்தால் வியப்பாக இருக்கிறது. உதாரணமாக, நிலத்துக்கு அடியில் ஓடும் மெட்ரோ ரயில் திட்டம் 150 ஆண்டுகளுக்கு முன்னரே இலண்டன் மாநகரத்தில் மாநகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்கிற செய்திதான் அது. இன்னும் பரவலாக அறியப்படாத இந்த மெட்ரோ, நம்ம ஊருக்கெல்லாம் என்றுதான் வருமோ என இன்றும் சொல்பவர்கள் உண்டு.
ஒரு அரசு எப்படி நோயற்ற மனிதர்களை ஊக்குவிக்கிறது என்பதற்கு இந்தச் செய்தியைக் குறிப்பிடலாம். "அந்நாட்டில் நடப்பதை அரசு ஊக்குவிக்கிறது நடப்பதை மக்கள் வழக்கமாக்கிக் கொண்டால் அடுத்து வருகிற 25 ஆண்டுகளில் 85000 பேருக்கு இடுப்பு எலும்பு முறிவு வராமல் இருக்கும். 18800 பேருக்கு மன அழுத்த நோய்கள் வராமல் தடுத்து விடலாம்" என்று அவர்கள் மதிப்பிடுவதாக தன் கட்டுரையில் சமஸ் குறிப்பிடுகிறார்.
நடை ஒரு தேசத்தின் ஆரோக்கியத்தை வடிவமைப்பதில் எத்தனைப் பங்கு வகிக்கிறது என்பதைக் கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது.
இலண்டன் வெறும் கட்டுப்பாடுகளை மட்டும் கொண்டு வருவதில்லை, மக்களிடம் பிரச்சினைகளை விளக்குகிறது என்று அங்குள்ள ஜான் என்பவர் கூறிய செய்தியைச் சுட்டிக்காட்டுகிறார்.
இலண்டன் உள்ள போக்குவரத்தில் இருக்கக்கூடிய நேர்த்தியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கக்கூடிய கட்டுப்பாடுகளையும் மக்கள் எப்படியெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். அதோடு நம் நாட்டில் இருக்கக்கூடிய அகற்றப்படாத சில அவலங்களையும் நினைவூட்டுகிறார். நம் தலைநகரத்தில் நுழைந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு ரயிலில் சென்றால் பாதையின் இரு மருங்கிலும் மலம் கழிக்க மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். கையில் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் என்று அவர் கூறுவது இன்றைக்கும் நாம் காணும் காட்சி தான்.
சுவாரஸ்யத் தகவல்களும் பல உண்டு. 1818 இலண்டனில் தான் முதல் சைக்கிள் ஓடியது. சைக்கிள் ஓட்டுவது ஒன்றும் அந்தஸ்து குறைவில்லை என்ற எண்ணம் மக்களிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இலண்டனில் ஜனநாயகம் எந்த அளவிற்குக் கொடிகட்டிப் பறக்கிறது என்பதைப் பக்கம் எண் 57 இல் குறிப்பிடுகிறார். பாகிஸ்தானில் இருந்து பிழைப்புக்காக வந்த பஸ் ஓட்டுநர் ஒருவரின் மகன் இன்று லண்டன் மேயர் ஆகியிருப்பது பிரிட்டிஷாரின் ஜனநாயகத்தைக் கண்ணியப்படுத்தி இருக்கிறது என்கிறார்.
அதிகாரிகளையும் கட்டடங்களையும் பார்ப்பதோடு இல்லாமல் அங்குள்ள சாமானிய மக்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதிலேயே தன்னுடைய பயணம் அர்த்தப்பட்டது என்று குறிப்பிடுகிறார். இலண்டனில் தொழிலின் பெயரால் யாரும் யாரையும் அவமானப்படுத்தி விட முடியாது. உடலுழைப்புத் தொழிலாளர்களை மரியாதையோடு நடத்துகிறார்கள். கேட்கவே மனம் பூரிப்பு அடைகிறது.
நம் சமகால சூழலை ஒப்பிடும் பொழுது சில தொழில்களைக் குறைத்து மதிப்பிடுவதும், சில தொழில்களை உயர்வாக வைத்து மதிப்பளிப்பதும் இன்றும் வாடிக்கையாகிவிட்டது. தொழில்பேதம் மக்களின் மனோபாவத்தில் ஊறிவிட்ட ஒன்றாக மாறிவிட்டது.
ஒரு மணி நேரத்திற்குக் குறைந்தபட்ச ஊதியம் என்று அரசு நிர்ணயித்திருக்கும் தொகை குறைவில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும். ஊதியத்தைக் குறைத்தால் அந்த நாட்டில் குற்றம். ஏனென்றால் அந்த நாட்டின் சட்டம் ஏழை பணக்காரர் வேறுபாடு உணர்வைக் குறைப்பதில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது என்ற செய்தியை சமஸ் அவர்கள் பதிவு செய்துள்ளார்.
தனிமனிதரின் ஊதியம் உயராவிட்டால் மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்து சமூக அமைதி கெடும் என்ற எண்ணம் வளர்ந்த நாடுகள் முழுவதுமே பரவுகிறது என்று குறிப்பிடுகிறார். அனைவரிடம் சென்று சேரும் பணமானது பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. மிச்சப்படுத்தி அவர்கள் மேற்கொள்ளும் சேமிப்பும் கூட அரசு சார் வங்கிகளில் சேமிப்பு பத்திரங்கள், வீடுகளில் முதலீடு செய்யப்படுவதால் சமூகத்திற்குத் திரும்புகிறது என்று சொல்லி, பணச் சுழற்சி எப்படி நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதைத் தன்னுடைய பயணக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
இன்னொரு தகவல் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. இலண்டனில் ஒருவரை ஊதியத்தை வைத்து ஏமாற்றினால் அது குற்றம். அதற்கு ஈடாக அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்கள் சம்பளம் எவ்வளவோ, அதுபோல 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என்கிற செய்திதான் அது. இங்கு நம் நாட்டில் கனவிலும் கூட அப்படி நடக்குமா? சிந்திக்கவே மனம் மலைக்கிறது.
அந்த நாட்டில் கல்வி அரசின் பொறுப்பு. தொடக்கக் கல்வி கட்டணம் கூடாது .அது இலவசமாகத் தரப்பட வேண்டும் என்று எண்ணி 1918இல் சட்டம் இயற்றியவர்கள் அவர்கள். இன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர் அரசுப் பள்ளிகளில் படித்து விட்டு வந்தவர்கள் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. அப்படி என்றால் தரம் நன்றாக இருக்கிறது என்றுதானே அர்த்தம் என்று ஒரு வினா எழுப்பி சிந்திக்கத் தூண்டுகிறார்.
டைம்ஸ் உயர் கல்வி நிறுவன தரவரிசையில் உலக பல்கலைக்கழகங்களில் இன்று முதல் இடத்தில் இருக்கிறது ஆக்ஸ்போர்ட்.
அங்குள்ள மாணவர்களுக்கும் அவர் தம் தாய் தந்தையருக்கும் இடையே உள்ள அந்த வாழ்க்கை முறையைக் குறிப்பிடுகிறார். அங்கு கல்லூரிகளில் படிக்கும் வயது வந்துவிட்டால் பெரும்பாலான பிள்ளைகள் வீடுகளை விட்டு வெளியேறி விடுவார்கள் விடுதியில் ஒரு தனி வீடு எடுத்துத் தங்குவார்கள் மேற்படிப்புக்கான செலவும் பொறுப்பும் பெரும்பாலும் மாணவர்கள் பொறுப்பாகிவிடும்.
அதாவது தற்சார்போடு சுயமாக வாழ்வது எவ்வாறு என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது. பிள்ளைகள் தாங்களே தங்களுக்கான செலவைப் பார்த்துக் கொள்ளவும் மாறாக பிள்ளைகள் மீண்டும் வீடு திரும்பினால் பெற்றோர்களின் வாழ்க்கைத் தரம் குறையும். ஒருவேளை பிள்ளைகள் திரும்ப வீட்டுக்கு வந்தால் கூட விருந்தாளிகளைப் போல அவர்களை நடத்துங்கள் என்று அந்த நாட்டு அரசு சொல்வதை சமஸ் சுட்டிக்காட்டுகிறார். உண்மையில் இதைப் படித்ததும் நம் குடும்ப சூழல் எங்கே... அவர்கள் குடும்பச் சூழல் எங்கே... என்று ஒரு கணம் தலை சுற்றியது.
ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து விலகி மாணவர்கள் இத்தகைய புகழ்பெற்ற தலைவர்களாக இருக்கிறார்கள் என்பதை அங்கு கொடுக்கப்படும் தரம் மிகுந்த கல்வியை வைத்துதான் அளவிட முடியும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சர்வதேசத் தலைவர்கள் குறைந்தது 30 பேர் படித்தவர்கள் என்று ஒரு செய்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஐந்து பிரதமர்கள் இங்கு தான் படித்திருக்கிறார்கள். நோபல் பரிசு வென்றவர்கள் 69 பேர் இங்கே மாணவர்களாக ஆசிரியர்களாக வருகை தரக் கூடிய பேராசிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
விளையாட்டுத் துறையை எடுத்துக் கொண்டால் 160 ஒலிம்பிக் பதக்கங்களோடு தொடர்புடைய இடம் இது என்று சமஸ் பட்டியல் இடும்போது நமக்குச் சற்றே வியப்பும் பொறாமையும் வரத்தான் செய்கிறது.
கல்வித்துறையில் நாம் இன்னும் எவ்வளவு வளர வேண்டும் என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டி நிற்கின்றன. கல்வி என்பது தனி மனிதனுடைய வாழ்க்கையை மட்டுமல்ல. ஒரு நாட்டின் வரலாற்றையும் தீர்மானிக்கிறது.
பிரிட்டனின் பெருமையாக அவர் குறிப்பிட்டிருப்பது (NHS)நேஷனல் ஹெல்த் சர்வீஸ் தேசிய சுகாதாரச் சேவை அதனுடைய தன்மைகளை மிக விரிவாகப் பேசியுள்ளார். அதாவது அனைவருக்கும் ஒரே மாதிரியான கட்டணமற்ற உயர் தரமான சிகிச்சை. அவசரச் சிகிச்சைக்கு வெளிநாட்டவர்கள் பயன்படுத்தும் இலண்டன் ஏர் ஆம்புலன்ஸ் போன்றவை.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரிட்டனில் உள்ள சமூகம் சிந்தனை மாற்றம் பெற்று ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறது நீங்கள் உலகை ஆண்டு எங்களுக்கு என்ன பயன் நாடு முழுக்க ஒரே மாதிரியான சிகிச்சை உயர்தர சிகிச்சை பெற ஏழைகளுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதுதான். பிரிட்டனில் இருக்கக்கூடிய ஆறரை கோடி மக்களுக்கும் எல்லா சிகிச்சையும் இலவசம் தான் இந்தச் செய்தி, நம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டு சேர்க்கிறது.
அரசு மக்களுக்கு ஏன் வீடு கட்டித்தர வேண்டும் என்கிற ஒரு வினாவோடு ஒரு கட்டுரை. பிரிட்டனில் அரசு ஏழைகளாகக் கருதப்படுகிற அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறது அவருடைய வாழ்க்கைத் தரத்தின் மீது அக்கறை கொண்டிருக்கிறது. அரசு உழைக்கும் தொழிலாளர்களை மதிக்கிறது. அவர்களை வீடற்றவர்களாக நிறுத்துவது வெட்கக்கேடு என்று என்ற எண்ணம் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் இருக்கிறது என்று தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார் சமஸ்.
மேலும் சில உரையாடல்கள் என்கிற பகுதி, நூலின் பிற்பகுதியில் தரப்பட்டுள்ளது. ஈழ நாட்டிலிருந்து பிரிட்டனுக்கு வந்தவரை பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர் சில செய்திகளைப் பகிர்கிறார். அதோடு நம் தேசத்தில் இருக்கக்கூடிய சாதிய உயர்வு தாழ்வு கட்டுப்பாடோடு பிரிட்டனுக்கு வரக்கூடிய தமிழர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும், அங்கு வந்தும் அவர்களுடைய மாறாத மன நிலையையும் குறிப்பிடுகிறார்.
நீங்கள் யார் என்று கேட்டுப் பழகும் அவலநிலை தமிழர்களிடையே இருக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.(அதாவது சாதியை அறிந்துகொள்ளும் முயற்சி) . அங்கு "நான் பிரிட்டிஷ்" என்று பிள்ளைகள் சொல்வதைத் தமிழர்கள் பெருமையாக வெளியே சொல்லிக் கொள்கிறார்கள்.
முதலில் மனிதனை மனிதன் மதிக்கக் கற்கவேண்டும். வெள்ளைக்கார சமூகத்தில் நான் பார்த்த முதல் விடயம் மனித மதிப்பு நல்ல கல்வி நல்ல சுகாதாரம் ஆகியவற்றை கட்டணம் இல்லாமல் அரசு கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. இந்தச் செய்தியைப் படிக்கும் போது இலண்டனில் இருக்கக்கூடிய சுதந்திரமும் ஜனநாயகத் தன்மையும் மனிதரை மனிதர் நடத்தும் உயர்ந்த பண்பாடும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தரக்கூடிய கொள்கைகளும் உள்ளபடியே நம்மைப் பிரமிக்க வைக்கிறது.
சமஸ் அவர்கள் ஒருவரைப் பேட்டி காண்கிறார். அவர் பெயர் விக்னேஷ் கார்த்திக். இலண்டனில் ஜனநாயகத்தன்மை தனக்குப் பிடித்திருக்கிறது என்று அவர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். அவரிடத்தில் பல்வேறு வினாக்களை எழுப்பும் சமஸ் ஒரு கேள்வி எழுப்புகிறார். சமூக அறிவியல் மாணவராக இந்தியாவின் இன்றைய பெரிய பலவீனமாக எதைப் பார்க்கிறீர்கள்? என்று,
அதற்கு அவரின் பதில்: சமூகம் அரசியல் விழிப்புணர்வு நீக்கம் பெற்ற பெரும்பான்மை தனிநபர்கள் தான். சமூக யதார்த்தங்களையும் அரசியல் போக்கையும் தங்களுடைய குழந்தைகள் தெரிந்து கொள்ளக் கூடாது என்று நினைக்கும் பெற்றோர்கள். அப்படி இருக்கக் கூடிய சமூகத்தில் ஜனநாயக விழுமியங்கள் அழிந்துபோகும். நல்லாட்சி என்ற போர்வையில் மனிதாபிமானமற்ற செயல்கள் மேலோங்கும் என்றும் தன் நண்பருடன் கலந்துரையாடியதைக் குறிப்பிடுகிறார் சமஸ்.
சமஸ் அவர்களின் இந்த அனுபவ நூல். அவருடைய பயண அனுபவத்தைச் சொல்வதோடு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் எத்தனை இருக்கின்றன என்பதையும் நினைவுபடுத்துகிறது.
ஒப்பீடு, வளர்ச்சிக்கு உதவுமானால், ஒரு நாடு மற்ற நாட்டிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன். மாற்றமும் ஏற்றமும் வேண்டுங்கால் அது நாட்டிடம் இருந்து அல்ல. நம்மிடமிருந்தே துவங்க வேண்டும். "ஒரு கை ஓசை தராது" என்பது எத்தனை அர்த்தங்கள் கொண்டது பாரீர். இது பயண இலக்கிய நூல் மட்டுமல்ல, நாம் பயணிக்க வேண்டிய தூரத்தைக் காட்டும் நூல்.
_
மதுரை செல்லூர் உபாத்தியாயர்
முனைவர் ச.தமிழரசன்.
30.03.2022.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக