ஜனவரி 13, 2022

யாழினி குறுங்காப்பியம் - நூல் விமர்சனம்

யாழினி குறுங்காப்பியம் மீதான அழகியல் திறனாய்வு.
நூலாசிரியர்: கவிஞர் அ.முத்துவேலன்
வெளியான ஆண்டு: 2021 செப்டம்பர்.
பதிப்பகம்: நன்மொழி பதிப்பகம் புதுச்சேரி.
ISBN : 978-93-92351-13-6
நூலாசிரியர் ஊர்: மதுரை.
நூலாசிரியர் அலைபேசி: 9489493011

விழாமலி மூதூர் என அழைக்கப்படும் மதுரையின் சான்றோர் நிறைந்து பல்லோர் குழுமிய எழில் அரங்கு ஒன்றில் ஒருநாள் காலை கவிஞர் முத்துவேலன் அவர்கள் என்னைச் சந்தித்தார். தான் இயற்றிய யாழினி குறுங்காப்பியத்தை எனக்குப் பரிசளித்தார். 

படித்துப் பார்த்தேன்; பரவசமடைந்தேன். எழுத்துக்கள் ஒன்றுகூடி நிகழ்த்திய திருவிழா போல் இருந்தது அக்காப்பியம்.சொல் வளம் நிறைந்த சோலையாகக் காட்சியளித்தது. அணி நயங்கள் அணிந்த தமிழே நின்று பேசுவது போல் உணர்ந்தேன்.

கவிஞர் முத்துவேலன் அவர்கள் படைத்த எழுத்தின் சுவை முக்கனிச்சாறு போல் தித்திப்பாக இருந்தது. இந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட மிகச்சிறந்த பனுவல்களில் ஒன்று அது. முகமலர்ச்சிக்காக எதையும் கூறி இதயம் கவரும் உத்தி எனக்கு வராது. உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும்  கூறும் அறத்தமிழ் பயின்றவன் நான்.  

படிக்கப் படிக்க படிக்கும் ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. தமிழ்ச் சொற்கடல் போல் திருப்பும் திசை எங்கும் திகைப்பூட்டியது. தொடை நயங்களால் தொடுக்கப்பட்ட சொற்கோவை அனைத்தும் தமிழ் மீதான காதலை இன்னும்  கூட்டியது. 

காப்பிய நாயகி யாழினியை வியந்து பாராட்டும் அத்தனை இடங்களும் உவமைகளின் ஊற்றுகள் பொங்கி வழிந்தோடக் கண்டேன். காப்பியத்தில் குறைவான மாந்தர்கள் எனினும் நிறைவான கதை சொல்லியிருக்கிறார். கவிஞரின் எடுப்பும் தொடுப்பும் வாசிப்பவரை வசப்படுத்துகின்றன. கதைப்பாடல் போல் படித்தவுடன் உரையின்றி புரிந்து விடும் அளவிற்கு எளிய மொழிகளால் கதையை நடத்திச் சென்றிருக்கிறார்.
தடுமாற்றத்தில் பிறழ்ந்த மனசாட்சியின் குற்ற உணர்ச்சியில் கதையின் 
 மூன்று மாந்தர்களும் (காப்பிய நாயகி யாழினி, அவள் கணவன் வணிகன், அவள் மீது மோகம் கொண்ட மன்னன்) உயிர்த்தியாகம் செய்து தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள் என்பதோடு காப்பியம் நிறைவடைகிறது. 
 
உணர்ச்சிக் கோவைகளின் நிரலாய் இந்தக் காப்பியம் நிறைவு பெற்றிருக்கிறது. இந்தத் தலைமுறை வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு அற்புத நூல் இந்த யாழினி குறுங்காப்பியம். கவிஞரின் எழுத்து வரலாற்றில் இது ஒரு அழகு மாளிகை வாழ்த்துகள்.

இப்படிக்கு,
மதுரை செல்லூர் உபாத்தியாயர்
முனைவர் ச.தமிழரசன்
13.01.2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக