பிப்ரவரி 05, 2020

தனித்திருக்கச்செய்தாயோ - புதுக்கவிதை

தனித்திருக்கச்செய்தாயோ - புதுக்கவிதை
முதியோர் இல்லக் குமுறல் 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அகவை முதிர்ந்த தமிழறிஞர்  அ.முத்துவேலன், 2/976, எம்.ஜி.ஆர்தெரு, மருதுபாண்டியர் வீதி, தாசில்தார் நகர்,  மதுரை-20, தொடர்பெண்: 9489493011


1.முதியோர் இல்லம் தரும் 
முழு மன அமைதியிலும் 

கதி இதுவே எனக் கண்ட 
கலக்கமுறும் வாழ்வில்

 பதி மதுர இலக்கியப் 
பாட்டரங்கில் பாட 

நிதி போலும் கிடைத்த நிகழ்வினில் பூத்த கவி 


2.பாலகனாய் நீ பிறக்க மகனே 
பரவசங் கொண்டேனடா 

ஆளான போதில் எழுந்த உன் 
ஆணவம் எனை எரித்ததடா 

நூலான என் நூலெல்லாம் 
நொறுங்கியே போனதடா 

ஏலாத  வயதில் எனை ஏன் 
எரித்து விட்டாய் மகனே


3.அருமை மகனே நீயேன் 
அயல னாகினாய் 

ஒருமையில் பேசுகிறாய் 
உற்றுணர மறுக்கிறாய் 

பெருமைமிகு வாழ்விதுவோ 
பெற்ற பேரறிவும் இதுவோ 

கருமை இருளில் ஏன் 
கரைந்து விட்டாய் மகனே 


4.அவ மரியாதைகள் உன்னில் 
அடையாள மானதடா 

சுயமரியாதை தனைச் 
சுட்டெரித்தாய் ஏனடா 

நயந்து நயந்து நின்முன் நாயாய் இருந்தேனடா 

பயந்து பயந்து என்சினமும் 
பாழ்பட்டுப்  போனதடா 


5.தவமாய் தவமிருந்தும் 
தாழ்வுற்றேன் நானடா 

அவமானமே எனக்கு 
அன்பளிப்பாய் ஆனதடா 

கவனங்கொண் டெனது 
கருத்துரையைக் கேளடா 

விவரப் பட்டியலிட்டும் 
விலகி நிற்கிறேன் பாரடா



 6.தப்பினால் போதுமென்று 
தனித்திருக்க விட்டாயடா 

எப்பிறப்பும் என்மனார்க்கு 
இவ்விழிய வாழ்வு வேண்டேனடா 

இப்பிறப்பில் பட்ட துயர் ஏழ்பிறப்பும் போதுமடா 

முப்போதும் அன்பொன்றே 
முன்னோர் சொன்ன அறமடா 


7.பெற்ற மனம் பித்து 
பிள்ளை மனம் கல் எனும் 

உற்ற மொழிக்கொரு 
உதாரணமானோம் யாமே 

கற்றார்முன் கவிபாடி 
காற்றில் தூது விட்டேன் 

விற்ற பொருளாய்  எனக்கு 
விடை வந்து சேராதோ 


8.விம்பிசாரன் நிழல் என்மேல் 
வீழ்ந்ததனால் மகனே 

நம்பியே தந்தையை நீ 
நட்டாற்றில் விட்டனையோ 

கம்பி இல்லாச் சிறை வெளியில் 
காலமெல்லாம் கிடந்து நான் கருகுவதோ 

தம்பி என்றழைக்க ஓர் தமக்கை 
எனக்காருமில்லையே


9.காலங்கள் ஓடுதடா 
கண்மணியே எண்ணிடடா 

ஞானமதில் ஓர் நொடியும் 
ஞாயிற்றால் எரியுதடா 

கோலங்கள் யாவுமே 
குலை நடுங்கி மாயுதேடா  

ஓலமிட முடியாமல் மனம் 
ஊனமாகிப் போனதடா


10.உன்னைப் போலொரு உத்தம பிள்ளையரால் 

 என்னைப்போல் தந்தையர் ஏமாந்து வாழ்கின்றார் 

பின்னைய என் வாழ்வே பெயரருக்குப் பாடமடா 

முன்னை வினைகள் யாவும் 
முந்தி வரும் தப்பாதே 


11.பாவத்தை தினமும் பணம் போல் சேர்த்தாய் 

கோபத்தை ஏனடா கொடையாய் கொடுத்தாய் 

ஆபத்திலும் உனது ஆணவம் அடங்கிவிடவில்லை 

தாபத்தில் வெறுப்பை தானமாய் பெற்றாயடா 


12.கல்லுடைத்த கைபற்றிக் 
கண்ணில் ஒற்ற மறுத்தாய் 

சொல்லுடைத்து நாளும் நீயோ சுகம் கண்டு மகிழ்கின்றாய் 

பல்லுடைத்த கல்லை நீ பாராட்டி மகிழ்கிறாய் 

வில்லுடைந்த  வேடனாய் வீணில் திரிகின்றாயே


13.பதறும் என் கண்முன்னே பதராகிப் போனாயடா 

சிதறும் என் சிந்தையிலும் நீயே சித்திரமாய் ஆனாயடா 

உதறி உதறி பேசியெனை ஓரங்கட்டி விட்டாயடா 

கதறி நான் அழுவதுன் காதில் ஏனடா விழவில்லை 


14.தோற்றப் பொலிவின் துரைத்தனம் நீ மகனே 

ஏமாற்ற இழிமுகமாய்  இருப்பது நான் மகனே 

மாற்றம் தந்தது இறைவனே மடிந்து வருவது நான் மகனே 

வேற்றுமை விரும்பி நீ மகனே வெந்துருகுவது நான் மகனே


15.ஈராண்டு மூவாண்டோ இருபத்தைந் தாண்டுகள் 

சீராண்டு உனை நான் சிந்தையில் கொண்டேன் 

யாரோ உன்னை ஆண்டு என் 
யாழ் மொழியைச் சிதைத்தார் 

காராண்ட கானகமின்று கனற் காற்றில் தவிக்கிறதே


16.எம்பிரான் எந்தையும் எனக்கிலை மகனே 

வம்பிலா சமூகத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும் 

நம்பிக்கையோடு நான் நாளும் வாழ்ந்திட 

தும்பிக்கை நாதன் தன் துணை வேண்டினேன் மகனே 


17.காலணி கிடப்பதற்கோ கட்டுப்பாடு விதிக்கின்றாய் 

தோலணி  செய்வார்க்கு என் 
தோல் உரித்துக் காட்டுகின்றாய் 

ஆலணி செய்தொழும் அழகியலை வெறுக்கின்றாய் 

தாலணி தட்டி எழுப்பும் தாலாட்டை ஒறுக்கின்றாய்


18.உற்றவரிடத்து உரைத்தும் உரத்துக் கேட்டாரில்லை 

கற்றோர் கவனம் கொண்டும் கவலைதான் தீரலையே 

மற்றோர்தான் யாருளார்?
 மக்களோ உமைத்  தவிர்த்து? 

பெற்றோரை நான் முன்னர் 
பேணிய பலனும் கிட்டவில்லை 


19.ஓய்வூதிய மற்றோர் வாழ்வு ஒவ்வோர் நொடியும் தாழ்வே 

பேய் படா பாடெல்லாம் பெறுகின்றார் பாரடா 

காய்ந்த சருகாகினர் காற்றின் மாசாகினர் 

வாய் வம்பர் அரசியலில் வாழ்வதெல்லாம் வீணடா 


20.நரை கொண்டது நாறிடுமோ மகனே 

திரை ஏன் விழுந்தது திசை ஏன் மூடியது 

அரைக்கல் நானென்று எனை அரைத்து முடித்து விட்டாய் 

உரைக்கல் நானென்று உணரும் நாள் வரும் மகனே 


21.கதை கதையாய் சொன்னாலும் காது கொடுத்து கேளாய் 

அதை விடுங்கள் இதை விடுங்கள் என்று 

உதை சொல்லுதிர்த்து ஒப்புரவை ஒறுப்பாய் 

கதை இலக்கியமே நம் முன்னோர் கற்பித முதற்படி என கருத்தில் கொள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக