மே 16, 2019

சிறுகதை

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
சிறுகதை
தலைப்பு : பாவிமக.
படைப்பாளர் : துளிர்


- துளிர் ( பள்ளி ஆசிரியர் )
264/223, ஆரோக்கியமாதா குறுக்குத்தெரு,
ஆரப்பாளையம் கண்மாய்கரை,
மதுரை-625016.
தொடர்புக்கு- 9944861050
மின்னஞ்சல்: thulirvinodh@gmail.com

அவளைப் பற்றித்தான் ஊரெல்லாம் ஒரே பேச்சு "கல்நெஞ்சகாரி.. இப்படியும் ஒரு தாய் இருப்பாளா.. இவளை எல்லாம் தூக்குல தான் போடணும்.." என ஊர் முழுக்க அவளுடைய சாபங்களால் நிறைந்திருந்தது; பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் இரண்டு நாட்களாக இவள்தான் விவாதப் பொருள். இவளை இன்றைய நவீன பெண்களின் ஒற்றை பிரதிநிதியாக்கி ஆளாளுக்கு பிரித்து மேய்ந்து கொண்டு இருந்தார்கள். இதற்கெல்லாம் காரணம் நேற்றைக்கு முந்தைய நாள் இரவு சங்கரி தான் பெற்ற இரண்டு மாத கைக்குழந்தையை கொன்று குப்பையில் வீசியதுதான்..

அந்த இருட்டு அறைக்குள்ளேயே இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டு கொண்டிருந்தாள் சங்கரி. பத்து இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பெண் போலீஸ்காரர் உள்ளே நுழைவதுமாக.. இவளை திட்டுவதும்.. அடிப்பதுமாக.. தங்கள் பணிகளை இடைவிடாமல் செய்து கொண்டிருந்தனர்;
அந்த அடிகள் ஒன்றும் அவ்வளவாக அவளுக்கு வலிக்கவில்லை, உடலெங்கும் ரத்தம்கட்டி போயிருந்தது, வலியை உணராத அளவுக்கு மனசு மரத்துப்போய் இருந்தது. அவளுக்கு சிறையில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருந்தாள். அந்த பத்துக்கு-எட்டு என்ற அளவிலான அறையும் அதில் முழுக்க நிரம்பி இருந்த இருட்டும் அவளுக்கொன்றும் புதிதல்ல;

அப்பா அம்மாவிற்கு தெரியாமல் கணேஷை திருமணம் செய்து அந்த பாத்திரக்கடை தெருவில் குடியேறிய மாடி வீடும் பத்துக்கு எட்டு அளவிலானதுதான். அதை வீடு என்றெல்லாம் சொல்லிவிட இயலாது ஒரே அறை அறையின் மூலையில் 5 வரிசை கற்களால் தடுப்பு செய்யப்பட்டு இருப்பது அடுப்படி என சொல்லிக் கொண்டார்கள்; மாடியில் ஏறுவதற்கு திரும்புகிற படிக்கட்டு ஓரத்தில் ஒரு கழிப்பறை. மாடியில் இருக்கிற இரண்டு வீடுகளுக்கும், கீழ் இருக்கின்ற இரண்டு வீடுகளுக்கும் அந்த கழிப்பறையில் பங்கு உண்டு. முதல் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்கள் அனைத்தும் கணேஷின் நண்பர்கள் வாங்கி தந்து விட்டார்கள். 

திடீரென திருமணம் செய்து விட்டதால் இனிமேல் தான் வேலையை தேட வேண்டும் எனவும், நண்பர்களிடம் வேலைக்கு ஏற்பாடு செய்து தரும்படி கேட்டிருப்பதாக சொல்லிக்கொண்டு திருமணமான முதல் பத்துஇருபது நாட்களும் வீட்டிலேயே இருந்தான் கணேஷ். இல்லற வாழ்வின் அந்த துவக்க நாட்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டு விட்டு அருந்தும் தண்ணீரின் சுவை போல் தித்திப்பாகவே இருந்தது.

மளிகை சாமான்கள் எல்லாம் தீரத்தீர வாழ்வின் மேல் ஒட்டியிருந்த அந்த சுவையும் கொஞ்சம் கொஞ்சமாக தீரத் துவங்கி இருந்ததை உணரமுடிந்தது; வீட்டுத் தேவைகளை பேசும் பொழுதும், வேலை குறித்து பேச்சு எழும்போதும் கணேஷ் குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்திருந்தான். பகலெல்லாம் வேலைத்தேடி செல்வதாக சொல்லிக்கொண்டு வெளியேறிகிறவன் தலைக்கேறிய போதையோடு உரையாட அவள் காத்திருந்தபோது சொற்களற்று உறவாட மட்டும் இரவில் வீடடைவான்.

"கட்டிய தாலியோடு மாலையும் கழுத்துமாக வீட்டுக்கு முன்னாடி வந்து நின்றிங்க.. ஏதோ சின்னஞ்சிறுசுகன்னு பாவப்பட்டு வீடு கொடுத்தா டோக்கன் அட்வான்ஸ் போட்டதோட சரி இன்னையோட முழுசா ரெண்டு மாசம் முடிஞ்சது இன்னும் பாக்கி அட்வான்சும் தரல.. வாடகையும் தரல.. மரியாதையா வீட காலி பண்ணிடுங்க" என வீட்டுக்கார ஐயா ஒருநாள் விடியற்காலையில வந்து சத்தம் போட்ட பின்தான் பாண்டி அண்ணன் பட்டறையில் வேலைக்கு சேர்ந்து விட்டதாகவும், காலையில எட்டு மணிக்கெல்லாம் பட்டறைக்கு வந்துடனும் மதியம் மூணு மணி வரைக்கும் தான் வேலை இருக்கும் ஒரு நாளைக்கு 300 ரூபாய் வீதம் வார கூலியாக சனிக்கிழமை கணக்கு முடிச்சு கூலி வாங்கிக்கிடலாம், நாளைக்கு காலைல கரெக்ட்டா டைமுக்கு வந்துடு என பாண்டி அண்ணன் சொல்லிவிட்டதாக கணேஷ் கூறும்போது சங்கரி அவனுக்கு அடுப்படியில் தோசை சுட்டு கொண்டு இருந்தாள்.

ஒரு வாரம் ஒழுங்காக வேலைக்கு போயிட்டு வந்து கொண்டிருந்தான். அந்த வார இறுதியில் கணக்கு முடிச்சு காச கையில் பார்த்தவுடன் மீண்டும் பழையபடி தண்ணி அடிக்க ஆரம்பித்து விட்டான்; கையிலிருக்கின்ற காசு கரையிரவரை வேலைக்கு போகிற எண்ணமே வராமல் தண்ணி அடிப்பதுமாக சகாக்களோடு சேர்ந்து சீட்டு விளையாடுவதுமாக இரண்டு மூன்று நாட்கள் கழிந்தபின் வேலைக்கு போகும் எண்ணமும் மனதில் இருந்து கழிந்து போயிருந்தது. காதலிக்கும்போதும் காலேஜை கட் அடித்துவிட்டு பார்க்., சினிமா என்று சுற்றும்போதும் இந்த கணேஷின் சாயலை அவள் ஒருபோதும் கண்டதே இல்லை. எப்படி கண்டிருக்கக்கூடும் காதலிக்கும்போது காதலுக்கு மட்டுமல்ல காதலர்களுக்கும் கண்கள் இருப்பதில்லை. கைகளும் கால்களும் மட்டுமே இருக்கும் வினோத மனிதர்களாக்கிவிடுகிறது காதல்வயப்பட்ட மனம்.


எங்கேயாவது பெத்த தாயே பிள்ளைய கொள்வாளா அவனவன் புள்ள வரம் வேண்டி எத்தனை ஹாஸ்பிடல் ஏறி இறங்கி எத்தனை கோயில் ஏறி இறங்கி எத்தனை மரத்தை சுற்றி மண்சோறு எதை எதையெல்லாம் தின்று தவம் கிடைக்கிறார்கள் தெரியுமா உனக்கு.." என மெடிக்கல் லீவில் இருந்துவிட்டு இன்னைக்கு காலையில வேலையில மீண்டும் சேர்ந்த வார்டன் லட்சுமி, புள்ளைய கொண்ட பாவிமக சங்கரிய இங்கதான் கொண்டு வந்திருக்காங்கன்னு தெரிஞ்சவுடனே மனசு கேட்காம வந்து மானங்கெட பேசி விட்டு சென்றாள். சங்கரிக்கு லட்சுமி அவள் அம்மாவின் நினைவை தூண்டிவிட்டு சென்றாள். 

அம்மா அப்படித்தான் கோபம் வந்து விட்டால் பொரிந்து தள்ளிவிடுவாள். கணேஷ் காதலிக்கின்ற விஷயம் எப்படியோ வீட்டுக்கு தெரிந்தபின் "நீ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும்.. காலேஜும் வேண்டாம் ஒரு மசுரும் வேண்டாம்" என அப்பா முடிவெடுத்த அந்த ஒரு வார காலம் அம்மா சாமியாடி விட்டாள்; அப்பா உள்ளிட்ட வீட்டில் இருக்கின்ற ஆண்கள் எல்லாம் தன்னிடம் பேசாமல் இருப்பதையே தண்டனையாக நினைத்துக்கொண்டார்கள். அவர்களுக்கும் சேர்த்து அம்மா பேச தொடங்கி இருந்தாள். செய்தியில் பார்த்தபின் இப்போது அம்மா என்ன பேசிக் கொண்டிருப்பாள் என நினைத்து கொண்டாள்.

கல்யாணமாகி ஒரு வருஷம் ஆனாலும் குழந்தை தங்கலையே என வருத்தப்பட்டுக் கொண்டிருந்த பொழுதொன்றில் எதேச்சையாக நாள் தள்ளிப்போய் நாலைந்து நாட்கள் ஆகிவிட்டது என்றெண்ணி பக்கத்தில் இருக்கிற சுபம் மெடிக்கலில் "பிரகனென்சி" செக் பண்ணுற கார்டு கொடுங்க என வாங்கிட்டு போய் வீட்டில் பார்த்த போது சிவப்பு நிறத்தில் இரண்டு கோடுகள் தோன்றி அவள் கருவுற்றிருப்பதை உறுதிப்படுத்தியது கார்டு.

ஒரு வருஷமா எந்த வேலைக்கும் போகாமல் குடிச்சு சீட்டாடி கேள்வி கேட்டால் அடிக்கின்ற கணேஷை இதாவது மாற்றிவிடுமென மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். சொன்னவுடன் அவனுடைய ரியாக்சனை பார்ப்பதற்காக காத்திருந்தாள். வழக்கம்போல குடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டே வீட்டிற்குள் நுழையும் போது நிதானத்தை இழந்து இருந்தான் கணேஷ். அவனை உட்கார வைத்து சோறு போட்டு வச்சிட்டு பக்கத்தில் உட்கார்ந்தாள் சங்கரி. ஒருவன் சோறு எப்படி சாப்பிடக் கூடாது என்பதற்கு இலக்கணமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தவனிடம் நாள் ஒரு வாரம் தள்ளிப் போய் இருக்கு என்றாள் எந்த உணர்ச்சியும் இல்லாமல் கையை கழுவிக்கொண்டு அதுக்கென்ன என்றான் இல்ல மெடிக்கல்ல கார்டு வாங்கி பார்த்தேன் "கன்சீவ்"ன்னு வந்திருக்கு என்றபோது சாப்பிட்ட தட்டை இடது கையால் தள்ளிவிட்டு "ஆமா இருக்கிற பிரச்சனையில இது ஒண்ணுதான் குறைச்சலென" ஒருக்களித்து படுத்துக் கொண்டான்; வீட்டிற்குள் சிந்திச் சிதறிய எச்சித்தட்டை எடுக்கவும் படுக்கவும் மனமில்லாமல் இரவெல்லாம் விழித்திருந்தாள். 

எந்த பிடிப்பும் இல்லாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது சங்கரிக்கு வீட்ல ரெண்டு உசுரு இருக்கு என்ற எண்ணம் கணேஷிற்க்கு ஒருபோதும் வந்ததில்லை; அவள் சாப்பிட்டாளா..? செக்கப் போகிறாளா..? ஹாஸ்பிட்டலில் என்ன சொன்னாங்க..? வயித்துபுள்ளகாரிக்கு வாய்க்கு ருசியா வாங்கி கொடுக்க வேண்டாம் வயிறாரச் சோறு போடலாம் என்ற எண்ணம் கூட இல்லாமல் அரை வயித்து கஞ்சியோட கெடந்து புள்ளைய வளர்த்து பெற்றெடுத்தாள். பக்கத்து வீட்டு ராணி அக்கா தான் அந்த மூன்று நாளும் ஹாஸ்பிட்டலில் கூடவே இருந்து அம்மா மாதிரி பார்த்துக் கொண்டாள். மூன்றாவது நாள் மாலை வீட்டிற்கு கூட்டி போவதற்காக ஆட்டோ பிடித்து வந்த போதுதான் கணேஷ் குழந்தையை பார்த்தான். அப்போது கூட சிரிக்கவில்லை ஏதோ வேண்டாவெறுப்பாக பார்த்துவிட்டு வீடு போய் சேருங்க நான் வர்றேன்னுட்டு தண்ணியடிக்க கிளம்பிட்டான்.

புள்ள பெத்த வயிறு தீயா பசிக்கும் வாய் அலமளந்து எதையாவது திங்கணும்னு தேடும் தேடிப்பார்த்த வீட்டுல ரெண்டு குடத்துல தண்ணியும் காலியா கிடைக்கிற பாத்திரமும் தவிர எதுவும் இருக்காது பசியால புள்ள அழுகும் தூக்கி மார்ல வச்சா வத்திப்போன உடம்பில எதை உறிஞ்சி குடிக்குமென இவள் அழுவாள். பத்து இருபது நாளா ராணியக்காதான் புட்டிப்பால் வாங்கி வந்து கொடுத்தாங்க. மனுசனா இவன் கட்டிக்கிட்ட பிள்ளையும் பார்க்காம.. பெத்த பிள்ளையும் பாக்காம திரியுறான் என திட்டிக்கொண்டே இருப்பாள் எத்தனை நாளைக்குத்தான் பக்கத்து வீட்டில வாங்கி புள்ளைய வளர்க்கிறதென வெட்கப்பட்டு சில நாள் கேட்கக்கூட மாட்டா சங்கரி; ராணிதான் மனசு கேட்காம ஒரு எட்டு ஓடிவந்து பார்த்துட்டு போவாள்.

ராணியக்கா ஊர்ல ஏதோ கோயில் திருவிழாவென போயி ஒருவாரம் ஆயிருச்சு. சொல்லி அழக்கூட ஆள் இல்லாத ஒரு பொழப்பு இருக்கே அது மிகக் கொடுமையானது ஒருவார காலமாக அப்படியோரு கொடுமையை சங்கரி அனுபவித்துக் கொண்டிருந்தாள். கணேசும் வீட்டுப் பக்கமே வரவில்லை; குடிச்சுட்டு எங்கேயாவது படுத்து கெடப்பான். குடிக்கக் காசும் படுக்க இடமும் கிடைத்தால் அவனுக்கு குடும்பம் என்ற தேவையில்லாத ஒன்றே. 

ரெண்டு மூணு நாளா சங்கரி எதுவுமே சாப்பிடாமல் தண்ணிய குடிச்சு தண்ணியை குடிச்சு வயித்த நெப்பிக்கெடந்தாள். பச்சப்புள்ள என்ன செய்யும் தண்ணியவ குடிக்க முடியும் அழும் போதெல்லாம் மாருல தூக்கி வச்சுக்குவா பால் வராமல் குழந்தை கத்தி அழுகிறத கேட்கமுடியாமல் பின்னந்தலையை செவத்துல முட்டி அழுவாள். அப்படியழுதே ஓய்ந்து குழந்தையும் அவளும் நெதானமிழந்த ஒரு இரவு விடிந்தபோது மடியில் கிடந்த குழந்தையின் உடம்பு சில்லிட்டிருந்தது குழந்தையை எழுப்பி எழுப்பி பார்த்தாள் அசைவில்லாமல் கிடந்தது பித்து பிடித்தவள் போல் கத்தினாள் பகல் முழுக்க எந்த அசைவுமற்ற குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு பால் வராத வற்றிப்போன காம்புகளை குழந்தையின் வாய்க்குள் வைத்து பாலூட்டிக் கொண்டிருந்தாள். 

அன்றிரவு குழந்தையோடு வெளியேறினாள்; விடியும் போது அவள் வீட்டிற்குள் நுழைந்தாள். கையில் குழந்தை இல்லை, திறந்து கிடந்த வீட்டில் வெயில் உள்ளேறி கொண்டிருந்தபோது மாடிப்படிகளில் காவல்துறையினர் ஏறிக் கொண்டிருந்தனர்.

...முற்றும்.....

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக