ப்ளேட்டோ – ஓர் நல்லாசிரியர் - கட்டுரை.
ப்ளேட்டோ – ஓர் நல்லாசிரியர்
உலக நாடுகளில் பலவிதமான கலைகளை அறிமுகப்படுத்திய பெருமை இரண்டு நாடுகளுக்கு உண்டு – ஒன்று நாம் இந்தியா மற்றொன்று கிரேக்க நாடு ஆகும். ‘இராமாயணம்’, ’மகாபாரதம்’, இரு மகா காவியங்களும் இந்திய இலக்கியங்களில் இரு கண்களாக இன்றுவரை திகழ்கின்றது. அதே போல தான் ஹோமரின் ‘இலியட்’,’ஒடிஸ்ஸி’ என்னும் இரு மாபெரும் காவியங்களும் கிரேக்க நாட்டின் இலக்கியங்களில் இரு கண்களாக திகழ்கின்றது. அப்படிப்பட்ட கிரேக்க நாட்டில் கி. மு. 427 ஆம் ஆண்டில் ப்ளேட்டோ பிறந்தார். இவருடைய இயர்பெயர் அரிஸ்டோக்ளீஸ் என்பதேயாகும். பொலப்பனேசிய போரில் “குதிரை வீரனாக” பங்கு கொண்டு தன்னுடைய மக்களுக்காக தொண்டு செய்தார். அவருடைய தோள்ப்பட்டை அகலமாகவும் வலிமையாகவும் இருந்தது. கிரேக்க மக்கள் இவருடைய தோள்களின் வலிமையைப் பார்த்து வியந்து ‘ப்ளேட்டோ ’ என்று அழைத்து வந்தனர். காலப்போக்கில் அரிஸ்டோக்ளீஸ் என்ற பெயர் மறைந்து ப்ளேட்டோ எனவாயிற்று. ஏதேன்ஸின் மக்களாட்சியையும் அரசியலையும் வெறுத்து அரசியலிலிருந்து வெளியேறினார். தன்னுடைய ஆசிரியரான சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவரைக் காப்பாற்றியாக வேண்டும் என்று எண்ணினார். இந்த விஷயம் தெரிந்து ஏதேன்ஸ் அரசாங்கம் அவரை நாடுகடத்தியது. ப்ளேட்டோ சுற்றுப்பயணமாக இத்தாலி, சிசிலி, எகிப்து மற்றும் வடஆப்ரிக்கா நாடுகளுக்கு சென்று அந்த நாடுகளின் சமயக் கொள்கைகளையும், பண்பாட்டையும் குடியரசு முறையையும் அறிந்தார். பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்ததும் கி.மு.387 இல் ஏதேன்ஸ் நாட்டிற்கு திரும்பினார். ‘அகேடெமி’ என்ற பல்கலைக்கழகம் அமைத்து தன்னுடைய மாணவர்களுக்காக வான சாஸ்திரம், தத்துவம், கணிதம் போன்ற பாடங்களையும் கலைகளையும் சுமார் 40 ஆண்டுகள் கற்பித்தார். மாணவர்களின் எண்ணங்களையும் மனதையும் அறிந்து அவர்களின் நிலைக்கு ஏற்ப கற்றுத் தருபவரே “நல்லாசிரியர்” என்று அடிக்கடி கூறுவார். மாணவர்களுக்கு தத்துவ ஞானியாக மட்டுமல்ல ஓர் நண்பனாகவும் திகழ்ந்தார். “கட்டாயப்படுத்தி புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது” என்று கூறியுள்ளார். சிசிலியன் மன்னன் டையோனி சையல் என்பவன் கொடுங்கோல் அரசனாகத் திகழ்ந்தான். அவருடைய மைத்துனன் டியோன் ப்ளேட்டோவிற்கு நண்பன் ஆனார். அவரிடம் “அறம் பிறழாமல் வாழ வேண்டும், மக்களுக்காகத் தான் மன்னவன்” என்று அறிவுரை கூறினார். தன்னுடைய மாணவர்களுக்கு நிறைய தத்துவங்களை அள்ளிக் கொடுத்துள்ளார். அதில் சில :
*”நாம் பார்க்கும் உலகம் வேறு நம்மால் அறியப்படும் உலகம் வேறு”*
*”மகிழ்ச்சியடைவதற்கான வழி மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ள செய்வதே.”*
*”அழகுக்கு ஆயுள் மிகக் குறைவு.”*
*”அரசியலை தவிர்ப்போமானால் நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்.”*
*”கடவுளுடைய அன்புக்கு உரியவனாக ஒருவன் விளங்க வேண்டுமாயின், அவன் வழிபாட்டில் கருத்துடையவனாக இருக்க வேண்டும். வழிபாடு ஒன்றின் மூலமாகத்தான் மன அமைதியும், ஒருமையையும் பெற முடியும். வழிபாடுதான் மனிதனுடைய ‘நான்’, ‘எனது’ என்னும் செருக்கைப் போக்கின்றது. அவன் இறைவனோடு இரண்டறக் கலக்க வழிபாடே துணை செய்கின்றது. ”*
*”அரசாங்கத்திற்குரிய கடமைகள் பலவாக இருக்கலாம் அக்கடமைகளுள் தலையாயது என்று சொல்லத்தகும் சிறப்புடையது, மக்களுக்குப் புலனடக்கமும் நல்லறிவும் கல்வியும் ஏற்படுத்துவதே ஆகும்.”*
*”ஒளிரும் தீப்பந்தத்தை வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு கொடுப்பது போல் ஆசிரியர்கள் திகழ்கிறார்கள்.”*
ப்ளேட்டோ அறுபத்து நான்கு கலைகளுள் இசைக்கலை மற்றும் கவிதைகளின் கருத்துக்கள் பற்றியும் நன்கு எடுத்துக் கூறியுள்ளர். அவர் சுமார் 50 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார்.
அதில் சில முக்கியமான நூல்கள் – குடியரசு, ஆத்மீக் காதல், சட்டங்கள், அப்பாலஜி, தி யாடெட்டஸ், கிரிட்டோ, டிமெயாஸ், கிரிட்டியாஸ், போன்றவை ஆகும்.
ஒரு முறை தன் மாணவன் ஒருவர் ப்ளேட்டோவை திருமண விழாவிற்கு அழைத்தார். ப்ளேட்டோவும் தன்னுடைய 80 வயதையும், உடல் தளர்ச்சியையும் பொருட்படுத்தாமல் மாணவரின் அன்பு வார்த்தைக்கு கட்டுப்பட்டு திருமண விழாவில் கலந்து கொண்டார். ஒரு நாற்காலியில் அமர்ந்த அவர் அங்கேயே உறங்கிய படியே உயிர் துறந்தார். ப்ளேட்டோவின் ஆசிரியர் சாக்ரடீஸ் மற்றும் தன்னுடைய மாணவரான அரிஸ்டாட்டிலையும் இன்று வரை எவராலும் மறுக்க முடியாது. எனவே தான் ப்ளேட்டோவின் இலக்கிய படைப்புகளும், விமர்சனங்களும், தத்துவங்களையும் ஆங்கிலத்துறை மாணவர்களும் வரலாற்றுத் துறை மாணவர்களும் இன்று வரை படித்து மகிழ்கின்றனர்.
மாணவர்கள் கேள்விகளை எழுப்பி ஆசிரியர் அவர்களோடு உரையாடி, தெரியாத, புரியாத கேள்விகளுக்கு பதிலளித்து நடத்தும் முறையே ப்ளேட்டோ விரும்பினார். இதையே ஆங்கிலத்தில் “ஆக்டிவ் லேனிங்” (Active learning) என்று கூறுவர். வாழ்நாள் முழுவதும் கல்வி கற்க வேண்டும் என்பதிலும் ஆசிரியர் – மாணவர் இடையேயான உறவு கல்வியை வளர்ப்பதிலும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ஒரு தனி மனிதனின் ஒழுக்கம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதே ப்ளேட்டோவின் நோக்கம் ஆகும்.
“உவப்புத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் “
(குறள் 394)
என்ற வள்ளுவரின் (திருக்குறள்) வாக்கிற்கிணங்க மாணவர்கள், இந்த ஆசிரியர் எப்பொழுது வகுப்பை விட்டுச் செல்லுவர் என்று நினைக்காமல் எப்பொழுது வகுப்பிற்கு வருவார் என்று மாணவர்கள் நினைக்கும் படி ஆசிரியர்கள் பாடம் கற்பித்தல் வேண்டும் என்று அறிஞர் ப்ளேட்டோ கூறியுள்ளார்.
-முனைவர். V. P. ரதி
ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி
பசுமலை, மதுரை – 625004.
mannarrathi6@gmail.com
9788672271
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக