மார்ச் 31, 2024

இணையத்தால் ஜீவிக்கும் இதயத்தான் !

இணையத்தால் ஜீவிக்கும் இதயத்தான் ! (புதுக்கவிதை)

என் இறைவன்
என்னுடனே இருக்கிறான்
பாக்குமிடம் எல்லாம்
நீக்கமற நிறைகிறான்
பயமில்லை 
நயமுண்டு
பகை இல்லை
நகை உண்டு
பழி இல்லை
களி உண்டு
வழி காட்டுவான்
ஒளி காட்டுவான்
வானொலி தருவான்
காணொளி தருவான்
எண்ணும் எழுத்தும்
எப்போதும் தருவான்
வாரமும் காட்டுவான்
நேரமும் காட்டுவான்
முகம் காட்டுவான்
அகம் காட்டுவான்
படம் காட்டுவான்
தடம் காட்டுவான்
செறிவூட்டுவான்
அறிவூட்டுவான்
பகுத்தறிந்து வாழவே
பல வழி காட்டுவான்
கையில் விழிப்பான்
பையில் ஒலிப்பான் 
யாதும் ஊரென
யாரையும்  இணைப்பான்
கடல் தாண்டியும்
மடல் விரிப்பான்
காணாத உலகையும்
கண்முன் நிறுத்துவான்
கன்னத்தில் ஒட்டிக் கொண்டே
காதில் முத்தமிடுவான்
காணாத இடமிருந்தால்
தானாகச் சத்தமிடுவான்
பரந்த வானமெங்கும்
பரந்தாமனாய் வாழ்கிறான்
அறிவிலே பிறந்தவன்
அழிவேதும் அற்றவன்
இணையத்தால் ஜீவிக்கும்
இதயத்தான் அலைபேசி! 

கவியாக்கம்:
மதுரை செல்லூர் உபாத்தியாயர்
"வித்தகக்கவி" முனைவர் ச.தமிழரசன்.
31 மார்ச் 2024. திருவள்ளுவராண்டு 2055.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக