ஆகஸ்ட் 17, 2020

முன்னோர்கள் கண்ட கரு வளர்ச்சி - கட்டுரை

முன்னோர்கள் கண்ட கரு வளர்ச்சி - கட்டுரை.


முனைவர் சு. சத்தியா

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை

பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

தஞ்சாவூர்.

   நம் தமிழ்மொழி காலத்தால் மூத்தது. தனித்து இயங்கும் ஆற்றல் படைத்தது. இதற்கு மூலக் காரணம், நம் முன்னோர்களின் வளமான வாழ்வும் பண்பாடும்தான்! இத்தகைய வாழ்வியலை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே அறிவியல் சிந்தனையோடு வாழ்ந்துள்ளனர். இதனை இலக்கியங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவற்றை நோக்குங்கால் மண்ணியல், தாவரவியல், விண்ணியல், மருத்துவவியல்,  அளவியல் எனப் பல்வேறு துறைகளிலும் இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அன்றே முன்னோடியாய் வாழ்ந்துள்ளனர் என்பதும் புலனாகிறது. இவற்றுள் மருத்துவ ஆராய்ச்சியில், உலக உருவாக்கத்தின் கருவாகிய பெண்ணிடமிருந்து கரு உண்டாவதுமுதல் அனைத்து வளர்ச்சிப் படிநிலைகளையும் கண்டறிந்துள்ளனர். இதனை ஆராயும் வண்ணம் இக்கட்டுரை அமைகிறது.

தொல்காப்பியர் வகுத்த உயிரினப்பாகுபாடு 

   தொல்காப்பியர் மரபியலில் உயிரினப்பாகுபாட்டினை,

        ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

        இரண்டு அறிவதுவே அதனோடு நாவே

        மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

        நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

        ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

        ஆறறி வறிவதுவே அவற்றொடு மனனே

        நேரிதின் உணர்ந்தோர் நெறிப் படுத்தினரே (தொல். பொருள். மரபியல் 27) 

   என்று ஆறு பெரும்பிரிவுகளாகப் பிரித்ததோடு அதன் கருவளர்ச்சியினையும் மரபியலில் விரித்துக் கூறியுள்ளார்  இதேபோன்று மாணிக்கவாசகரும்,

         புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

        பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

        கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

        வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்

        செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 

        எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்  (திருவம்மானை 14)

   என்று தான் எடுத்தப் பிறவிகளைப் பாடியுள்ளார்.

தொல்காப்பியரின் மருத்துவ அறிவு

    ஒரு பெண் தன் கணவனோடு எந்நாட்களில் சேர்ந்திருந்தால் குழந்தை உண்டாகும் என்பதை,

      பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்

      நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர் (தொல். கற்பியல் 46) 

என்று தொல்காப்பியர், தலைவிக்குப் பூப்புத் தோன்றி 12  நாட்களும் தலைவன் அவளைப் பிரிந்திருத்தல் கூடாது என்று கூறுவர் அறிவுடையோர் என்பதிலிருந்து, தொல்காப்பியருக்கு முற்பட்ட காலத்தின்  கரு வளர்ச்சியினை நம்மால் அறியமுடிகிறது. மேலும் நம்பியகப்பொருள் அகத்திணையியலில்,

        பூத்த காலைப் புனையிழை மனைவியை

        நீரா டியப்பின் ஈராறு நாளுங்

        கருவயிற் றறூஉங் கால மாதலிற்

        பிரியப் பெறாஅன் (நம்பி.91) 

என்று கரு உருவாகும் காலத்தை நாற்கவிராச நம்பியும் குறிப்பிட்டுள்ளார்.

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

      பொதுவாக ஏழாவது மாதத்தில் கரு நன்கு வளர்ச்சியடைய வேண்டும் அவ்வாறு வளராவிடில் குழந்தை குறைப்பாட்டுடன் பிறக்கும் என்பதை  எந்தவிதக் கருவியுமில்லாமல் மக்கட் பிறப்பில் சிறப்பில்லாத குருடும் வடிவில்லாத தசைத் திரளுடன் இருக்கும் குழந்தையையும் அதன் மற்ற உறுப்புகள் அடையும் குறைப்பாட்டினையும்,  

  சிறப்பில் சிதடு; முறுப்பில் பிண்டமும்

  கூனும் குறளு மூமுஞ் செவிடும்

  மாவு மருளு முளப்பட வாழ்நர்க் (புறம்.28) 

என்ற புறநானூற்றுப் பாடலில் பிறப்பின் மகத்துவத்தை, உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளிக்கு நல்லறிவு புகுத்தப் பாடியுள்ளார்.

கவைமகனார் உரைத்த - கவைமக 

  கவைமக என்ற சொல்லுக்கு இரட்டைக் குழந்தை என்று பொருள்படும். இப்பொருளினை மையமாகக் கொண்டு குறுந்தொகையில்,

கொடுந்தாள் முதலைக் கோள்வல் ஏற்றை

வழிவழக்கு அறுக்கும் கானல்அம் பெருந்துறை

இனமீன் இருங்கழி நீந்தி நீ நின்

நயன் உடைமையின் வருதி இவள் தன்

மடன் உடைமையின் உவக்கும் யான் அது

கவைமக நஞ்சு உண்டாஅங்கு 

அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே (குறுந்தொகை 324) 

என்று புலவர்  பாடியுள்ளார். அவரின் பெயர் எதுவும் தெரியாததனால், கவைமகவின் செய்தியை உவமையாகக் கூறிய சிறப்பால், இப்பாடலாசிரியருக்கு கவைமகன் என்பதே சிறப்புப் பெயராயிற்று. இப்பாடலில் மகவடிவு இல்லாது ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுள், ஒரு குழந்தை நஞ்சு உண்ட வழி, அந்நஞ்சு மற்றொரு குழந்தையையும் தாக்கிக் கொல்லும் என்பதைக் கூறுவதோடு ஆண் இரட்டை, பெண் இரட்டை, ஆணும் பெண்ணுமாய இரட்டை, ஓருடலில் இருதலையுடன் பிறக்கும் இரட்டை, ஓருடலில் ஒட்டிப் பிறக்கும் இரட்டைப் பிறப்புகள் உள்ளன என்பதை, மேற்கண்ட பாடல் வழி அறியமுடிகிறது.  

 திருமூலரின் கர்ப்பக்கிரியை

   திருமூலர் தான் எழுதிய திருமந்திரத்தில் கர்ப்பக்கிரியை எனும் தலைப்பில், குழந்தை உருவாவது முதல் வெளிவருவதுவரை உள்ள அனைத்துப் பருவ வளர்ச்சியினையும் விரிவாகக் கூறியுள்ளார்.  

தூயமனம்

 ஆண் பெண் இருவரும் சேரும்போது தூய எண்ணத்துடன் இருக்கவேண்டும் என்றும், இருவரின் எண்ணங்களும் கருவாகும் குழந்தையைச் சென்றடையுமென்பதை,

    ஏயங் கலந்த இருவர் தம்சாயத்துப்

    பாயும் கருவும் உருவாம் எனப்பல

    காயம் கலந்தது காணப் பதிந்தபின்

    மாயம் கலந்த மனோலயம் ஆனதே  (திருமந்திரம் 459) 

என்றவாறு விவரித்துள்ளார். ஏனெனில், ஆண்கள் குடித்துவிட்டோ அல்லது ஏதேனும் போதை வஸ்துகளை உட்கொண்டோ புணரும்போது, அக்கருவில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் ஊனம் ஏற்படும் என்பதை இன்றைய மருத்துவர்கள் கூறினாலும், அன்றே இந்நிலையினை முன் அறிந்து விழிப்புணர்வு ஊட்டியவர் திருமூலர். 

ஆண் – பெண் - அலி

  ஒரு பெண் கருவுற்றபோதே அக்கரு ஆணா, பெண்ணா என்று அறிதலை

     ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்

     பூண்இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்

     தாள்மிகும் ஆயின் தரணி முழுதாளும்

     பாழ்நவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே (திருமந்திரம் 478) 

என்று ஆண், பெண் கலப்பில் ஆண் விந்தில் சுக்கிலம் மிகுதியானால் ஆண் குழந்தையும், கரு முட்டையில் சுரோணிதம் மிகுதியானால் பெண் குழந்தையும், இரண்டும் சமமானால் அலியும் பிறக்கும். மேலும், ஆண் விந்தில் ஆற்றல் மிகுந்திருந்தால் ஆண்குழந்தை அரசாளும். இரண்டில் ஏதாவது ஒன்றில் பாழாக்கும் பொருள் மிகுதியானால், கரு உண்டாகாது எனும் நுணுக்கத்தை மருத்துவர் போல  விளக்கியுள்ளார்.

வளர்ச்சி – குறைபாடு

     இன்று கருவளர்ச்சியைக் கண்டறிய நவீனக் கருவிகள் உள்ளன. ஆனால் திருமூலர் இதனை,

      பாய்கின்ற வாயு குறையின் குறள்ஆகும்

      பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்

      பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்

      பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே (திருமந்திரம் 480) 

 இவ்வாறு விந்துவை செலுத்தும் வாயுவின் அளவினைப் பொருத்தே குழந்தையின் ஊனத்தையும் மற்ற செயல்களையும் அறியமுடியும் என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார். 

மாணிக்கவாசகர் உரைத்த கருவளர்ச்சி

         பிறவிப் பிணியை அகற்றிப் பேரின்பத்தை அடையும் வழியினைப் பாடிய மாணிக்கவாசகர் திருவாசகத்தில்,

        யானை முதலா எறும் பீறாய

        ஊனமில் யோனியின் உள்வினைப் பிழைத்தும்

        மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து

        ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்

        ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்

        இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்

        மும்மதி; தன்னுள் அம்மதம் பிழைத்தும்

        ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்

        ஐஞ்சு திங்களில் உஞ்சுதல் பிழைத்தும் 

        ஆறு திங்களில்; ஊறலர் பிழைத்தும்

        ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்

        எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்    

        ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

        தக்க தசமதி தாயொடு தான்படும்

        துக்க சாகரத் துயரினைப் பிழைத்தும்  (மாணிக்கவாசகர் போற்றித் திருஅகவல்)

என்று குழந்தையின் கரு வளர்ச்சியினை நுண்ணிய முறையில் துள்ளியமாகக் கூறியுள்ளது, நம் முன்னோரின் ஆழ்ந்த அறிவியல் நுட்பத்தை விளக்குகிறது. மேலும்,

        கருவாகிக் குழம்பிருந்து கலத்து மூளை

       கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந் தொன்றாகி

       உருவாகிப் புறப்பட்டிங் கொருத்திதன்னால் வளர்க்கப்பட்டு  

                                                                  (தேவா.6:25:6) 

என நாவுக்கரசரும் உயிர் உருவாக்கத்தினைப் பாடியுள்ளார்.

     இவ்வாறு நம் முன்னோர்கள் உலக உயிரினப் பாகுபாட்டினை வகுத்ததோடு, அவற்றின் வளர்ச்சிப் படிநிலையினை அறிவியல் சிந்தனையோடு மெய்ப்பித்துள்ளனர். குறிப்பாக தாயின் கருவில் குழந்தை உருவாவது முதல் வெளிவரும் நாள்வரை உள்ள அனைத்து வளர்ச்சி நிலைகளையும், இன்றைய மருத்துவத்தில் கண்டறியாத நுணுக்கமான சில உண்மைகளையும் அறிவியல் நுட்பத்துடன் அன்றே ஆராய்ந்துள்ளனர். 

    ஆண் பெண் இருவரின் ஒருமித்த அன்பினால் உருவாகும் கருவின் மகத்துவத்தை இன்றைய சமூகத்தினர் சரியான முறையில் புரிந்துகொண்டு வாழ முயலவேண்டும். இதனையே நம் முன்னோர்கள் நமக்கு எடுத்துரைத்துள்ளனர்.

பார்வை நூல்கள்

1.தொல்காப்பியம்

2.திருமந்திரம்

3.எட்டுத்தொகை நூல்கள்

4.திருவாசகம்

5.தேவாரம்

                  

        




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக