பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - நூல் விமர்சனம்
நூல் பெயர்: பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
ஆசிரியர்: முனைவர் தி. நெடுஞ்செழியன்
வெளியான ஆண்டு: டிசம்பர் 2021
பக்கங்கள்: 140
வெளியீடு: சுவடு வெளியீடு, 7A, ரங்கநாதன் தெரு, சேலையூர், சென்னை - 600073.
நூல் விமர்சனம்: (தமிழறிவு பாரதி) முனைவர் ச. தமிழரசன்
பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை முனைவர் தி.நெடுஞ்செழியன் ஐயா அவர்களின் வழிப் புரிந்து கொள்கிறேன். வாழ்ந்து கொண்டிருக்கும் பெரியார்களுள் அவரும் ஒருவர். சமூகநீதி, பெண் விடுதலை, சுயமரியாதை உள்ளிட்ட சிந்தனைகளோடு அறவாழ்க்கை வாழும் யாவரும் பெரியார்தான் என்பதற்கு முன் உதாரணமாக திகழ்பவர். "செயற்கரிய செய்வார் பெரியர்" (குறள்.26) பிறருக்கு ஏற்படுகிற துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதுகிறவர் பெற்றதே அறிவு. அறிவினால் ஆகுவது அதுவே(குறள்:315), மேற்காணும் இரண்டு குறள்களின் உருவமாகப் பேராசிரியர் அவர்களை நான் பார்க்கிறேன். தான் வகித்த பேராசிரியர் பணியை நேசித்ததுடன் அப்பணியை நேசிக்கும் ஒவ்வொருவரின் உரிமைகளுக்காகவும் அவ்வப்போது பத்திரிகைகளில் குரல் எழுப்புபவர். சமூகச் சீர்திருத்தத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் இட ஒதுக்கீட்டின் சிறப்புகளைக் குறிப்பாக உள் இட ஒதுக்கீட்டைப்பற்றி எழுதி அரசியல் சாணக்கியர்களுக்கும் வெகுஜன மக்களுக்கும் புரிய வைத்தவர். பெரியாரின் சிந்தனைகளை மூச்செனக் கொண்டு பேச்சிலே முழங்குபவர்.
ஐயா நெடுஞ்செழியன் அவர்கள் எழுதியிருக்கும் இந்த நூல் பெரியாரை யார் என்று நமக்கு அறிமுகப்படுத்துவதோடு, பெரியாரின் சிந்தனைகள் அவரின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதையும் விளக்குகிறது. 21 கட்டுரைகளைக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அவை அனைத்தும் பெரியாரின் சிந்தனைகளைப் பன்முக நோக்கில் எடுத்துரைப்பன. பெரியாரியம் இன்னதென்று புரியாதவர்களுக்கும் புரிய வைப்பன. இந்த நூலில் உள்ள சிந்தனைகளை முன்னதாகச் சுவடு மின்னிதழில் தொடராக எழுதி, பெரியார் பக்கம் என்ற தலைப்பில் வெளியிட்டு, காலத்தின் தேவையை அவர் நிறைவு செய்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
முதல் கட்டுரை தொடங்கி இறுதி கட்டுரை வரை பெரியார் சிந்தனையை இச்சமுதாயம் புரிந்து கொண்டது ஒரு மாதிரியாகவும், புரிய வேண்டிய கோணங்கள் ஒரு மாதிரியாகவும் இருக்கின்றன என்பதை வாசகர் ஒவ்வொருவருக்கும் காரண காரியத்தோடு விளக்குகிறார். மொத்தக் கட்டுரைகளையும் வாசித்து முடித்த பொழுது ஒரு செய்தி நெற்றி பொட்டில் அடித்தால் போல விளங்கும். "பெரியார் கடவுளுக்கு எதிரானவர் அல்ல; கடவுளின் பெயரால் சூழ்ச்சி செய்பவர்களுக்கு எதிரானவர். உயர்வு தாழ்வைக் கற்பித்து அதன் வாயிலாக சுகம் காண்பவர்களுக்கு எதிரானவர்" என்பதுதான் அது.
ஒருபுறம் தமிழ் இலக்கியங்களைப் பகுத்தறிவுச் சிந்தனையோடு எள்ளி நகையாடிய பெரியார், மறுபுறம் அறத்தை போற்றிய திருக்குறளை வரவேற்றுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக ஆக வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளார். இதுதான் சமூக அக்கறை.
முதன் முதலில் பெரியார் ஒருவருக்கு எப்படி அறிமுகப்படுத்தப்படுவார் என்றால் "பெரியார் கடவுள் இல்லை என்றார்; கடவுளை கும்பிடுபவன் காட்டுமிராண்டி என்று சொன்னார்" என்று தான் இந்த பொது ஜனம் புத்தி புகட்டும். உண்மையில் எல்லோரும் அர்ச்சகர்களாக ஆக வேண்டும் என்று முதல் குரல் எழுப்பிய அவர் எப்படி கடவுளைச் சாடி இருப்பார்? என்கிற வினா இந்த புத்தகத்திலிருந்து திரண்டு எழுகிறது.
பெரியார் எழுப்பிய கேள்விகளாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் கருத்துக்கள் பகுத்தறிவுச் சிந்தனையை உடைய ஒவ்வொருவரின் மனதில் எழக்கூடிய கருத்துகள். தமிழ் மொழியில் பக்தி உணர்வு மேலோங்கி இருக்கிறதே ஒழிய, அறிவியல் சிந்தனை இல்லை. தொழில்நுட்பச் சிந்தனை இல்லை . அறிவு வளர்ச்சிக்கான ஆக்கத்திற்கு அது நம்மை இட்டுச்செல்லவில்லை என்று பெரியார் கருதினார். அதனால்தான் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்ற செய்தியும் இந்த நூலிலே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அவரே தமிழை பல்வகை மொழிகளாகப் பிரிந்து கிடக்கிறாய் என்று வாழ்த்தியும் வியந்தும் கூறியுள்ள செய்தியும் இதே நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பெரியாரின் சிந்தனைகளால் இளம் வயதில் இருந்தே ஈர்க்கப்பட்ட இந்த நூலாசிரியர் எப்படி சுயமரியாதை உணர்வோடும், சமூக நீதிக் கொள்கைகளோடும், பெண்உரிமைச் சிந்தனைகளோடும் வளர்ந்தார் என்பதையும், அதை மற்றவர்களுக்கு எப்படி வளர்த்தார் என்பதையும் உணர்வுபூர்வமாக வடித்திருக்கிறார். சாதி ஒழிப்பில் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழும் அண்ணல் அம்பேத்கர் போல், தமிழ்நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்ந்தவர் பெரியார். அவரை முற்றுமாக படித்துத் தெரிந்து கொள்ளாமல், சொல்பவர் சொல்லைக் கேட்டும், படிக்காதவர்கள் படித்ததாகச் சொல்வதைக் கேட்டும் நம்பி விடக்கூடாது என்ற விழிப்புணர்வு இவரின் புத்தகத்தை வாசிக்கும் போது எழுகிறது.
என்றைக்கோ தோன்றிய வருணாசிரமம் பல்வேறு அநீதிகளைச் செய்தாலும், அவை தர்மங்கள் என்று மக்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டு நடைமுறை ஆக்கப்பட்டு இருப்பதை, இன்று தங்களை ஆதிக்க பிரிவினராகக் காட்டிக் கொள்ளும் ஒவ்வொருவரின் செயல்களில் இருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது. பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்கிறது வர்ணாசிரம (அ)தர்மம். அதை உடைத்தெறிய வேண்டும் என்கிறது பெரியாரியம். பார்ப்பனியம் வேர் ஊன்றிய தன்மையை படிக்கும் பொழுது நெஞ்சு பதறுகிறது. அதன் விளைவு சாதிக்கு ஒரு இழிவும் பெருமையும் சாட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பெரியார் தரும் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன.
பெரியாரின் சமூக சீர்திருத்தம்; மதச் சீர்திருத்தம்; சாதிச் சீர்திருத்தம்; எழுத்துச் சீர்திருத்தம்; சிந்தனைச் சீர்திருத்தம் என சமூகத்தில் திருத்தப்பட வேண்டிய சிந்தனைகள் மிகுந்துள்ளமையை புரிய வைக்கிறது. வரலாற்றில் ஆதிக்கம் செய்தவர்களின் கோர முகங்கள் இந்த நூலிலே பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 1825 முதல் 1875 வரை குமரி மாவட்டத்தில் நடைபெற்ற தோள் சீலை கழகப் போராட்டம் பற்றிய செய்தி படிப்பவர்களை திடுக்கிடச் செய்கிறது. ஏன் அந்தப் போராட்டம் நடைபெற்றது? அதற்கான அவசியம் என்ன வந்தது என்பதைப் பார்க்கும்போது வெட்கப்படக் கூடிய செய்திகளும் வேதனை படக்கூடி சமூக அவலங்களும் இந்த நூலிலே பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த நாட்டில் சமதர்ம உணர்வுகள் வராமல் இருப்பதற்குக் காரணமாக சாதியே அடிப்படையாக அமைகிறது என்று பெரியார் கண்டறிந்த உண்மை இன்றும் நம்மை உலுக்குகிறது. பெரியார் நிகழ்த்திய கோவில் நுழைவுப் போராட்டங்கள் அவ்வளவு எளிதாகச் சாத்தியப்படவில்லை என்பதை இந்த நூலைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.
இந்நூலாசிரியர் நூலை எழுதியிருக்கிறார் என்று சொல்வதற்குப் பதிலாக, நூலாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். பேச்சளவிலே பெரியாரின் கருத்துக்களை நிறுத்திக் கொள்ளாமல் செயல் அளவில் நிகழ்த்தியும் காட்டிக்கொண்டிருக்கிறார். பெரியாரியம் வழிநடத்த, பெரியாராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். வளர்ந்து வரும் இளம் சிந்தனையாளர்கள் பெரியாரைப் புரிந்து கொள்வதற்கு இவரின் எழுத்துக்கள் துணை நிற்கும். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. வரலாற்றைப் பகுத்தறிவு கொண்டு மறுவாசிப்பு செய்யும்போதுதான் வருங்காலம் சமூகநீதி உள்ள சமுதாயமாக மலரும். பெரியார்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வணக்கம்.
------
தமிழறிவு பாரதி
முனைவர் ச.தமிழரசன்
21.09.2022.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக