அக்டோபர் 13, 2022

வருணப் பாகுபாட்டின் போலித்தனங்களைத் தோலுரிக்கும் "சண்டாலப் பிக்குணி" - நூல் விமர்சனம்.


வருணப் பாகுபாட்டின் போலித்தனங்களைத் தோலுரிக்கும் "சண்டாலப் பிக்குணி"

நூல் விமர்சனம்:
மதுரை செல்லூர் உபாத்தியாயர் முனைவர் ச.தமிழரசன்.


சுமார் இரண்டரை வருடங்களாகக் கொரோனா பெருந்தொற்றுக்குச் சலித்துப்போய் வெறுப்புற்ற வாழ்க்கை, புது வசந்தத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கையில் புத்தகத் திருவிழா மதுரையில் புதுப்பிக்கப்பட்டது. மனம் அறிவைப் புதுப்பிக்கப் புறப்பட்டது. அறிஞர் உரை கேட்டு அறிவை விசாலப்படுத்த முனைந்தேன். சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து, பரந்த சிந்தனைகளை வாசிக்க அலைந்தேன். பற்பல கடைகளை நாடி, தேர்ந்தெடுத்து வாங்கிய புத்தகங்கள் என் சிறு பையை நிறைத்திருந்தன. அதில் ஒன்று மிகச் சிறந்த சிந்தனையைத் தூண்டும் புத்தகம் என்பதை வாசித்து முடித்த பின்பு தான் என்னால் உணர முடிந்தது.
அந்நூல்தான் "சண்டாலப் பிக்குணி".

சண்டாலப் பிக்சுகி
(மலையாள இலக்கியம்)
சண்டாலப் பிக்குணி
(தமிழ் மொழிபெயர்ப்பு)

வருணத்தின் அடிப்படையில் சாதியின் பெயரால் கற்பிக்கப்பட்டுள்ள அடிமைத்தனங்கள், சுரண்டல்கள், போலித்தனங்கள் ஆகியவற்றை விமர்சித்து அதற்கு எதிரான குரல் எழுப்பிய நூல்தான் "சண்டாலப் பிக்சுகி" மலையாளத்தில் வெளிவந்துள்ள குறுங்காப்பியம். இதனாசிரியர் மலையாள இலக்கிய முன்னோடியான குமாரன் ஆசான். இந்நூலைத் தமிழில்  மொழிபெயர்த்திருப்பவர் கவிஞர்; அறிவியலாளர் ;அறிவியல் எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாசிரியர்; கவிமாமணி நெல்லை சு.முத்து அவர்கள்.  ஆகஸ்டு 2003 ஆம் ஆண்டு தஞ்சை அகரம் வெளியீடாக வெளிவந்திருக்கிறது.

"சண்டாலப் பிக்குணி" என்பது ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் புத்த மதத்தைத் தழுவிய கோலத்தைக் குறிக்கிறது. மலையாள தேசமான கேரளாவில் "சண்டாலர்" எனும் சொல் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிப்பிடும் சொல்லாகக் கையாளப்படுகிறது. தமிழ்நாட்டிலும் பொருள் அறியப்படாமல், மக்கள் வழக்கில் மிக இயல்பாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இக்குறுங்காப்பியத்தில் சண்டாலப் பிரிவை சார்ந்த பெண் ஒருத்தி கேணியில் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறாள். அங்கே  தாகத்தோடு வந்த ஒரு புத்தப் பிக்குணி நீர் கேட்கிறார்.  தான் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவள் . தங்களுக்கு எப்படி தண்ணீர் வழங்குவது என்று அவள் தர மறுக்கிறாள். அதற்குக் காரணமாகத் தன் சாதியைக் கூறுகிறாள். தான் கேட்டது தண்ணீர் தான் உன்னுடைய சாதியை அல்ல என்று துறவி பதில் சொல்ல, அந்தப் பதில் அவளுக்குப் பிடித்துப் போய்விட, அவள் நீர் தர, அவர் தாகத்தைத் தணித்துக்கொள்கிறார். அவ்விடம் விட்டு நகர்கிறார். புத்த மடம் சேர்கிறார். புத்தமதத் துறவியின் அந்தப் பேச்சு அவள் மனதைப் பாடாய்படுத்துகிறது. வீட்டில் யாரிடமும் சொல்லாமல், துறவி இருக்கும் இடம் நோக்கி விரைகிறாள். அவர் பாதத்தடம் கண்டு மகிழ்கிறாள். புத்த பீடத்தில் அவர் இருப்பது கண்டு மகிழ்கிறாள். அவர் கொள்கைகளைப் பின்பற்றத் துடிக்கிறாள். அந்த மடத்திலேயே சேர்ந்து, புத்த மதக் கொள்கைகளை அறிந்து கொண்டு புத்தப் பிக்குணியாகவே மாறுகிறார். சண்டாலப் பெண் ஒருத்தி இவ்வாறு மாறியதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், மேல் சாதி மக்கள் அவர் மீதான அவதூறுகளை நாடெங்கும் பரப்புகிறார்கள். இந்தச் செய்தி அந்நாட்டு மன்னருக்கு எட்ட அவர் புத்த பகவானைத் தரிசித்து இந்தப் பிரச்சினை குறித்து அவரிடம் கலந்துரையாடி அவ்விடயத்தில் தெளிவு பெறுகிறார். புத்த பகவான் சாதி பற்றி எடுத்துரைக்கும் அறவுரைகள் சமுதாயப் போலித்தனங்களைத் தோலுரிக்கும் சாட்டையடிகளாக இருக்கின்றன. அதைக் கதைக்களமாகக் கொண்டே குமாரன் ஆசான் இக்குருங்காப்பியத்தை நான்கு பாகங்களாகப் பிரித்து, சாதி எதிர்ப்புக் காப்பியமாக இதைப் படைத்துக் காட்டியுள்ளார். 

இக்காப்பியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் புத்தபகவான் உரைத்த கருத்துக்களைப் படிக்க படிக்க, சாதி மீதான பற்றை உதறித் தள்ளி சமூகத்தின் மீதான அன்பை மேலோங்கச் செய்யும் கருத்துக்கள் நிரம்பி இருப்பதை அறிய முடிகிறது. அக்கருத்துக்கள் இன்றளவும் சமூகத்தின் தேவையாக இருக்கின்றன என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

வருணங்களை அடிப்படையாகக் கொண்ட சாதிப் பிரிவுகள் மனிதர்களை எப்படி அறமற்றவர்களாக மாற்றி  இருக்கிறது என்பதைக் காப்பியத்தில் வரும் எதிர் குரல் எழுப்பும் கதை மாந்தர்களின் வழி, சமூகத்திற்குப் புரிய வைத்திருக்கிறார் குமாரன் ஆசான். மனிதர்களுக்கு இடையே உள்ள பொறாமை குணமே சாதி என்றும், தாழ்ச்சியும் உயர்ச்சியும் மனித பிறவிகளுக்குத் தேவையற்றவை என்றும், அனைவரும் ஒரே இனம் என்றும், மனிதர்களுக்கு அன்பு என்கிற குணமே ஆதாரம் என்றும் புத்தர் வழங்கும் நீதி போதனைகள் ஒட்டுமொத்த சபையையும் மனமாற்றம் அடையச் செய்கிறது. மனித குலம் அறிந்து கொள்ள வேண்டிய சீர்திருத்தச் சிந்தனைகள் அவை.

இவ்விலக்கியத்தின் செவ்வியல் தன்மையைச் சில சான்றுகளின் வழி காணலாம். சண்டாலப் பிக்குணியை ஏற்றுக்கொள்ள இயலாத அந்தணர்கள் பரப்பிய அவதூறுகள் மீது புத்தர் எழுப்பும் கேள்விகளாக சில அமைந்துள்ளன.

சான்றாகச் சில வரிகள், (காப்பியத்தில் உள்ளவாறு)

"அந்தணர் என்பவர் யாவர் -முகில் தந்தவரோ கொடிப் பூவோ?

யாகத்தீ போலோரு தேவ - கண்ட
யோகத்தில் இருந்து உதித்தாரோ?

அன்பில் இரத்தத்தில் உண்டோ- சாதி என்பினில் மச்சையில் உண்டோ?

சண்டாளி, அந்தணர் யாரும் - விந்து பிண்டத்தில் ஓர் அம்சம் தானே!

நெற்றித் திருநீரும் பூணூல் - குடுமி
முற்றும் பிறப்பில் உண்டாமோ?

அந்தணரோ அறவோர் காண் - பார்க்கும்
செந்தண்மை கல்வியால் மேவும்!

எல்லா கிருமிகள் போல - பிறந்து இல்லாதாம் மானிட சாதி!

நல்லறம் யாவையும் ஆற்றும்- மன வல்லமை மாந்தர்க்கே வாய்க்கும்!"
(201-216 அடிகள்)

அந்தணர் யார் என்கிற கேள்வியை எழுப்பி அதற்குப் பதிலையும் புத்தர் உரைக்கிறார். இச் சிந்தனை திருக்குறளோடு பொருந்திப் போகிறது. திருக்குறள் அந்தணர் யார் என்பதை வரையறுத்துச் சொல்கிறது.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
(அதிகாரம்:நீத்தார் பெருமை, குறள் எண்:30)

எல்லா உயிர்களையும் சமமாகப் பார்ப்பவரே அந்தணர் என்கிறது. இதே கருத்து குமரன் ஆசானின் இவ்வவிலக்கியத்திலும் இடம்பெற்று இருப்பது ஒப்பு நோக்கத்தக்கது. இதன் வழி, சாதி பேதமற்ற சமத்துவச் சமுதாயம் தான் நல்வாழ்க்கைக்கு  வழிவகுக்கும் என்கிற குமாரன் ஆசானின் சிந்தனை வெளிப்பட்டுள்ளது. சாதியினால் விளையும் தீமைகள் குறித்தும், அதனால் விளையும் பயன் ஒன்றும் இல்லை என்பது குறித்தும், சமூகம் மேம்பட அன்பு ஒன்றே துணை நிற்கும் என்ற புத்தக் கருத்தை விரிவாகப் பாடி இருக்கிறார்.

சான்றாக,

"முற்றிய பாமர நெஞ்சில்- புகை
பற்றும் பொறாமையே சாதி!

ஆணவம், வெஞ்சினம், வன்மம் -மனக் கோணலில் தீங்குகள் என்றே

எண்ணம் போல் மாறிடும் சாதி- அந்தி வண்ணங்கள் வானிடை போலே!

சொந்தக் குடும்பம் பிளக்கும்!- அது பந்தம் முறியச் சிதைக்கும்!

துண்டாய் உடைத்திடும் வீட்டை- பகை உண்டாய் முடித்திடும் நாட்டை!

சார்ந்தாரைக் கொல்லுமோர் தீயாம்- இனம்
சேர்ந்தாரை தின்னும் ஓர் பேயாம்!

போற்றுவதோ இந்த நோயை?- சாதி வேற்றுமையோ வெறும் மாயை!

நேர்ந்திடும் மானிட வீழ்ச்சி- இது வாழ்ந்திடும் சாதியின் சூழ்ச்சி!

சாதிதன் போரிது நின்றால்- நரக வேதனை பூமியில் ஏது?

குற்றுயிராய் உயிர் தீர- சுடு
ரத்தம் உறிஞ்சிடும் கோரம்

மாட்சியினன் பிம்பிசாரன்- தன் ஆட்சியில் ஓட்டி விட்டானே!

தாழ்ந்தோர் சமதையராக- இவண் வாழ்ந்தால் புவி கெட்டுப் போமோ?

இப்பிறப்பின் பயன் நீக்கும்- பெருந்த தப்புகள் நல்லதோ யார்க்கும்?

பேத நால் வர்ணங்கள் சொல்லி- வரும் சாதியே நம் உயிர்க் கொல்லி"
(261-288அடிகள்)

வருணங்களால் மனிதர்களுக்குள் பேதங்கள் வருமே ஒழிய, அதனால் பெறும் பயன் ஏது என்கிற கருத்தை இவ்வடிகள் செப்புகின்றன. சாதியினால் எந்தப் பயனையும் காண முடியாது. மாறாக விரோதங்களே வளரும் என்பதே இவ்வடிகளின் சாரம்.
சாதிக்கு எதிரான கருத்துகளை எடுத்து வைக்கும் இக்காப்பியம், அதை வெல்லும் மிகப்பெரும் கொள்கையாக அன்பை முன்னிறுத்துகிறது. அன்பினால் தான் சமுதாயம் மலரும் உலகம் செழிக்கும். சாதியால் அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக இக்காவியம் பதிவு செய்திருக்கிறது.

சான்றாக அன்பின் மேன்மைகளைக் கூறும் இடத்தில்,

"அன்பினால் பூத்திடும் வையம் - உயர் அன்பில் செழித்திடும், உய்யும்!

அன்புதான் பூலோக சக்தி -தூய
அன்புதான் ஆனந்த முக்தி!

அன்புதான் மானிட வாழ்வாம்!- செல்வ அன்பிலா வாழ்வுதான் சாவாம்!

அன்பே நரகமாம் தீவில்- ஒளி
இன்ப நல் சொர்க்கம் எழுப்பும்!

அன்னையின் நெஞ்சு நரம்பில்- ஒழுகிச் சென்றிடும் செங்குருதித் தாய்ப்

பாலன மாறுதல் போலே -எவரும் சீலராய் மாறுவர் அன்பால்!

சொல்வதாயின் அழுக்காறு- இன்றேல் இல்லைதான் இல்லைதான் சாதி"
(301-314 அடிகள்)

இந்தக் குருங்காப்பியம் மலையாள இலக்கியத்தின் செவ்வியல் இலக்கிய வரிசையில் வைத்து பேசப்பட்ட ஒன்று. "சண்டாலப் பிக்குணி மனிதநேயம் குறித்து எழுதப்பட்ட கவிதை விளக்கம். புத்தரின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெறும் நிகழ்ச்சி ஒன்றே இக்குறுங்காவியம்." என்ற சிறு குறிப்பை'  இதைத் தமிழில் மொழி பெயர்த்த நூலாசிரியர் நெல்லை சு.முத்து அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


இந்நூலுக்குத் திருவனந்தபுரம் தமிழ் சங்கத் தலைவர் பேரா.வ. விநாயகப் பெருமாள் வாழ்த்துரை வழங்கி இருக்கிறார். முனைவர் கி. நாச்சிமுத்து அவர்கள் முகவுரை தந்திருக்கிறார்.

பேரா.முனைவர் வி.அய் சுப்பிரமணியம், வல்லிக்கண்ணன், டாக்டர் இராம.சுந்தரம், கவிமாமணி சாஸ்திரி வெங்கட்ராமன், கணையாழி காசியபன், தோப்பில் முகமது மீரான், கோமல் சுவாமிநாதன் மற்றும் புலவர் முத்து எத்திராசன் ஆகியோர் மதிப்புரைகள் வழங்கி இருக்கிறார்கள்.

இந்த நூல் பொதிந்து வைத்த சிந்தனைகளைக் கற்றுணர்ந்து, சமகால அனுபவங்களை ஒப்பிட்டு நோக்கிய போது எண்ணற்ற சிந்தனைகள் என்னைச் சூழ்ந்தன. தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; மனிதத் தன்மையற்ற செயல் என்று அரசுகள் மக்களுக்கு எடுத்துரைத்தாலும், அந்தக் குற்ற உணர்ச்சி அற்ற மக்கள் இன்னும் இருந்து வருகிறார்கள்.  சிலர் இன்றுவரை பிறரைத் தாழ்த்துவதும் ஒதுக்குவதும் நடைமுறையில் இருந்து வருகிறது. விண்வெளித் துறையோ வேற்றுக் கிரகங்களில் நீர் உண்டா? காற்று உண்டா? மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உண்டா? என்றெல்லாம் தொலைநோக்கு ஆராய்ச்சியில் மும்முரமாய் இருக்க,
இப்போது இருக்கும் இந்தக் கிரகத்தில் தெருவுக்குள் வராதே, நடக்காதே, சத்தமாகப் பேசாதே, கிராம சபைகளில் நாற்காலியில் அமராதே என்றெல்லாம் சக மனிதரைப் பேசுவோர் இருப்பதையும் காண முடிகிறது.

பாரதி நினைவுக்கு வருகிறார்.

"சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்"

கவனம் பெறும் தவறுகளின் மீது அறம் கற்ற அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதையும் பார்க்க முடிகிறது.  நாம் எத்தகைய காலச் சூழலில் வாழ்கிறோம் என்பதை நோக்கும்போது மனம் வேதனைப்படுகிறது. அதற்குச் சமீப காலமாக வெவ்வேறு ஊர்களில் நடைபெற்ற தீண்டாமை கொடுமைகளைப் பத்திரிகைகள் பதிவு செய்தமையே சாட்சி. தவிர்க்க வாய்ப்பளிக்காத பேதமற்ற கட்டாயக் கல்வியே அனைவரையும் சிந்தனையில் மேன்மையுள்ள  மக்களாக மாற்றும். கொடுமைகளை; சுரண்டல்களை நீக்கும்.
கற்றதன் வழி நடக்கும் சமுதாயமே வளர்ச்சியில் வீறுநடை போட்டு முன்னேறும்.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (குறள்.391)

வாசிப்பை நேசித்த உங்களுக்கு நன்றி!.

நூல் விமர்சனம்: மதுரை செல்லூர் உபாத்தியாயர் முனைவர் ச.தமிழரசன்.
12.10.2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக