பிப்ரவரி 19, 2026

கடவுளுக்குச் சமமானவர்களா? - நூல் விமர்சனம்

கடவுளுக்குச் சமமானவர்களா? - நூல் விமர்சனம்
சமீபத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்றில் நான் பங்கேற்றேன். பல்வேறு நூல்களைக்கு மத்தியில் கடவுளுக்குச் சமமானவர்களா? என்ற வித்தியாசமான தலைப்பிட்ட நூலைப் பார்த்ததும்,  வாங்கி அவசியம் வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானது. வாங்கி ஒரே நாளில் வாசித்து முடித்தேன். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் டிசம்பர் 2025 ஆம் ஆண்டு இந்த நூலை வெளியிட்டு இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சார்ந்த எழுத்தாளர் மு.தமிழ்ச்செல்வன் இந்த நூலை எழுதியிருக்கிறார். வாசிக்க வாசிக்க கட்டுரை தோறும் புள்ளி விவரங்கள் மற்றும் மக்களிடையே சென்று சேகரித்த கள ஆய்வு அனுபவங்கள் என்று உண்மைத் தகவல்கள் தொகுக்கப்பட்டிருந்தன. வாசிப்பவர்களைச் சிந்திக்கத் தூண்டுகிற நூல் இது.  தமிழகத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் வாழ்வியல் சூழல் எத்தன்மையில் உள்ளது என்பதையும் பணிச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எப்படி அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதையும் கள அனுபவத்தோடு நேர்காணல் செய்து எழுதியிருந்தார். தினசரி வாழ்க்கை எப்படி அவர்களுக்கு ஒரு நரகமாக இருக்கிறது என்பதைப் பற்றி அவர் தரவுகளோடு சொல்லச் சொல்ல இதயம் கூனிக் குருகியது. இந்த உலகம் மனிதநேயமற்று நரகமாக மாறியிருப்பதை உணரமுடிந்தது. சாதியில் தனக்கு மேலே ஒருவன் இருக்கிறான் என்பதும், தனக்குக் கீழே ஒருவன் இருக்கிறான் என்பதும் ஒருவித மனநோய் என்பார் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர். மனிதச்சமூகம் பணியாளர்களுள் ஒருதரப்பினரை மட்டும் ஏன் அவமரியாதையாக நடத்துகிறது என்கிற கேள்வியை ஒவ்வொருவருக்குள்ளும் தருகிறது இந்த நூல்.

 

மகாகவி பாரதி குறிப்பிடுவார் “ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை ஜாதியில் இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே, வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே” நூலை வாசிக்கும் போது இவ்வரிகள்  மனதில் நிழலாடின. நம் நாட்டில்தான் குப்பையை உருவாக்குபவர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும், குப்பையைச் சேகரித்து உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பவர்களைத் தாழ்ந்தவர்களாவும் கருதும் இழிநிலை மனப்பாங்கில் மக்கள் இருக்கிறார்கள். மெய்யாகச் சிந்தித்துப் பார்த்தால், உண்மையில் குப்பைக்காரர்கள் யார்? போடுபவர்களா? கொட்டுபவர்களா? சிந்தித்தோமா நாம். தூய்மைக் காவலர்களாகிய அவர்களும் மதிப்புக்கும் மரியாதைக்கும்உரிய மனிதர்கள்தான் சக மனிதருக்கு இருக்கக்கூடிய அறிவு, மானம், சுயமரியாதை உள்ளிட்ட அத்தனையும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் உண்டு என்பதை இந்தச் சமூகம் எப்போது உணரப்போகிறது என்று முகத்தில் அறைந்தார் போல் இந்த நூலிலே கூறி இருக்கிறார் நூலாசிரியர். சுகாதாரப் பணியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசு உரிமைகள் சலுகைகள் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை என்பதை ஒவ்வொரு கட்டுரையிலும் தெளிவுபடுத்தி இருக்கிறார். தூய்மைக் காவலர்களின் வாழ்க்கையைப் பொருத்தமட்டில், ஆட்சிகள் மாறுகின்றன ஆனால் காட்சிகள் மாறவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார்.  மதுரை விருதுநகர் திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த சுகாதாரப் பணியாளர்களை நேரடியாகக் கள ஆய்வு செய்து அவர்கள் பணித்தளத்தில் எதிர்கொள்ளும் சவால்களை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தி இருப்பது இந்த நூலாசிரியரின் பெரிய முயற்சியையும் உழைப்பையும் காட்டுகிறது. பணியிடங்களில் அவர்கள் எதிர்கொண்ட மிக அருவருக்கத்தக்க அக்கிரமமான சம்பவங்களும், பிற மனிதர்களின் மோசமான நடத்தைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவை இங்கே குறிப்பிடுவதற்குக் கூசுபவை. புத்தகத்தை வாங்கி வாசித்து பாருங்கள் எப்படி எல்லாம்  சக மனிதர்கள் சக மனிதர்களிடம் விலங்குகளைப் போல நடந்து கொள்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியும். பேரிடர் காலங்கள், கொரோனா போன்ற வாழ்க்கை சவாலான காலங்கள் உள்ளிட்ட காலங்களில் மட்டும் சுகாதாரப் பணியாளர்கள் தெய்வங்களைப் போல போற்றப்படுவதும், அவர்களின் பாதங்கள் கழுவி விடப்படுவதும், சுகாதாரப் பணியாளர்களோடு அமர்ந்து சாப்பிடுவதையே பெருமையாகக் கருதி அதைச் செய்தியாக்குவதும் வாடிக்கையாகி விட்டன என்பதையும், போலி அக்கறைவாதிகளால் எப்படிச் சடங்குகள் நடத்தப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் இந்நூலாசிரியர். கடவுளுக்குச் சமமானவர்கள் தானே? அப்படியானால் இந்தச் சுகாதாரப் பணியை நீங்களே செய்யலாமே? என்று கேள்வி எழுப்புகிறார் . இது இந்தப் பொதுச் சமூகத்தின் முன் வைக்கும் மிக ஆணித்தரமான கேள்வி. அதே நேரத்தில் சில ஊர்களில், அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாது பொதுச் சமூகத்தினர் மனிதநேயத்தோடும் மாண்போடும் சரிநிகர் சமானமாக சுகாரதாப் பணியாளர்களை உண்மையில் எவ்வாறு போற்றி மதிக்கிறார்கள் என்பதையும் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். இது வளர்ந்துவரும் நாகரிகமுள்ள பண்பட்ட நடத்தையுள்ள சிறந்த மனிதர்களை நமக்குக் காட்டுகிறது.
புத்தகத்தை வாங்கி கையில் ஏந்தியதும் தலைப்பைப் பார்த்ததும் அந்த தலைப்பிற்கு நேர் எதிரான சிந்தனை மனதில் தோன்றியது. ஆம் அவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் தானே என்று அந்தநொடியில் தோன்றினாலும், நூல் முழுமைக்கும் வாசிக்கும் பொழுது தான் இந்த ஆசிரியர் நம்மிடம் வைக்கும் கேள்வி புரிகிறது. இந்தச் சமூகத்தின் சுயநலமுள்ள நியாயங்களின் மீது பகடி செய்திருக்கிறார் என்பது படிக்கப் படிக்க புலப்படும். சுகாதாரப் பணிக்காக ஒடுக்கப்பட்ட மக்களையே பயன்படுத்தக்கூடிய அரசுகள் பிற பிரிவினருக்கும் இந்த வேலையை பகிர்ந்து அளித்து உரிய இட ஒதுக்கீட்டு முறையில் சுகாதாரப் பணியைப் பகிர்ந்து அளித்தால் என்ன என்பது இந்நூலாசிரியர் கேட்கும் கேள்வி. இந்த நூற்றாண்டின் விஞ்ஞானத்தில் அதிநவீன வளர்ச்சியை மனிதர்கள் எட்டி விட்டாலும், இன்னும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களை வைத்திருக்கிறீர்களே? என்று ஆதிக்கம் நிறைந்த நம் சமூகத்தை பார்த்து வினா எழுப்புகிறார். அனைத்துச் சமூகத்தினருக்கும் இப்பணி இடஒதுக்கீட்டின்படி வழங்கப்பட்டால் இன்னும் சில ஆண்டுகளில் அதிநவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டுவிடும் என்பதை உரக்கப் பேசியுள்ளார். பின்பு ஏன் இந்த அலட்சியம்? என்ற வினா எழுகிறது. ஏனென்றால் இங்கு சுகாதாரப்பணி சாதியப் பின்னலோடு இணைந்திருக்கிறது என்பதுதான் கள நிலவரம்.

பொதுப்புத்தியில் சுகாதாரப் பணியாளர்களை குறைத்து மதிப்பிட்டு அவர்களை நடை உடை நடவடிக்கையில் சாதிசொல்லிப் பகடி செய்யும் அனைவரையும் தன் எழுத்தால் கேள்வி எழுப்பி தலை குனிய வைத்திருக்கிறார் ஆசிரியர். இந்தச் சமூகம் பிற அரசுப் பணியாளர்களைப் போல் சுகாதாரப் பணியாளர்களையும் மதிப்பு மரியாதையுடம் நடத்துவது அரசியலமைப்புச் சட்டப்படி இது அவர்களின் உரிமை என்பதை முன்வைத்திருக்கிறார். குப்பையை அள்ளுவதற்கும் அவர்கள் வருவதற்கும் அதே வண்டி பயன்படுத்தப்படுவதை அரசு தவிர்க்க வேண்டும். இதற்கு முன்னர் தவிர்க்கப்பட்டவர்கள் என்ற தலைப்பில் இந்திய முழுமைக்கும் உள்ள எல்லா மாநிலங்களில் உள்ள சுகாதாரப் பணி செய்யும் இன குழுக்களில் மக்களை கள ஆய்வு செய்து ஒரு ஆய்வு நூல் வெளி வந்திருக்கிறது. தமிழில் அதை பாஷாசிங் எழுதியிருக்கிறார். அது ஒரு தேசிய அளவிலான புள்ளி விவரத்தை உடைய நூல்.  எழுத்தாளர் மு.தமிழ்ச்செல்வன் எழுதியிருக்கிற இந்த நூல் தமிழ்நாட்டு மாவட்டங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்களின் வாழ்வியல் போராட்டங்களைப் புள்ளி விவரத்தோடு அரசுக்குமுன் எடுத்து வைத்துள்ள முதன்மையான நூலாகும் என்று கருதுகிறேன். வாசிப்பை நேசிக்கிற அனைவருக்கும் இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும். மானுடச் சமூகம் இன்னும் மேம்பட கல்வி உதவ வேண்டும்.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”.

நன்றி!

நூல் விமர்சனம்:
மதுரை செல்லூர் உபாத்தியாயர்
தமிழறிவு பாரதி
முனைவர் ச.தமிழரசன்
smiletamil@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக