ஜூன் 15, 2020

புகழேந்தியின் பா நயம்

 புகழேந்தியின் பா நயம் - கட்டுரை
முனைவர் சு. சத்தியா
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
தஞ்சாவூர்.
sathiya2015j@gmail.com

தமிழ் இலக்கிய மரபில் கவிதையானது தொன்றுதொட்டு மரபாக இருந்து வரும் கலையாகும். இக்கலை இன்பத்தால் சரித்திரம் படைத்தப் புலவர்கள் எண்ணிலடங்காதவர்கள் ஆவர்! அவர்களுள் நளவெண்பாவை எழுதி வெண்பாவில் புகழேந்தி எனும் அடைமொழியினைப் பெற்ற பெரும்புலவர் புகழேந்திப் புலவர் ஒருவரே என்றால் மிகையாகாது! இவரின் புலமைத் திறத்தினை வெளிப்படுத்தும் நளவெண்பாவின் பா நயத்தினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
வெண்பாவில் புகழேந்தி
     கவிபாடுவதில் எல்லாப் புலவர்களும் கைதேர்ந்தவர்களாக இருந்தாலும், யார்? எந்தவகைக் கவிபாடுவதில் வல்லவர்கள் என்பதை,
     வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
        செயங்கொண்டான் விருத்த மென்னும்
     ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
        அந்தாதிக் கொட்டக் கூத்தன்
     கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
        வசைபாடக்  காள  மேகம்
     பண்பாய  பகர்சந்தம்   படிக்காச
        லாதொருவர்   பகரொ   ணாதே  (தனிப்பாடல்)
என்ற பாடல் வழி அறியலாம். மேலும் புலவர்களுள் புகழேந்திப் பெறுமிடத்தை,
       காசுக்குக் கம்பன்
      கருணைக்கு அருணகிரி
      ஆசுக்கு காளமுகில்
      ஊழுக்கு கூத்தன்
      உவக்க புகழேந்தி
      கூழுக்கு ஒளவை
என்ற அடிகளின் வழி உள்ளத்தை உவக்க வைப்பதில் புகழேந்தியாருக்கு நிகர் புகழேந்தியாரே என்பது புலனாகிறது. இவ்வாறு புகழேந்தியார் தான் வெண்பா எழுதுவதில் தேர்ந்தவர் என்பதை,  தான் எழுதிய நூலின் பெயராலே பெற்றவர். நளன் எனும் கதாபாத்திரத்தைக் கதையின் தலைமைப் பாத்திரமாக உயர்த்தி வெண்பாக்களை இயற்றி இரண்டினையும் மையமாக வைத்து நளவெண்பா என்னும் பெயரிட்டு தமிழுலகில் வெண்பாவில் புகழேந்தி எனும் சிறப்புப் பெயரினைப் பெற்றார். இவரது பாடல்களில் உள்ள பா நயத்தினைக் கீழ்வருமாறு அறியலாம்.
பூக்கள் பணிதல்
   பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே
   பூவையர்கை தீண்டலும் அப்பூங்கொம்பு - மேவியவர்
   பொன்னடியில் தாழ்ந்தனவே பூங்குழலாய் காணென்றான்
   மின்னெடுவேற் கையான் விரைந்து           (நளவெண்பா 183) 
எனும் பாடல் உணர்த்துவது, இவ்வுலகில் பொதுவாக அழகானப் பெண்களின் கைபட்டதும் நாணமடைந்து மெய்சிலிர்த்துப் போவார்கள். இங்கு அழகான மலர்களும் தன்னைப்போல அழகுள்ள பெண்களின் கை தன்னைத் தொட்டவுடனேயே வளைந்து அவர்கள் பாதங்களைப் பணிந்ததாக வருணித்துள்ள நிகழ்வு பூவினும் மென்மையானவள் பெண் என்பதை உறுதி செய்கிறது. மேலும் இப்பாடலில் பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே என்பதும் பெண்ணின் கை பட்டமாத்திரத்தில் அப்பூங்கொம்பே வளைந்து பணிந்ததாம்! கேள்வியும், பதிலுமாக அமைந்துள்ள இப்பாட்டின் பா நயம் சிந்திக்க வைக்கிறது.
கற்பின் திறம்
      தமயந்திக்கு இரண்டாம் சுயம்வரம் நடக்கபோகும் செய்தி அறிந்த அயோத்தி மன்னன் இருதுபன்னன் மகிழ்ச்சியில் திளைக்கிறான். அவனது இன்பத்தை அறிந்த தேர்ப்பாகனான நளன் தமயந்தியின் கற்பின் திறத்தை, 
    குறையாத கற்பினாள் கொண்டானுக் கல்லால்
    இறவாத வேந்திழையாள் இன்று -  பறிபீறி
    நெல்லிற் பருவரால் ஓடும் நெடுநாடா
    சொல்லப் படுமோஇச் சொல்           (நளவெண்பா 372) 
என்றவாறு எடுத்துரைத்து அச்செய்தி உண்மையாக இருக்காது என்றும் நளன் தமயந்தியின் கற்பின் மேன்மையைக் கூறினாலும், இதில் ஒரு நுட்பம் உள்ளது. என்னவெனில், பறிபீறி நெல்லிற் பருவரால் ஓடும் நெடுநாடா என்ற தொடர் மீன் பிடிப்பவர்கள் இட்டு வைத்துள்ள பறியினைக் கிழித்துக் கொண்டு வெளியேறி உயர்ந்த நெற்பயிர்களின் ஊடே விளையாடின மீன்கள். மேலும் கணவன் இருக்கையில் வேறு எந்த ஆடவனையும் கற்பில் சிறந்தவள் நினைக்கமாட்டாள். எப்படி மீனானது அப்பறியில் அகப்படாமல் தப்பி செல்லுதோ அதுபோல் தமயந்தியும் இந்த சுயம்வரத்திற்கு சம்மதிக்கமாட்டாள் என்பதை நயம்பட எடுத்துரைத்துள்ளார்.
உண்மை உருவம் அறிய முனைதல்
    பைந்தலைய நாகப் பணமென்று பூகத்தின்
    ஐந்தலையின் பாளைதனை ஐயுற்ற -  மந்தி
    தேளியா திருக்கும் திருநாடா உன்னை
    ஒளியா காட்டுன் உரு      (நளவெண்பா 402) 
என்ற பாடல் தேர்ப்பாகனாய் வந்து சமையல் தொழில் செய்யும் நளனிடம் தமயந்தியின் தந்தை வீமன் நளனது நாட்டின் சிறப்பை எடுத்துக்கூறி அவன் மெய்யான உருவத்தைக் காட்டுமாறு வேண்டுகிறான். மேற்கண்ட பாடலில் பாக்கு மரத்தின் உச்சியில் இருக்கும் பாளையைக் கண்டு பசுந்தலையுடைய நாகப்பாம்பு என்றெண்ணி குரங்குகள் அச்சமுறுவதுபோல, இங்கு உன் உருவத்தைக் கண்டு அச்சப்படுகிறோம்.( உட்பொருள் சந்தேகப்படுதல்) அதனால் உன் உண்மை உருவினைக் காட்டு என்று கூறுவது புகழேந்தியாரின் நுண்மான் நுழைப்புலத்தை அறியமுடிகிறது.
பெண்ணின் ஆளுமை
     நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
     ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
     வாளுமே கண்ணா வதனமதிக் குடைக்கீழ்
     ஆளுமே பெண்மை யரசு          (நளவெண்பா 39)   
 இப்பாடலில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கிற நான்கு குணங்களும் தமயந்தியின் நான்கு வகைப் படைகள். கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐம்புலன்களும் அவளுடைய அமைச்சர்கள். அவள் காலில் அணிந்துள்ள சத்தமிடும் சிலம்புதான் அவளது முரசு. இரண்டு கண்களும் வேல், வாள் எனும் கருவிகள். நிலவு போன்ற அவளது முகம்தான் வெண்கொற்றக் குடை.  இவற்றின் துணையோடுதான் அவள் பெண்மையாகிய அரசாங்கத்தை ஆட்சி செய்கிறாள். இவ்வாறு தமயந்தியின் குணங்களையும் அழகினையும் அஃறினை உயிராகிய அன்னப் பறவையே வருணிப்பதுபோல் காவியம் படைத்துள்ளப் புகழேந்தியாரின் பா நயம் விஞ்சி நிற்கிறது!
எண்ணியல் அறிவு
     ஒரு முறை நளன் இருதுபன்னன் என்ற அரசனுக்காகத் தேர் ஓடடுகிறான். குறிப்பிட்ட வழியில் ஒரு பள்ளமான வயல் வருகிறது. அவ்விடத்தில் ஒரு பெரிய தான்றி மரம் இருக்கிறது. அதனைப் பார்த்த மறுவினாடி  இதில் பத்தாயிரங்கோடி காய்கள் உள்ளன  என்றான் இருதுபன்னன். அதோடு நில்லாமல் சந்தேகம் இருந்தால் நீயே எண்ணிப் பார்த்துக்கொள் என்று நளனிடம் கூறினான். நளனோ மரத்தின் அருகே தேரை நிறுத்தி  எண்ணிய நிகழ்வினை, 
      இத்தாழ் பணையில்இரும் தான்றிக்காய் எண்ணில்
      பத்தாயிரம் கோடிபார் என்ன - உத்ததனில்
      தேர்நிறுத்தி எண்ணினான் தேவர்சபை நடுவே
      தார்நிறுத்தும் தோள்வேந்தன்  தான்     (நளவெண்பா 379) 
என்ற பாடல் விளக்குகிறது. இப்பாடலின் நயத்தினை நோக்கும்போது ஒரு மரத்தைப் பார்த்த மாத்திரத்தில் அதில் உள்ள காய்களின் எண்ணிக்கையைக் கூறுகிற எண்ணியல் அறிவு அக்காலத்திலேயே மேலோங்கி இருந்ததை அறிய முடிகிறது. இதனை மற்றொரு நிலையில் நோக்குங்கால் நளன் விரைந்து தேர் ஓட்டும் ஆற்றல் வாய்ந்தவன் அவனைப் போல் தானும் விரைந்து தேர் ஓட்ட வேண்டும் என்ற நோக்குடன் இருதுபன்னன் நளனுக்கு, தான் கற்றறிந்த எண்ணியல் கலை அறிவினைக் கற்றுத்தந்து அவனிடம் உள்ள தேர் ஓட்டும் திறனைத் தானும் கற்றடைய கையாண்ட வழிமுறையே இந்த எண்ணியல் பரிட்சை! இன்று கணிதத்துறையில் அதிவேகமாகக் கணக்கிடும் தொழில் நுட்பத்திறன் வளர்ந்திருந்தாலும் நம் பழந்தமிழரின் கணித அறிவினை வெல்லமுடியாது என்பதற்கு புகழேந்தியாரின் மதிநுட்பமே சான்றாகும்.
இயற்கை ஓவியம்
    வையம் பகல்இழப்ப வானம் ஒளிஇழப்ப
    பொய்கையும் நீள்கழியும் புள்இழப்பப் -  பையவே
    செவ்வாய் அன்றில் துணைஇழப்பச் சென்றடைந்தான்
    வௌ;வாய் விரிகதிரோன் வெற்பு       (நளவெண்பா 104) 
எனும் பாடலடிகள் இவ்வுலகில் சூரியன் மறைந்தவுடன் பகற்பொழுதும் வானத்து ஒளியும்  நீங்குவதும் பொய்கை கடற்கரை உப்பங்கழிகளில் உள்ள பறவைகள் அவ்விடத்தை விட்டுச் செல்வதும் குறிப்பாக, அன்றில் பறவைகள் தத்தம் துணையோடு கூட்டினை அடையவும் காரணமாய் இருந்த சூரியன், தன் கதிர்களை மறைத்து மேற்கு மலையை அடைந்து மறைந்தான் என்று புலவர் இயற்கையை ஓவியமாக்கிய விதம் வியக்கவைக்கிறது.
அரும்பெரும் சொல்லாட்சி நயம்
     செந்தேன் மொழி    (நளவெண்பா 42,152,320) 
     வண்தமிழ் வாணர்ப் பிழைத்த (நளவெண்பா 2,341) 
     புள்ளின் மொழியினொடு (நளவெண்பா 5 ) 
     மொழிமேல் செவிவைத்து  (நளவெண்பா 67 ) 
     தேமொழிக்குத் தீதிலவே (நளவெண்பா 69,98 ) 
     மொழிந்ததே அன்னம் (நளவெண்பா 70 ) 
     வன்மொழி மென்மொழி (நளவெண்பா 98 ) 
     பணி மொழியார் (நளவெண்பா 172 ) 
     செந்தமிழ் வேதம் (நளவெண்பா 179 ) 
     செம்மொழி (நளவெண்பா 359 ) 
     பொன்னழகைத் தாமே புதைத்தார்ப்போல்
     பொன்னி அமுதப் புதுக் கொழுந்து (நளவெண்பா 134 ) 
 இவ்வாறு நறுஞ்சுவையடன் கூடிய அருஞ்சொற்களை நயத்துடன் கையாண்டுள்ள புகழேந்தியாரின் பா நயத்தை மேற்கண்டவாறு அறியமுடிகிறது. ஒவ்வொரு பாடலிலும் ஆழ்ந்தப் பொருள் நயம் உள்ளதை இவரது பாடல்களை ஆராய்வதின் வழி அறியலாம். மேலும் வெண்பாவில் புகழேந்தி, இயற்கை வருணனை, அணிநயம், அறக்கருத்துகள், பன்னோக்குப் பார்வை, புகழேந்தியாரின் மொழிப்பற்று எனப் பல்வேறு வகை ஆய்வுப் பொருண்மைகளில் ஆராயலாம்.   
துணை நூல்கள்
1.நளவெண்பா, உரையாசிரியர் செல்லூர் கிழார், திரு.செ.ரெ.ராமசாமிப்பிள்ளை,    சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.1963 
2.தனிப்பாடல் திரட்டு தொகுதி -1, சு. அ. இராமசாமி புலவர், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.1963 




 
      








                                 


 
      








          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக