மே 10, 2021

நூல் திறனாய்வு



நூல் திறனாய்வு - பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு.

நூல் திறனாய்வு

கவிஞர் இரா.பூபாலன் அவர்களின் "பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு"
இறகை போல் மென்மையான வார்த்தைகளுடன் எல்லா நியதியையும் பாங்குற வடித்திருந்த விதத்தில் சற்றே அதிர்ந்து தான் போனேன்.
நான் வாசித்த புத்தகங்கள் பட்டியலில் நீண்ட இடைவெளிக்குப்பின் பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகின் முதலிரு கவிதை சிறகுகளே என்னை இறுதிப் பக்கம் வரை எட்டிப் பார்த்து மென்மையாய் பறக்க வைத்தது வரிகளின் வலிமை.
எதார்த்தங்களை ஒருசேர திரட்டி பல உணர்வுகளுக்கு நிஜமுகம் அளித்திருப்பதில், வாசித்த பின்னும் கவிதையை கடக்க சில மணித்துளிகள் தேவைப்பட்டன.

"பேசத் தெரியாதவன் தோற்றுப் போகிறான் என்பதினாலேயே கற்றுக் கொள்ள வேண்டியதில்லை பேச"

என்ற வரிகளில்,
ஒருவரிடம் வார்த்தைகள் இல்லை அல்லது பிரயோகிக்க தெரியவில்லை என்பதால் வாதிக்கையில் எல்லாம் மௌனமாய் இருக்கிறார்கள் என்பதல்ல, தோற்றுப் போனாலும் உறவுகளுக்கான முக்கியத்துவம் அதிகம் என்பதை உணர்த்துகிறது.

இரு முறை தன்னை காப்பாற்றிய ஒருவரை மூன்றாவது முறை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில் காணும் நிலையில் சுவரொட்டியில் வழியும் கண்ணீர் தன் கண்ணீரென, ஒரு சம்பவத்தை கவிதையால் கடத்த அதுவும் எதிர்பாராத உறவுகள் எப்போதாவது வந்து எப்படியோ சென்றாலும், உணர்வாக உள்ளத்தில் வாழும் நிலையை சித்தரிக்கையில் மனிதநேயமும், மனிதத்தன்மையும் ஒருசேர கலந்து வெளிப்படுகிறது.

இரா.பூபாலன் அவர்களின் கவிதைகள் பொதுவானவற்றை மேலோட்டமாய் சொல்லாமல் விளிம்பின் உள்ளத்தில் ஆணியடித்து நிற்கிறது. சில வரிகளில் எதிர்பார்ப்புகள் திணித்து, எதார்த்தங்களை உறைத்து, உள்ளிருக்கும் உயிர்ப்புகளை கிளறிப் பார்க்கிறது.

 "இளைப்பாறுதல்களும் எல்லைமீறல்களும் மலிந்து கிடக்கும் இவ்வுலகில் 
பொய் முகத்துடனும் புனைப் பெயருடனும் ஒருவேளை 
நீயுமிருக்கலாம் என்ற எண்ணம் வரும்போது மட்டும் ஒரு கணம் நின்று பின் துடிக்கிறது இதயம்!" 
என்ற வரிகளில் முகத்திரைகளின் மொத்தமும் முற்பட்டு எழுத்தாய் உருமாறி பலரின் ஆழ்மன தேடலின் ஆணிவேராகிறது..!

இந்நூலில்..,
"வன தேவதையை நேரில் பார்த்தால் பளாரென அறைந்து கேட்டிருப்பேன், கோடாரிகள் இல்லாத மனிதனாக அவனை மாற்றிவிடும் மதி கூட இல்லாத நீ என்ன தேவதை என"
என்ற வரிகளில் மரத்திற்கான பதிவுகளை பிறர் விரும்பும் பாணியில் விவரித்திருந்த விதம் இயற்கைக்கான குரலாய் பதிந்து போகிறது சிந்தையெங்கும்!

நடைமுறை யதார்த்தங்களை அலசிப் பார்க்கும் இக்கவிதைத் தொகுப்பின் இறகுகளின் மென்மையை முடிந்தால் நீங்களும்  ரசித்துப் பாருங்கள்!



-கவிமலர் த.சரண்யா
 கருமண், கொழிஞ்சாம்பாறை
 பாலக்காடு மாவட்டம்,
 கேரளா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக