நெருப்பு நிலா - நூல் விமர்சனம்.
பல நூல்களுக்கு இடையில் மூன்று ஆண்டுகளாக ஒரு புத்தகத்தின் தேடல் இருந்து வந்தது. பலமுறை முயற்சித்தும் என்னால் நூலைப் பெற இயலவில்லை. ஆனால் அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குன்றாமல் இருந்தது. தோழி ஒருவரின் அதைப்பற்றிய விமர்சனமும் அதன் சில கவிதைகளும் அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. இறுதியாக அப்புத்தகம் கிடைக்கப்பெற்றது.
என் வாசிப்பு அனுபவங்களை உங்களுக்கும் படைக்க விரும்புகிறேன்..
ஆசிரியர் கேப்டன் யாசீன் அவர்களின் "நெருப்பு நிலா".
ஒரு அழகிய காதல் காவியத்தை கவிதை நடையில் அரங்கேற்றிய விதம் கவிதைக்கான பாங்கையும் கதைக்கான பொருளையும் ஒருசேர தழுவியுள்ளது.!
ஒரு காதல் கதையை கவிதை நடையில் சொல்லாடல் விதைத்த கவிஞர் கேப்டன் யாசீன் அவர்களின் எழுத்து தனித்துவம் அழகுற காட்சியளிக்கிறது.!
எளிமையான சொற்களாக இருந்தாலும், சொற்கோர்வைக்கும் பொருளுக்கும் ஏகதேச உயிர்ப்புகளை ஒருசேரப் புனைந்திருக்கும் இவரின் காவியத்தில்., வாசிக்கும் நாமும் சிலநிமிடம் கதாப்பாத்திரங்களாய், அங்கங்களாய் அபிநயித்துவிடுவோம் என்பதே உண்மை.
நெருப்பு நிலா,இலட்சியத்தையும் காதலையும் ஒருசேரத் திரட்டி ஊட்டும் நிலாச் சோறு..
"பிறரின் உணர்வுகளை சிறை வைப்பதல்ல காதல்.,
அது அடுத்தவருக்கு சுதந்திரம் கொடுத்து, சந்தோஷப்படுத்தி பார்ப்பது.செத்துப் போவதல்ல காதல்
உயிர் வாழ்தலே காதல். பெற்றோரை எதிர்த்து உற்றாரை பகைத்து வெற்றி கேட்கும் அளவிற்கு காதல் மோசமானது அல்ல"
"இதயத்தை நொறுக்கிவிட்டு துடிக்கச் சொல்கிறாளே,
உயிரை உருவிக்கொண்டு வாழச் சொல்கிறாளே,
பிரிந்து விடலாமா என்ற அனுசுயாவின் ஒற்றைச் சொல்லில்
பிணமான ஆதவன்
சுக்கு நூறாக கிழிந்துபோன காதலியின் படிக்காத கடிதத்தை
ஒன்று சேர்ப்பதுபோல் சிரமப்பட்டு
தன்னை ஒன்று சேர்த்தான்.
கடந்து போனது
மேகம்தான்.
கவலைப்படாதே வானம் இருக்கிறது.
உடைந்து போனது உள்ளம்தான்.
உருக்குலையாதே
உயிர் இருக்கிறது.
தனக்குத்தானே உளவியல் ஆலோசகனான்."
இவ்வரிகளில் காதலுக்கான அடிப்படைப் பண்புகள் அழுத்தங்களாய் வெளிவரும் உணர்வுகளாய் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கான பிரயோகம் அருமை.
காதல் ஒரு பக்கம் என்றாலும்,மற்றொரு பக்கம் இலட்சியத்தையும், மனிதத்தன்மையையும் ஒருசேர எண்ணி,இரண்டையும் சமநிலையில் அணுகி பாவிக்கும் ஒருவனின் கதையை ஆழமாக விதைத்திருக்கும் கேப்டன் யாசீன் அவர்களின் நெருப்பு நிலா நூலுக்கு வாழ்த்துக்கள்!
~~~~~~~~~~~~~
கவிமலர் த. சரண்யா
கருமண், கொழிஞ்சாம்பாறை(p.o),
சித்தூர் (t.k),
பாலக்காடு (d.t)
கேரளா - 678555.
saranyad.amber@gmail.com
நூல் : நெருப்பு நிலா
ஆசிரியர் : கேப்டன் யாசின்
அருமையான விமர்சனம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நட்பே