மே 30, 2026

Exam வெப் சீரிஸ் விமர்சனம்

Exam Webseries :
#ஒவ்வொரு_இளைஞரும்_பார்க்க_வேண்டிய_படம்.
##ஒவ்வொரு_இளைஞரும்_பார்க்க_வேண்டிய_படம்.
#EXAM_WebSeries: எக்ஸாம் வெப் சீரியஸ் விமர்சனம்:

சமீபத்தில் வெளியாகி இருந்த "எக்ஸாம்" வெப் சீரியஸ் பார்த்தேன். இளைஞர்களின் வாழ்வு எப்படி ஊழல்வாதிகளால் சிதைக்கப்படுகிறது என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியிருக்கிறது இந்த மகத்தான இணையப் படம். இயக்குனர் சற்குணம் அவர்கள் இப்படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். இப்படத்தின் காட்சிகள் மிக மிக விறுவிறுப்பானவை. ஒரு பக்கம் தேர்வு எழுதி நியாயமான முறையில் அரசு பணி பெற்று கவுரவமாக வாழ வேண்டும் என்று கருதும் ஏழை எளிய மக்கள். மறுபுறம் அரசுப்பணியை அப்படியே காசு கொடுத்துப் பெற்று விட்டு உயர் பதவிகளில் அமர்ந்து தனக்குத் தகுந்தபடி சூழலை மாற்றிக் கொள்ளலாம் என்று கருதும் பண முதலைகள். கோச்சிங் சென்டர் என்கிற பெயரில் நடக்கும் மெகா மோசடிகள் மற்றும் ஊழல்கள். தேர்வுத்தாள் எப்படி எல்லாம் கசிகிறது, அது எதுவுமே தெரியாமல் எப்படி மாணவர்கள் போட்டி தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள், எப்படி ஒவ்வொரு தேர்வுத்தாளும் லீக் அவுட் ஆகிறது போன்ற இதுவரை பேசப்படாத மிக முக்கிய பகுதிகளை இப்படம் பேசியிருக்கிறது. படம் பார்க்கப் பார்க்க ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாக செல்கிறது. ஒவ்வொரு எபிசோடும் துவங்கும் பொழுதும் முடியும் பொழுதும் அடுத்த எபிசோடைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் முன்பாகவே தொற்றிக் கொள்கிறது. காட்சிப்படுத்துதல் மிக அருமை. நடித்த நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பின்னணி இசை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. போட்டித் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு முற்றிலும் தெரியாத இரண்டாம் உலகம் இப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. இப்படத்தைப் பார்த்து முடித்த பின்னர் ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையின் இழந்த பகுதிகள் இருட்டுப் பகுதிகள் யாரால் உருவாக்கப்பட்டவை என்பது கண் முன் தோன்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக