ஜனவரி 19, 2022

சலூன் - புத்தக விமர்சனம்.

சலூன் என்கிற நாவல் மீதான புத்தக விமர்சனம்.

நூல்: சலூன்
வகை: புதினம்
ஆசிரியர்: க.வீரபாண்டியன்
வெளியான ஆண்டு: 2018
வெளியீடு: யாவரும் பப்ளிசர்ஸ்.

இதன் ஆசிரியர் க. வீரபாண்டியன் அவர்கள் மதுரையைச் சேர்ந்தவர். ஆந்திராவில் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கிறார். டிசம்பர் 2018 ஆம் ஆண்டு இந்த நாவல் வெளிவந்திருக்கிறது. நூற்றி இருபத்து எட்டுப் பக்கங்கள் கொண்டது.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு பகுதிகளில் முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வியல் பண்பாட்டுச் சூழலைக் கருத்தியல் தளமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.  

தமிழ்ச் சமூகத்தில் மயிர் என்கிற சொல் நல்ல முறையில் புழக்கத்திலிருந்து பின்னாளில் இழிவு சுமத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மயிர் என்கிற சொல்லை, திருவள்ளுவர் அவர் காலத்தில் "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்"  என்று திருக்குறளில் மிக இயல்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்.  இன்றைக்கு மயிர் என்கிற அந்த தலைமுடியை இழிவுப் பொருளாக இச்சமூகம் கருதுகிறது.

இதில் உள்ள முரண் என்னவென்றால் அந்த மயிர் கற்றையைத் தான் கடவுள்களுக்குக் காணிக்கையாக்குகிறோம். ஒருபுறம் அதன்மீதான இழிவு; மறுபுறம் அதன்மீதான புனிதம் என இருவேறு பரிமாணங்களைக் கொண்ட பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சமூகம் என்கிற சொல் சாதியைக் குறிப்பதல்ல. மாறாக மக்கள் சேர்ந்து வாழும் தொகுதி என்று குறிப்பிடுவார் அறிஞர் தொ. பரமசிவன் அவர்கள்.  நம் தமிழ்ச் சமூகம் மனிதர்களில் மேல்கீழ் கற்பித்தும், உயர்வு தாழ்வைக் கற்பித்தும் பழக்கப்பட்டு வந்திருக்கிறது. சிலரை இன்ன தொழில் பார்க்கிறேன் என்று சொன்னால் உயர்ந்த நிலையில் வைத்து எண்ணுவதும், சிலரை இன்ன தொழில் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டால், அதை இழிநிலையில் வைத்து நினைப்பதும் வெகு ஜனங்களுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டது. 

இந்தச் சமூகம் கவனிக்கத் தவறிவிட்ட உன்னதத் தொழில்புரியும் அழகுக் கலைஞர்கள் அவர்கள். முடிதிருத்தும் தோழர்கள். ஊரெங்கும் இருக்கும் சவரத்தொழிலாளர்கள் தன் கையால் தானே உழைத்து உயரும் உயர்ந்த பண்பாட்டை உடையவர்கள்.  ஆனால் அவர்களுடைய பண்பாடும் பழக்கவழக்கங்களும் அவர்கள் மீதான மரியாதையும் இங்கு கொடுக்கப்படுகிறதா என்பது ஒரு கேள்வி.  இதற்கு இச்சமூகம் வெட்கப்பட வேண்டும். 

நூல் முழுக்கப் பல்வேறு ஊர்களில், பல்வேறு இடங்களில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நவீன வசதிகளில் தங்களை ஆட்படுத்திக் கொண்டு மிக உயர்ந்த மதிப்பும் மாண்பும் பெற்று இருக்கிறார்கள் என்கிற செய்தியும், அதே நிலையில் இச்சமூகச்சூழலில் எப்படி அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது என்பதையும் ஒப்பிட்டுக் கதை நடத்திச் சென்றிருக்கிறார் இந்நூலாசிரியர்.

மனித அகங்களை அழகுபடுத்துபவை நூல்கள். புறங்களை  அழகுபடுத்துபவை இவர்களின் கைவினைகள். முடிதிருத்தும் தொழிலாளிகள்  இல்லையேல் நமக்கு அழகில்லை என்று பல கவிஞர்களும், திரைப்படப் பாடல்களும் குறிப்பிடுகின்றன. நம்மை அழகாக்கும் ஒரு உயர்ந்த தொழிலை உடையவர்களை நாம் எப்படிக் காண்கிறோம் எந்நோக்கத்தில் உணர்கிறோம் என்கிற செய்தி இந்த நாவல் முழுக்க இழையோடுகிறது. 

முடித்திருத்தும் தொழிலாளர்களைக் கவனப்படுத்த முயன்றிருக்கிறது இந்நாவல். இவர்கள் குறித்த எத்தனையோ நாவல்கள் தமிழுலகில் வெளிவந்திருந்தாலும், இந்த நாவல் முத்தையா, குட்டி,  செல்வா அண்ணன் போன்றபல கதைமாந்தர்களின் வழி அவர்களின் வாழ்வியல் போராட்டங்களை நம் மூளைக்கு எடுத்துச் செல்கிறது.

 வாசிக்க வாசிக்க நமக்கும் முடித்திருத்தும் தொழிலாளிக்கும் ஆன அந்த உரையாடல்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வரும். சலூன் கடையில் வந்து தன்னுடைய ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்துபவர்கள் நம் கண் முன்னே வந்துபோவார்கள். 

இந்நூலாசிரியர் தன்னுடைய முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் "இந்தச் சமூகம் இந்த மாதிரியான இழிநிலைகளை சுரண்டலை இன்னும் எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப் போகிறது என்று கோபத்தை உண்டாக்கலாம்." இந்நூலாசிரியர் க. வீரபாண்டியன் அவர்கள் இந்த நூலைத் தன்னுடைய தந்தைக்குச் சமர்ப்பணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 "வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் ஆன தீவிரத்தை என்னுள் எப்போதும் தங்குமாறு செய்த என் அப்பா எஸ் ஆர் கணேசன் அவர்களின் நினைவுகளுக்கு" என்று குறிப்பிட்டு இந்த நாவலை தொடங்கியிருக்கிறார். படிப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு அனுபவத்தைத் தரவல்லது. 
 
ஒரு சமூகம் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது என்றும், எந்த நிலையில் வைக்கப்பட வேண்டும் என்பதையும் வாசிப்பவர் மனதிற்குள் பசுமரத்தாணி போல பதிவு செய்கிறது. 

காந்தியடிகள் குறிப்பிடுவார் ஒரு நாட்டின் வழக்கறிஞருக்கும் சவர தொழிலாளிக்கும் வேறுபாடு கிடையாது. சமமாக மதிக்கப்பட வேண்டியவர்கள். வழக்கறிஞருக்கு  என்ன மரியாதை தருகிறோமோ, அதே மரியாதையைச் சவரத் தொழிலாளிக்கும் தருவது நம் கடமை என்று குறிப்பிடுவார். அதை நினைவில் கொண்டு இதுபோன்ற புதிய புத்தக வரவுகளை நாம் வாசிப்போம். நேசிப்போம் புதிய சமுதாயம் படைப்போம். காற்றில் உலவும் வார்த்தைகளல்ல வரலாறு; எழுத்துக்களால் பதிவுசெய்யப்படுவதே வரலாறு என்பதை இந்நூல் நினைவூட்டுகிறது. வாழ்த்துகள்.

இப்படிக்கு,
மதுரை செல்லூர் உபாத்தியாயர்
முனைவர் ச.தமிழரசன்
முதன்மை ஆசிரியர்
தமிழறிவு மின்னிதழ்
மதுரை .
19.01.2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக