ஆகஸ்ட் 16, 2020

வடக்கு மாகாண கூத்துக்கள் ஒரு கண்ணோட்டம் - ஆய்வுக்கட்டுரை.

வடக்கு மாகாண கூத்துக்கள் ஒரு கண்ணோட்டம்

ஆய்வாளர்:-
சர்வதேச தமிழ் ஆய்வாளர :- புயல் ஸ்ரீகந்தநேசன்,
யாஃ நாவற்குழி ம.வி.
இல-18, இலந்தைக்குளம் வீதி,
யாழ்ப்பாணம்,
வடக்கு மாகாணம்.
தொ.இல:-077 – 9681333.
07-03-2020.

வடக்கு மாகாண கூத்துக்கள் ஒரு கண்ணோட்டம்

அறிமுகம்: -
கூத்து என்ற சொல் தமிழ் மொழியில் மிகப் பழைய காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்து வருகின்றது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, வசனம், பாட்டு, அடவுகள், முதலியவற்றைக்கொண்டு அதிக அளவு புராண, இதிகாச கதை மரபுகளைத் தழுவி நடிக்கப்படும் நாட்டார் கலை கூத்து என்று கூறும். இயல், இசை, கூத்து ஆகிய தமிழின் மூன்று பிரிவுகளில் கூத்து பற்றிய நூல்கள் எமக்குக் கிடைக்கவில்லை.1 சிலப்பதிகாரம் கடலாடு காதை பகுதியில் அக்காலத்தில் ஆடப்படும் கூத்துக்கள் பற்றிக் கூறப்படுகின்றன. இதன் மூலம் கடவுள்களை வேண்டி பாடி ஆடுவது தமிழர் வாழ்வியலாக இருந்துள்ளது என்பதை அறியலாம். கொடுகட்டி, பண்டுரங்கம், அல்லியம், மல்லாடல், துடிக்கூத்து, குடைக்கூத்து, பாவைக்கூத்து முதலிய கூத்துக்களை மாதவி மாறுவேடங்கள் மூலம் ஆடியமையையும் காணலாம்.2 வட இலங்கையில் ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரையும் கூத்துக்களின் பாரம்பரியம் எவ்வாறு உள்ளது எனவும் அதன் பரிணாம வளர்ச்சியையுமே இச் சிறிய ஆய்வுக் கட்டுரை அலசும்.

உள்ளடக்கம்:-
வடக்கு மாகாண மக்களின் மரபு வழியான கலைகளுள் கூத்து வடிவங்கள் மிகப் பழைமையானவை. கூத்தர்கள், கூத்தாடி, நாடகம் வழக்கு, நடனம், கூத்து, உலகியல் வழக்கு, பாடல் சார்ந்த புலனெறி வழக்கு, நாடக மகளீர் முதலிய சொற்களின் பிரயோகங்களைச் சங்க இலக்கியங்களிலும் தொல்காப்பியத்திலும் காணலாம்.3ஈழத்தமிழர்களுக்கு என ஒரு நாடக வடிவம் தோற்றம் பெற்றது கூத்தின் வழியே ஆகும். வடக்குப் பிராந்தியத்திற்கே உரித்தான தனித்துவம் மிக்க கூத்துக்கள் பல வகைப்படும். வடமோடி கூத்து, தென்மேடி கூத்து, வசந்தன் கூத்து, சிந்து நடைக் கூத்து, கோவலன் கூத்து, கன்னன் கூது;த, கர்ணன் கூத்து. வெடியரசன் கூத்து, வாள பீமன் கூத்து, சௌந்தரி கூத்து, தொண்டி கூத்து, சுபத்திராக் கலியாண கூத்து,  சகுந்தலா கூத்து, அரிச்சந்திராக் கூத்து, சத்தியவான் சாவித்திரி கூத்து, கிருஷ்ண லீலா கூத்து, அல்லி யர்ச்சுனை கூத்து, அபிமன்னன் சுந்தரி கூத்து, மார்க்கண்டேயர் கூத்து, சம்பூர்ண ராமாயண கூத்து, பாதுகாபட்டாபிசேக கூத்து, பாஞ்சாரி சபத கூத்து, பண்டாரவன்னியன் கூத்து, தணி;யாத தாகம் கூத்து, சேரன் செங்குட்டவன் கூத்து, மார்க்கண்டேயர் கூத்து என்பன அவற்றுள் சிலவாகும். இன்றைய காலக்கட்டதில் பல கூத்துக்கள் அழிவடைந்துவிட்டன. சில கூத்துக்கள் போத்துக்கேயர் காலம் தொடக்கம் இன்றுவரை கத்தோலிக்க செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டன; பயன்படுத்தப்படுகின்றன. இன்று பூர்விக தென்மேடிக் கூத்து மரபு முற்றாக அழிந்து, கத்தோலிக்கரால் பயன்படுத்தப்படும் கூத்தே தென்மேடி என அழைக்கப்படுகின்றது. இக் கூத்தை கத்தோலிக்க கூத்து என்று அழைக்கும் மரபு யாழ்ப்பாணப் பிரதேசத்தில் உருவாய்ற்று4. 
     ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கேவலனார் கதை, முல்லைத்தீவுப் பிரதேசத்தில் சிலம்பு கூறல் என சில கதை மரபு இருந்ததாக சில ஆய்வாளர்கள் கருதுவர். தழிழ் மன்னர்களான சோழர் காலத்தில் ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து என இரு வகையான கூத்துக்கள் இருந்தன. இக் கூத்துக்கள் பற்றி சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார். சோழப் பேரரசு காலத்திலையே கூத்துக்கள் ஈழத்திற்கு வந்துவிட்டன என வேறு சில ஆய்வாளர்கள் கருதுவர்கள்.5 விலாச நாடகங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் கூத்து வடிவத்தை அடிப்படையாக வைத்தே தோன்றின.
     கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலிருந்து வடமோடி, தென்மோடி மரபுக் கூத்து நூல்கள் தோன்றுவதைக் காணலாம். இலங்கையின் தமிழ்க் கூத்து நூல்களின் பிதாமகனாகக் திகழ்பவர், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணபதி ஐயர் ஆவார். இவரது வாளபிமன் நாடகமே இன்று கிடைக்கும் கூத்துப் பிரதிகளில் மிகப் பழைமையானதாகும்6. இங்லகையின் கூத்து மரபு இக் காலத்தில் இந்து மரபு, கத்தோலிக்க மரபு  என இரண்டாகப் பிரிந்தது.7 கத்தோலிக்க மதம் சார்ந்த கருத்துக்ளை மக்கள் மத்தியில் இலகுவாக பரப்புவதற்கு போர்த்துக்கேயர் கூத்து வடிவத்தைக் கையாண்டு அதில் வெற்றியும் கண்டனர்.
     யாழ்ப்பாண மாவட்டத்தில்  சிறப்பாக காணப்படுகின்ற கூத்து மரபுகபுளாக:- தென்மேடி, வடமேடி, சிந்து நடை, வசந்தன், நாட்டை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் மிகத் தொன்மையான கூத்தாக இருப்பது தென்மேடியாகும். வட்டுக்கோடடை, சுழிபுரம், அராலி,ஆகிய இடங்களில் வடமோடி கூத்தும் பருத்தித்துறைப்பிரதேசத்தில் நாட்டை கூத்தும், குரும்பசிட்டி, கட்டுவான் ஆகிய பகுதிகளில் வசந்தன் கூத்தும் காணப்படுவதுடன், தென்மோடிக் கூத்தும் சிந்து நடைக் கூத்தும் யாழ்ப்பாணத்தில் பல பிரதேசங்களில் பரந்து காணப்படுகின்றன.
     தென்மோடிக் கூத்தில் கதைக்கரு – கத்தோலிக்கம், சுவை, ஆடல்கள், பாடல்கள், அரங்கம், பாத்திரங்கள், கதை செல்லும் முறை, முதலியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. யாழ்ப்பாணத்தில் இன்று உள்ள தென்மோடிக் கூத்து பூர்வீகமான தென்மோடி வடிவமில்லை. காதல் - சோகம் - வீரம் - வரலாறு - தியாகம் முதலிய கருப் பொருள்கள் - சுவைகள், ஆரம்பம் மங்களமாகவும் முடிவு அவலமாகவும் இருத்தல், ஆடலை விட பாடல் அதிகம், புனிதர்களுக்கும் குருமார்களுக்கும் ஆடல்கள் இல்லை, 160 தரு வகைகள், யாப்பு வகைகள், பாடல் மொட்டுக்ள், பாத்திர பயன்பாடுகள், வேட உடைகள், திறந்த வெளியரங்கு முதலிவை பழைய கூத்து மரபில் காணப்பட்டன. யாழ்ப்பாண மாவட்டத்தின் கரையோர பகுதிகளிலும் சில நடுப்பகுதிகளிலும் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, முதலிய மாவட்டங்களிலும் தென்மோடிக் கூத்து காணப்படுகின்றது. இலங்கையின் கூத்துப் பாரம்பரியத்தில் மிகவும் பழைமையானதும் தனித்துவமானதும் தென்மோடி ஆகும். இன்று இவ் வகை கூத்துக்கள் பெரும்பாலும் குருநகர், பாசையூர், இளவாலை, நாவாந்துறை, கொழும்புத்துறை, சுண்டிக்குளி முதலிய பகுதிகளில் பிரதேச கலைஞர்களால், பேணப்பட்டு வருகின்றன.
     தற்காலத்தில் மிக இனிமையான குரலில் சுருதி மாறாமல், தாளம் தவறாமல், மொட்டு தவறாமல் பாட்டுக்கள் பாடப்பட்டும் ஆடப்பட்டும் வரும் தென்மேடிக் கூத்தில் மத்தளம், தாளம், ஆர்மோனியம் முதலிய இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இருந்த போதிலும் சமூகம் சார்ந்த கருத்துக்களும் சிக்கல்களும் மிக குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன. பழைய கூத்து வடிவத்தில் சமூக கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு சிறந்த ஊடகமும் செலவு குறைந்த கலையாகவும் உள்ள போதும், இன்றைய நிலையில் நவீன முறைகளுக்குள் சிக்கி வியாபார கலையாகவும் மதம் பரப்பும் சாதனமாகவும் உள்ளது.
     வடமோடிக் கூத்து வேகமும் விறுவிறுப்பும் தாளத்துடன் கூடிய கனதியும் ஆட்ட முறையும் கொண்ட வீரம் செறிந்தது. இவ் வகை கூத்து யாழ் வட்டுக்கோட்டைப் பிரதேசத்தின் சிந்துபுரம் கிராமத்தில் இன்றும் நிலைத்திருப்பதைக் காணலாம். வட இந்தியாவின் சிந்துவெளிப் பகுதியிலிருந்து இக் கலை வடிவம் இங்கு வந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவார்கள். பல காலமாக இக் கூத்து இப் பகுதியில் ஆடப்பட்டு வருகின்றது. இக் கூத்து அன்று தொடக்கம் இன்று வரை மேடையொலி தாளவொளியை விஞ்சிடும் என்ற காரணத்தால், பலகைச் சட்ட மேடைகளில் ஆற்றுகை செய்யப்படுவதில்லை. இக் கூத்து வட்டக்களரி மேடைகளில் ஆடப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் 12 – 14 மணித்தியாலயங்கள்  ஆடப்பட்டு வந்த இக் கூத்து ஓரிரண்டு மணி நேரக் கூத்தாக சுருக்கப்பட்டு ஆடப்படுகின்றது. எதுகை, மோனை, இராமாயண பாரத கிளைக்கதைகள், தாங்கும் வில், வாள், மரத்தினால் செய்யப்பட்ட யாழ், மரத்தினால் செய்யப்பட்ட கரப்பு ஆடைகள் என்பவற்றைக் கொண்டு காணப்படும்.8 தற்காலத்தில் ஒப்பனைக்குச் சீலைகளும் பயன்படுத்தப்படுவதுடன், சில நவீன ஆயுதங்களும் இசைக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இக் கூத்தை பராமரிப்பவர்கள் யாரும் இல்லாததால் அழிவடையும் நிலையில் உள்ளது வேதனைக்குறியது. வடமோடிக் கூத்தையும் அதன் மூலம் வெளிப்படும் எமது பண்பாட்டையும் பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு கையளிப்போம்.
     யாழ்ப்பாணத்தில் ஆடப்பட்டு வரும் கூத்துக்களில் சிந்து நடைக் கூத்தும் ஒன்று. பெரும்பாலும் மாரியம்மன் கதையை அடியொற்றியதாக இக் கூத்து ஆடப்பட்டு வருகின்றது. இக் கதை பிரதேசத்திற்கு பிரதேசம் சிறிய வேறுபாடுகளுடன், ஆற்றுகை செய்யப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் நீண்ட நேரம் ஆடப்பட்ட இக் கூத்து இன்று 2 – 3 மணி நேரக் காட்சிகளாக அரங்குகளில் ஆடப்படுகின்றது.9 இக் கூத்து அம்மனுக்கு நேத்திக் கடன் வைத்தே ஆடப்பட்டு வந்தது. யாழ்ப்பாண பகுதியிலிருந்தே வன்னிப் பகுதிக்கு இக் கூத்து வந்தாக கருதுவர். இக் கூத்தில் முக்கியமானது காத்தவராயன் கூத்தாகும். வேகமான ஆட்டங்ளைக் கொண்டது. இன்று ஆலயங்களில் இக் கூத்து நவீன வடிவத்தில் குறுகிய நேரத்துக்குள் ஆடப்படுகின்றது.
     வன்னிப் பிரதேசத்தில் கோவலன் கூத்து, கன்னன் கூத்து, கர்ணன் கூத்து, வெடியரசன் கூத்து, வாள பீமன் கூத்து முதலியன சிறப்பாக ஆடப்பட்டன; சில ஆடப்பட்டும் வருகின்றன. கிருஸ்தவ மதம் இலங்iயில் இலங்கைக்கு வந்ததும், யாழ்ப்பாணத்திலிருந்து அண்ணாவிமார் அழைத்து வரப்பட்டு முல்லைத்தீவு, சிலாவத்தை முதலிய பிரதேசங்களில் பாரம்பரியமாக ஆடப்பட்டு வந்த சௌந்தரி, தொண்டி முதலிய கூத்துக்களில் கிறிஸ்தவ கதைகளைப் புகுத்தி கூத்துக்களாக ஆடப்பட்டுதுடன், மேடையேற்றமும் செய்தனர். இவை மேடைகளில் திரைகட்டி நடிக்கப்பட்ட கூத்துக்களாகும்.10 மன்னாரில் மாதோட்டப்பாங்கு அல்லது தென்பாங்கு, யாழ்ப்பாணத்துப்பாங்கு அல்லது வடபாங்கு என இரண்டு வகையான கூத்து மரபுகள் உள்ளன11. தென்பாங்கில் கடவுள் வாழ்த்து வெண்பாவிலும் வடபாங்கில் விருத்தப்பாவிலும் பாடப்பட்டன. மன்னார் பிரதேசத்தில் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்கு தென்மேடிக் கூத்தும் 1505 ஆம் ஆண்டுக்குப் பிறகு பயன்படுத்தியமையைக் காணலாம்.
   வன்னிப் பிரதேசத்தில் மிகப் பழம் காலந்தொட்டு சிலம்பு கூறல் வரலாற்றைக் கூறி வருவது கோவலன் கூத்தாகும். தமிழ் மக்கள் மத்தயில் இக் கூத்து ஒரு நேத்திக்கடனாகவே அம்மனுக்கு முன் ஆடப்பட்டது. இக் கூத்து புராதன காலம் தொடக்கம் முள்ளிவளை, தண்ணீரூற்று, வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு, வட்டுவாகல், மணற்குடியிருப்பு, சிலாவத்தை, செம்மலை குமுளமுனை முதலிய பிரதேசங்களில் ஆடப்படுகி;ன்றன12 கோவலன் கூத்தே முல்லைத்தீவுக்குரிய சிறப்பானதும் தனித்துவமானதும் ஆகும். திங்கட்கிழமைகளிலும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆண்டுப் பூசையின் போதும் கோவலனார் கூத்து ஆடப்படும்.
     த.பொன்னம்பலம் அண்ணாவியார் 1926 ஆம் ஆண்டளவில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கோவலனார் கூத்தை மேடையேற்றியதாக செவி வழி கதைகள் கூறும். இக் கூத்தில் நடித்தவர்கள் பலர் பிற்காலத்தில் அண்ணாவிமார்களாக செயற்பட்டுள்ளனர். இக் கூத்து வட்டக் களரி கட்டப்பட்டு ஆடப்படும். வன்னிப் பிரதேசத்தில் இன்று வரை ஆடப்படும் கூத்தாக இருப்பதனால்,இக் கூத்தே வன்னிக்குரிய சிறப்பான – தனித்துவமான - கூத்தாக கருதப்படுகின்றது. பேராசிரியர் ம. இரகுநாதன் அவர்கள் கோவலன் கூத்து பற்றியே பட்டப்படிப்புக்கு ஆய்வு செய்துள்ளதுடன், கூத்தின் முழுப்பகுதியையும் நூலுருவாக்கம் செய்துள்ளார்13.இந்த கூத்து முல்லைத்தீவுப் பிரதேசத்தின் பல பகுதிகளில் ஆடப்பட்டுள்ளது. இவ் மாவட்டத்தில் உள்ள அருவி வெட்டுப் பாடல்கள், பள்ளுப் பாடல்கள், சிலம்பு கூறல் பாடல் மெட்டுக்கள் முதலியவை இக் கூத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
     கோவலனார் கூத்தின் மூலப்பிதி ஏட்டுப்பிரதியாகவே உள்ளது. ஏட்டுப் பிரதிகளில் உள்ள எழுத்துக்களுக்குக் குற்றுக்கள் இல்லை. கோவலனார் கூத்தின் பாத்திரங்கள் முழுவதும் ஆண் பாத்திரங்கள் ஆகும். கூத்தானது பாடல் பாடும் முறைகள், காப்பு, தோடயம், சபை விருத்தம், புகுமுக ஆட்டம், ஆட்டத் தரு, சம்பாஷனைத் தரு என வகுக்கப்பட்டுள்ளது. இக் கூத்தில் முதலில் வரும் பாத்திரம் கட்டியக்காரனாவார். பக்க வாத்தியங்களாக மத்தளம், கைத்தாளம் ஆகியன உபயோகிக்கப்படும். ஆனால் அண்மைக் காலங்களில் ஆர்மோனியம் பயன்படுத்தப்படுகின்றது. அலங்கார அமைப்பும் வித்தியாசமானது. ஆரம்பத்தில் வெளிச்சத்திற்குப் பந்தங்கள் பயன்படுத்ப்பட்டது. பின்னர் லாம்புகள், பெற்றோல்மக்ஸ், மின் விளக்குகள் என பயன்படுத்தப்பட்டன. அண்ணாவியாருக்குக் கூத்து தடசைணை கொடுத்து ஆரம்பிப்பது வழக்கம். ஆரம்ப காலத்தில் இக் கூத்து விடிய விடிய ஆடப்படும.14; இப்போது இக் கூத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் குறிப்பிடத்தக்களவுக்குப் பாரம்பரியம் பேணப்படுகின்றது என்பது நிதர்சனம்.
     முல்லைத்தீவில் உள்ள வட்டுவாகல் என்ற இடத்தில் கன்னன் கூத்து பழக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. இக் கூத்து வடமோடிக் கூத்து வகையைச் சேர்ந்தது. கோவலன் கூத்தில் உள்ள சில பாடல்களை இக் கூத்தில் வரும் பாடல்கள் ஒத்திருக்கின்றன. இப் பிதேசத்தில் நிகழ்த்தப்படும் லவகுச கூத்துக்கும் இக் கூத்துக்கும் தொடப்பு உண்டு. கன்னன் கூத்தில் கதை இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையில் நடைபெறுகின்றது. வெள்ளாம் முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, முதலிய கிராமங்களில் கோவலன் கூத்துப் பாணியில் ஆடப்படுவது வெடியரசன் கூத்தாகும். இக் கூத்தின் கதை வாய்வழியாகவே கடத்தப்பட்டு வருகின்றது. கோவலன்  கூத்துப் பாணியில் ஆடப்படும் இன்னுமொரு கூத்து வாளபீமன் கூத்தாகும். வட்டுவாகல், வெள்ளாம் முள்ளிவாய்க்கால் முதலிய பிரதேசங்களில் ஆடப்படுகின்றது. இக் கூத்தின் கதையும் செவி வழியாகவே பேணப்படுகின்றது. வன்னியர்கள்  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாக குறிப்புக்கள் உள்ளன. மகாபாரதக் கதையுடன் சம்பந்தப்பட்ட கூத்து. முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு முதலிய பகுதிகளில் கோவலன் கூத்து பாணியில் ஆடப்படம் இன்னுமொரு கூத்து லவகுச கூத்து. இவ் மாவட்டத்தில் இக் கூத்து மட்டுமே இராமாயணக் கதை சம்பந்தப்பட்டுள்ளது.15
     ஞான சௌந்தரி – கிறிஸ்தவக் கூத்து முல்லைத்தீவு, அளம்பில், செம்மலை, இரணைப்பாலை முதலிய இடங்களில் யாழ்ப்பாணத்தில் ஆடப்பட்ட பாணியில் மேடையில் திரைக் கட்டி அரங்கேற்றப்பட்டது. என்றிக் எம்பிதோர் கூத்து முல்லைத்தீவப் பகுதியில் ஆடப்படுவதுடன், இரணைப்பாலை வலையன் மடப்பகுதியில் தொண்டி என்ற பெயரிலும் ஆடப்படுகின்றது. இக் கூத்தில் எமபறர் ஹெனறி என்ற மன்னனின் வாழ்க்கை வரலாறு ஆடிக்காட்டப்பட்டுள்ளது. காத்தவராயன் கூத்து – சிந்து நடைக் கூத்து முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் ஆடப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள மாதனை என்னும் பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள் இவ் மாவட்டங்களுக்கு வந்து இக் கூத்தை மேடையேற்றினார்கள் என்பது வரலாறாகும்.16
     கூத்து என அழைக்கப்படும் ஈழத்தின தமிழ் மரபு வழி நாடகங்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், சிலாபம், புத்தளம் மலையகம், முல்லைத்தீவு, வவுனியா முதலிய பிரதேசங்களில் இன்றும் ஆடப்பட்டு வருகின்றன. சிறப்பாக மட்டக்களப்பில் வடமோடி, தென்மோடி, விலாசம் கூத்துக்களும மனனாரில்; வட பாங்கு, தென் பாங்கு கூத்துக்களும் யாழ்ப்பாணத்தில் தென்மோடி, வடமோடி கூத்துக்களும் முல்லைத்தீவில் கோவலனார் கூத்தும் மலையகத்தில் காமன், அருச்சுனன் தபசு கூத்துக்களும் ஆடப்படுகி;றன. மலையகத்தில் உள்ள கூத்துககளில் தப்பு பிரதான மேளவாத்தியக் கருவியாக இருப்பது சிறப்பம்சமாகும்.17 இப் பிரதேசங்களில் ஆடப்படும் கூத்துக்கள் பல்வேறு வேற்றுமைகளையும் ஒற்றுமைகளையும் கொண்டுள்ளன. இவ் விடயம் பரந்த ஆய்விற்குரிய பகுதியாகும். வடக்கு மாகாணத்தின் எல்லையும் வன்னி மாவட்த்தின் எல்லையும் யாழ்ப்பாண மாவட்டத்தின் எல்லையும் வரலாற்று அடிப்படையில் காலத்திற்குக் காலம் வேறுபட்டுள்ளன. வன்னிப் பிராந்தியம் வன்னி எனப் பெயர் பெறும் முன்னர் அடங்காப்பற்று என்ற பெயரில் திகழ்ந்ததாகவும் இதற்குள்ளேயே யாழ்ப்பாணமும் அனுராதபுரமும் அடங்கியிருந்ததாக கலெக்டர் ரேணர் குறிப்பிடுவர்.18 இதனால் கூத்துக்கள் நிலவிய பிரதேசங்களைப் பகுப்பாய்வு செய்வதில் சில சிக்கலகள் உள்ளன. இது ஆய்வுக்குரிய பகுதியாகும்.

முடிவுரை:-
ஈழத்தில் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழ்க் கூத்து மரபுகள் சிறப்பாக காணப்பட்டன. வடக்கில் யுத்த நிலவிய காலத்தில் கூத்துக்களின் சில வடிவங்கள் மாற்றங்களுடன் தெருகூத்துக்களாக ஆடப்பட்டு, சமூகச் செய்திகளைக் கூறின. இன்று வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் கோவலன் கூத்தும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தென்மோடிக் கூத்தும் சில மாற்றங்களுடன் ஆடப்படகின்றன. அண்மையில் நவீன நாடகங்கள், சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள், குறுந்திரைப்படங்கள், தொடர் நாடகங்கள் முதலியவற்றின் தோற்றத்தினால், கூத்துக் கலைகள் பின்னடைவை சந்தித்துள்ளன. இருந்தும் இவற்றில் கூத்துக்களின் தாக்கங்கள் உண்டு. இளைஞர்கள் கூத்துக் கலையில் ஆர்வம் காட்டாமையும் அண்ணாவிமார் அடுத்த தலைமுறைக்குச் செல்லிக் கொடுக்காமையினாலும் பல கூத்துக்கள் அழிவடைந்து செல்கின்றன. ஆரம்ப காலத்தில் நிலக் கிழார்கள், கூத்துக்கள் மூலம் பாமரமக்களின் பொருளாதாரத்தைச் சுரண்டினார்கள்; இன்று மூசாற்கள், கூத்துக்களை இழிசனரின் கலையாக கருதி அக் கலையை வளர்க்க முன் வருவதில்லை. இன்று கூத்துக்ளைப் பாதுகாக்கும் காவலரணாக திருமறைக் கலாமன்றம் திகழ்கினறது. தமிழ்ப் பண்பாட்டுடன் காலா காலம் இணைந்து வரும் கூத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் ஆகும்.
                                முற்றும்.


                    அடிக்குறிப்புக்கள்
1.    அகராதிக் குழு,   (2010), க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, இரண்டாம் பதிப்பு, சென்னை. பக்-417.

2.    இளங்கோவடிகள், (2005), சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம், சென்னை. பக்.-70 -74, 163 – 167.

3.    மணிமாரன்,க., (2012), கவின்தமிழ,“நம்மவர் அடையாளங்களே கூத்துகடகள்,” தொகுப்பாசிரியர், தி. தர்மலிங்கம், தழிழ் மொழித் தினக்குழு, வடக்கு மாகாணம், பக்-95.

4.    செல்லத்துரை, அருணா., (2000), வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள், அருணா வெளியீட்டகம், கொழும்பு. பக்-25-37.

5.    செல்லதுரை அருணா., மேலது, பக்-15.

6.    மனோகரன், துரை., (1997) இலங்கையில் தழிழ் இலக்கிய வளர்ச்சி, கலைவாணி புத்தக நிலையம், கண்டி. பக்-54.

7.    மௌனகுரு, சி., (1993),ஈழத்து தழிழ் நாடக அரங்கு, யாழ்ப்பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம். பக்-58.

8.    மணிமாரன், க., (2012), மேலது. பக்- 97-98.

9.    செல்லத்துரை, அருணா., (2000), மேலது, பக்-26.

10.    செல்லத்துரை, அருணா., (2000), மேலது, பக்-25.

11.    வித்தியானந்தன், சு., (1990), நாடகம் நாட்டாரியற் சிந்தனைகள், தமிழகம் வெளியீடு, தெல்லிப்பளை. பக்-23.

12.    செல்லத்துரை, அருணா.,(2000), மேலது, பக்-38-39.

13.    செல்லத்துரை, அருணா., (2000), மேலது, பக்-46-59.

14.    இரகுநாதன், ம., பதிப்பாசியர், (2006), கோவலன் நாடகம் (முல்லை மோடி), யாழ்-பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.பக்-எiii.

15.    செல்லத்துரை, அருணா., (2000), மேலது, பக்-40-44.

16.    செல்லத்துரை, அருணா., (2000), மேலது, பக்-44-45.

17.    பிரபாகரன், பொன்., (2015), காமன் கூத்து, புதிய பண்பாட்டு அமைப்பு, மலையகம். பக.-1-16.

18.    செல்லத்துரை, அருணா., (2000), மேலது, பக்-01.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக