Voume:4 - Issue:1
போராட்டக்காதல் - சிறுகதை
போராட்டக்காதல் - சிறுகதை
மகிழ்ச்சி ஆ.ராம்குமார்
2/639, காந்தி நகர்,
பொய்யாத நல்லூர்,
அரியலூர் மாவட்டம் - 621718.
அலைபேசி: 9943649051
gowthamdme98@gmail.com
அந்த குரல் எங்கிருந்து வந்திருக்கும்.யாரை நோக்கி வந்திருக்கும்.அது நமக்கானதா என சிந்தனைகள் அந்த குரலை ஆராயுவதிலே இருந்தது.அது புதுமையான குரல்.நான் இதுவரையும் கேட்டிடாத குரல்.அது நிச்சயமாக என்னை நோக்கி தான் வருகிறது என்பதை ஒரு வேளையாக கண்டுபிடித்தேன். அதுவும் பெண் குரல்.தோழர்.. தோழர் என்று ஒலித்துக் கொண்டே குரலும் நெருங்கியது.அந்த தோழரான தோழியும் நெருங்கினாள்.களத்தில் முழக்கங்கள் முழங்கவும்,கொத்து கொத்தாக மக்கள் போராடுவோம்..போராடுவோம் என்று கத்திக் கொண்டே நகர்ந்தார்கள்.ஆட்சியர் வளாகத்தை நோக்கி.ஒரு புறம் பறையிசை முழங்க ஆடலும் பாடலும் ஒலித்துக் கொண்டிருந்தது.அதற்கிடையில் தான் அவள் குரல் என்னை அடைந்தது.இப்போது முழுவதும் என் அருகில் அவள்.
வணக்கம் தோழர்..வணக்கம் என்றாள்.நானும் மரியாதை நிமிர்த்தமாக வணக்கம் தோழர் என்றேன்.அந்த தோழர் என்ற வார்த்தை நீளுமா இல்லை. வேறு வார்த்தையாக மாறுமா என்று அப்போது நான் யோசிக்கவே இல்லை.
நீங்க யார்?என்று கேட்டேன்.
என்னை தெரியவில்லையா? தெரியவில்லை தோழர்..அப்படியா?..என கேட்டேன்.ம்..என்றாள்.ஆனால் நான் உங்களை பார்க்கவில்லை தோழர் என்றேன்.
நான் உங்களை பல இடங்களில், பல்வேறு முழக்கங்களுடன் பார்த்திருக்கிறேன் என்றாள்.எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவளே சொன்னால், உங்களை நான் நிறைய போராட்டங்களில் பார்த்திருக்கிறேன். நீங்கள் இடும் முழக்கம் ஒவ்வொன்றும் பலரை உசுப்பவதாக இருக்கும்.நான் அதை ரசித்திருக்கிறேன் என்றாள்.உள்ளுக்குள் அவ்வளவு ஆனந்தம். நம்மிடம் வந்து ஒரு பெண் பேசுகிறாள் என்று நினைத்தும்,நம் போராட்ட குணத்தை பார்த்தும் பாராட்டுகிறாளே என்று நினைத்தும்.
தயங்கி..தயங்கி...யோசித்தேன்.கேட்கலாமா?வேண்டாமா? என்று.ஒரு வழியாக உங்க பெயர் என்ன? தோழர் என்று கேட்டாள்.மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தது.முழக்கங்களுக்கு மத்தியிலும் பறை இசைக்கு மத்தியிலும், என் பெயர் கார்த்திக் என்றேன். அவள் பெயரை சொல்லுவாளா?என யோசிக்கையில், மை நேம் லதா என்றாள்.அவள் பெயர் சொன்ன மறு நொடியே மனதில் ஆயிரமுறை உச்சரித்து முடித்துவிட்டேன்.உண்மையில் அவள் ஜீன்ஸ் பேண்ட் போட்ட தேவதை.அவளை புரட்சி தேவதை என்று தான் சொல்ல வேண்டும். அவள் நீலச்சட்டையும் கருப்பு ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்தாள்.
நீண்ட நேரம் என்னிடம் பேசினாள்.இடையில் இடையில் கூட்டத்திற்கு ஒத்தாசையாக போராடுவோம்..போராடுவோம் என்று முழங்கினாள்.அப்புறம் தோழர் வாங்க போய் ஒரு டீ குடிச்சிட்டு வரலாம் என்றாள்.
நான் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை.ஆனால் உடனே ஒத்துக் கொள்ள கூடாது என்று நினைதேன்.ஆனாலும் மனது கேட்க வில்லை.உடனே சரி..என்றேன்.அவளும் புன்னகைத்தாள்.பெண்கள் அழைத்தாள் ஆண்கள் மறுப்பதே கிடையாது.அதுவும் அழகான பெண், அவளே கூப்பிடும் போது போகவில்லை என்றாள்.என் வாழ்வில் நான் செய்த பாவங்களில் இது ஒன்றாகிவிடுமென்று பயந்தேன்.அதுவுமில்லாமல் " ஆண்" கல்" என்று நினைத்து விட கூடாதல்லவா ...
நானும் அவளும்...மன்னிக்கவும் இன்னும் அந்த அளவிற்கு நெருக்கமாக வில்லை. நானும் லதா தோழரும் நடந்தோம்.அவள் என்னிடம் பேசும் வாய் ஓய்ந்து நிற்கும் வரை நடந்தோம்.அருகில் ஒரு கண்ணாடியால் ஆன அழகான காபி ஷாப்.எனக்கு தெரிந்து நான் ஒரு முறை கூட சென்றதே கிடையாது.ஏனென்றால் எங்க ஊர் கூரை கடையி போடு டீ,காபியே பத்துரூபா தா.ஆனா இங்க இவனுங்க ஒரு சின்ன கண்ணாடி கிளாஸ்ப கொடுக்குர காபிக்கு நூறு ரூபா கேப்பாடுங்கனு யோசிச்சே போராது கிடையாது.ஆனால் லதா கூப்பிட்டதும் உடனே சென்றேன்.அவள் எனோடே வருவாளோ என நினைத்துக் கொண்டே.
அவள் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கிடையில் என்னைப்பார்த்து புன்னகையை உதிர்த்தாள்.உள்ளே சென்றதும்,காபி ஷாப்பின் ஓரத்தில் கடைசி இருக்கையில் அமர்ந்தாள்.நானும் அவள் பின்னே சென்று எதிரில் உள்ள ஜேரில் அமர்ந்தேன்.நீங்க என்ன குடிக்கிரீங்க என்று கேட்பதற்கு பதிலாக ...நீங்கள் என்ற வார்த்தை, நீ என மாறியது.நீ என்ன குடிக்கிற என மாறியது.வார்த்தைகள் நெருங்குவதே உறவுகள் நெருங்குவதற்கு தானே.
மறுபடியும் புன்னகைத்தாள்.நீங்கள் அவள் புன்னகைப்பதை பார்த்தீர்களென்றால் உடனே மயங்கிவிடுவீர்கள்.அவள் சிரிப்பில் ஏதோ போதை இருக்கிறது என்று நினைக்கிறேன். அத்தகைய அழகு, புன்னகையால் அவள் அழகல்ல. அவள் சிரிப்பதால் புன்னகைக்கு தான் அழகு.
நான் எதுவும் சொல்லாமல் சிரித்தேன். அவள் மெனு கார்டை படித்துக் கொண்டிருந்தாள்.அவள் படிக்கும் போதே,ஒவ்வொன்றாக என்னிடம் கேட்டாள். எது வேண்டும் என்று,பிறகு அவளே இரண்டு கோல்டுகாபி ஆர்டர் செய்தாள்.
முதல் முறையாக நானே முன்வந்து பேச முனைந்தேன்.அதற்குள் அவளே பேச முனைந்து, நீங்க யாரையாவது காதலிக்கிரீங்களா என்றாள்.எனக்கு வியப்பாக இருந்தது.இப்படியொரு கேள்வியை நான் எதிர்ப்பார்க்கவேயில்லை.கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன். மறுபடியும் கேட்டாள்.நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை.காதலிக்கவில்லை என்று சொன்னால் நடிக்கிறேன் என்று நினைத்து விடுவாளோ என யோசித்தேன்.அதற்குள் கோல்டுகாபியை எடுத்து வந்தார் வெயிட்டர்.ஒரு காபியை ,என் பக்கம் நகர்த்தி நான் கேட்டதிற்கு பதிலே சொல்லவில்லையே என்றாள்.நான் இல்லை என்று சொன்னேன். உடனே பெருமூச்சு விட்டாள்.எனக்கு அதற்கு அர்த்தம் புரியவில்லை .கொஞ்சமாக காபியை கலக்கி கலக்கி பருக ஆரம்பித்தோம்.பாதி வந்ததும் மறு கேள்வியை கேட்டாள்.அவள் கண் சிமிட்டி சிமிட்டி என்னை பார்த்துக் கொண்டே குடித்தாள்.அப்போது தான் நினைத்தேன். பெண்ணின் கண்களை பார்த்து பேசுவது அவ்வளவு எளிதல்ல என்று. காந்ததின் ஈர்ப்பையே மிஞ்சும் ஒரு ஈர்ப்பு லதாவின் கண்களில்.
ஓகே..தோழர் நீங்க யார் என்ன என்று எனக்கு தெரியாது ஆனால் ஏதோ நீங்களும் கூப்புட்டிங்க என்பதற்காக வந்தேன்.இதற்கு முன் யாரிடமும் இப்படி சென்றதும் கிடையாது.பேசியதும் கிடையாது என்றேன்.உடனே சிரித்தாள்.பூக்கள் சிரித்தால் அப்படி தான் இருக்குமென்று நினைத்தேன்.ஆனாலும் மனதிற்குள் நமக்கு சரியான ஜோடி என்று முடிவு செய்திருந்தேன். ஆனாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. காபி குடித்து முடித்தோம்.முந்நூற்று ஐம்பது ரூபாய் பொல் என சொன்னார் வெயிட்டர்.நானூறு ரூபாயை எடுத்து கொடுத்து விட்டு ,வாங்க போகலாம் என்றாள்.
நேரத்தையும் என்னையும் சேர்த்தே கடத்தி விட்டாள்.இரவு நெருங்கியது.இருவரும் பேசிக் கொண்டே நடந்தோம். இது வரையிலும் நினைத்து பார்க்கிறேன் என்ன பேசினோம் என்று.அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தாள். அவள் கேள்வி முழுவதும், நான் யாரையும் காதலிக்க வில்லை என்பதை உறுதிப் படுத்தும் வகையிலே இருந்தது.
என் அசடுவடிந்த பேச்சிலும்,சில இடத்தில் கராரான பேச்சிலுமே உறுதிப்படுத்தியிருப்பாள்.யாருமில்லாத இடம் ,அடர் இருட்டு நிறைந்த வானில் பெளர்ணமி போல் ,என் அருகில் அவள் நெருங்கி அமர்ந்தாள் பேருந்தில்.நான் எங்கு செல்ல வேண்டும் என்பதையும் அவளே உறுதி செய்திருந்தாள். அவள் தங்கியிருக்கும் இடத்தை எனக்கு காட்ட வேண்டுமென்பதற்காகவே அழைத்து சென்றாள்.பேருந்து பயணம், அவளுடன் தனி வித அனுபவம்.
பேருந்து கொஞ்ச நேரத்தில் லதா தங்கியிருக்கும் விடுதி இருக்கும் இடத்தை அடைந்தது.இறங்கினோம்.அவள் என்னிடம் கேட்டாள்.நான் அழைக்கும் இடத்திற்கெல்லெம் வரீயே...உனக்கு புடிக்குமா? என்றாள்.எனக்கு புரியவில்லை. நான் மறுபடியும் கேட்டேன் ,என்ன சொல்லுரீங்க என்று.நீ என்ன வா போனு கூப்புடலாம் என்றாள்.நான் சரி...என்று சிரித்தேன்.சரி உங்க நம்பர் கொடுங்க என்று கேட்டாள்.எதற்கு என்றேன்.பேச .
இன்னும் என்ன பேசுரது என்றேன்.என்ன பேசுரதா, இனிமேல் தான் நிறைய பேசனும் என்றாள்.அப்படி என்ன பேசனும்,லவ் பன்ன தினமும் பேசனும்ல என்றாள்.
அந்த நொடி நான் எங்கிருந்தேன் என்று தெரியவில்லை. நானும் என்னை மறந்து நம்பரை கொடுத்தேன்.சரி....கார்த்தி நா கால் பன்னுர...நீ பார்த்துப் போ என்று சொல்லிவிட்டு ..என் வெட்கத்தை அவள் கண்களால் புகைப்படம் எடுத்துச் சென்றாள்.போராட்டத்திற்கு உடன் வந்த தோழர் சுரேஷ் போன் பன்னி எங்கிருக்கீங்க தோழர் என்றார்.ஒரு ப்ரண்ட பார்க்க வந்திருக்க,நீங்க எங்கிருக்கீங்க என்றேன்.நான் ஊருக்கு பஸ் ஏற கோயம்பேட்டில் நிற்கிறேன் என்றார்.இதோ நானும் வந்து விடுகிறேன் என்று விரைந்து கோயம்பேட்டிற்கு சென்றேன்.
பிறகு நானும் தோழரும் அரியலூரை அடைந்தோம்.பின்பு அவர் அவருடைய ஊருக்கும்,நான் என்னுடைய ஊரிற்கும் பேருந்தில் ஏறி பயணப்பட்டோம்.
தினமும் சேவலுக்கு முன் ஒலிக்கும் சத்தம் லதாவின் அழைப்பு சத்தம் தான்.தினமும் காதலோடு சேர்த்து போராட்டமும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் கருத்தையும் பரிமாறிக் கொண்டோம்.அவள் தொடர்ந்து என்னுடன் பல போராட்டங்களில் கலந்து கொண்டாள். ஒரு நாள் போன் பன்னி ,சென்னையில் இப்போது லேசான மழை, நாம ரெண்டு பேரும் கைக்கோர்த்து கடற்கரை ஓரமாக நடந்து சென்று டீ குடித்தாள் நல்காயிருக்கும் என்றாள்.அப்போது நான் சென்னையில் இருந்தால், திடீரென்று அவள் விடுதி முன் போய் நின்றேன்.அவளை வெளியே வா என்று சொன்னதும் வந்தாள்.வந்ததும் என்னை பார்த்து சந்தோசத்தில் கட்டியணைத்துக் கண்ணத்தில் முத்தமிட்டாள்.அப்போது நான் இறகு முளைத்த பறவையாய் பறந்தேன்.அன்று அங்கிருந்து கிளம்பும் போது ஒரு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை கொடுத்தாள்.அப்போது தான் சொன்னாள்.இந்த கடிகாரத்தின் துடிப்பை போல ஒவ்வொரு நொடியும் என் இதயம் உன்னை நினைத்துக் கொண்டு தான் துடிக்கும்.என்னை மறந்து விடாதே.நான் எங்க வீட்டில் நம்ம காதலைப் பற்றி சொல்லப்போகிறேன் என்று சொன்னாள்.நானும் சரி...நீ சொல்லு ....என்றேன்..
அதன் பிறகு தொடர்ந்து காலையிலும் மாலையிலும் போன் பன்னி, எங்கப்பா ஒத்துக்க மாட்டுங்குறாரு..நான் வீட்டை விட்டு ஒடியாரப் போற..நீ ரெடியா இரு ..நா சொல்லுரப்போ போய்டலாம்னு சொன்னாள்.நானும் சரி என்று அந்த நாளுக்காக காத்தருந்தேன். அப்படியே நாட்கள் போராட்டமும் முழக்கமுமாக கடந்தது.அவளின் அழைப்பு நாளுக்கு ஒரு முறை...இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ..பிறகு வாரத்திற்கு ஒருமுறை ..எனவும் வந்தது.நாளடைவில் அவளின் அழைப்பு வராமலேயேயிருந்தது.நான் ஒவ்வொரு போராட்டமும் தவறாமல் போனேன்.உரிமைக்காகவும் அவளுக்காகவும்.என்ன நடந்திருக்கும்..ஏன் அவளிடமிருந்து அழைப்பு வரவில்லை ..நான் கேட்கவில்லையே..அவளே வந்தாள். மனதில் நுழைந்தாள்.இப்போது காணவில்லை.
நாட்கள் நெடுதூரப் பயணமாய் பயணித்து பல மாற்றங்களைடைந்தது.ஆனால் போராட்டமும் நானும் மாறவேயில்லை.தேடிக் கொண்டேயிருக்கிறேன் லதாவை.அன்று பிப்ரவரியில் வறுமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டத்திற்கு சென்றேன்.அங்கே பலரும் என்னிடம் வந்து பேனார்கள்.நானும் தோழர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தேன்.எங்கிருந்தோ ஒலித்தது ..கார்த்தி தோழர்....என்று திரும்பி பார்த்தேன்.சரியாக தெரியவில்லை. அருகில் வர வர தெளிவாக தென்ப்பட்டது.அது பெண். ஆனால் குரலில் வயது முதிர்ந்திருந்தது.உடன் கைக்குழந்தை.நான் எதிர்ப்பார்த்த வாரே அது தோழர் லதா தான்.அதே புன்னகை,அதே குரல்.ஆனால் அதே நெருக்கம் கிடையாது.
தோழர் எப்படி இருக்கீங்க.உங்கள் பேச்சு அருமை என்று பாராட்டி கைக்கொடுத்து விட்டு சொன்றாள்.அவள் காரில் ஏறும் வரை பார்த்தேன்.ஏறுவதற்கு முன்பு என்னை திரும்பி பார்த்தாள்.அவள் கண்ணில் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி,கண்ணில் நீர் ததும்ப ஏறினாள்.
சரிங்க தோழர் இந்த வறுமை ஒழிப்பு கூட்டம் வெற்றிகரமாக முடிந்தது.அடுத்த கூட்டத்தில் எல்லோரும் சந்திப்போம் என்று சுரேஷ் தோழர் கூறி உரையை முடித்தார்.
மகிழ்ச்சி ஆ.ராம்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக