தொ.பரமசிவன் அவர்களுடன் நேர்காணல்
நேர்காணல் செய்தவர் :
மருத்துவர் திருமதி. C.கௌதமி தமிழரசன்
ஊர் : திருநெல்வேலி
நாள் : 6.12.2019
நேரம் : மாலை : 4 மணி
மின்னஞ்சல் : tamilarasan.gowthami@gmail.com
தொ.பரமசிவன் அவர்களுடன் நேர்காணல்
தமிழகத்தின் ஆளுமைகளுள் அறிவுத் தளத்தில் முக்கியமானர் தொ.ப என அறியப்படும் தொ.பரமசிவம் அவர்கள். பெரியாரிஸ்ட்டான அவர் தன் ஆய்வுகளில் தமிழகத்தின் கோவில்கள்,சமண மத தொடர்பு, தமிழரின் மரபு வேர்களை ஆராய்ச்சி செய்வது ஒரு முரண் எனப்பட்டது எனக்கு. அவரை நீண்ட நாட்களாக சந்திக்கும் ஆவல் எனக்கு இருந்தது. சேவியர் கல்லூரியின் பொருளாதார துறை பேராசிரியர் அமலநாதன் ஏற்பாட்டில் போய் சந்தித்தோம்..., மேல் தளத்தில் அமைந்த வீட்டில், நாங்கள் சென்ற நேரம் பேராசிரியர் இருவர் ,தொ.ப அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.அம்மா அவர்கள் வந்த அனைவர்க்கும் காப்பி தந்து வரவேற்றார்கள் ...
அன்பளிப்பாக நடுக்கற்கள் பற்றி நான் அளித்த புத்தகத்தை பெற்றுக்கொண்ட அவர், எழுத்துக்களை வாசிப்பதில் தற்போது பார்வை குறைபாடு இருப்பதாகச் சொன்னார். ஈக்குவடார் என்ற தீவு இருப்பதே தமிழர்களுக்கு இப்போது தான் தெரிகிறது என நித்தியானந்தா பற்றி பேசிக்கொண்டு இருந்தார்... என்ன இருந்தாலும் மக்களை முட்டாள் ஆக்குவதில் அவன் ஒரு திறமைசாலி என்று சிரித்தார். டிவி சாம்பசிவம் பிள்ளை அவர்களின் தமிழ் மருத்துவ அகராதி பற்றியும், கீழடி, அவருக்கு ஆசிரியர் வீரமணி அளித்த பெரியார் விருது என பேச்சு தொடர்ந்தது.
அவர் பேச விரும்புவார் என்றோ, தொடர்ந்த உரையாடல்கள்தான் அவருக்கு உற்சாகம் தருபவை என்பதை நான் அவரை சந்திக்கும் வரை அறிந்திருக்கவில்லை. அதனால், எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி தான் சென்றிருந்தேன்...
ஒருசில கேள்விகள் அந்த நேரத்தில் தோன்றியதை மட்டும் கேட்டுக் கொண்டேன். மிகவும் உற்சாகமாக கேள்வி கேளுங்கள் அம்மா ....தெரிந்ததை சொல்கிறேன் என்றார்.
[சில கேள்விகளுக்கு இதுதான் பதிலாக இருக்கக் கூடும் என்று தெரிந்தே கேட்டேன்.]
கேள்வி: உங்கள் பார்வையில் பெரியார், பெரியாரியம்
ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லா விசயங்களுக்கும் சவால் விட்டவர். ஜெயிச்சவர்... ஜெயிக்கக் காரணம் அறுபது வருஷம் தொடர்ந்து பேசினார். பத்திரிக்கை நடத்தினார். எல்லாவற்றையும் விட அதன்படி நடந்தார். CHRIST,MUHAMMAD போல என் வாழ்க்கையே இதற்காக விட்டு செல்கிறேன் என்று அவர் சொல்லல. ஆனா அவர் வாழ்க்கையே நமக்கு ஒரு பாடம். uncompromising life வாழ்ந்தார். நம்ம நூற்றாண்டில் அவர் வாழ்ந்தார் என்பதே நமக்குப் பெருமை. 21 வயசுல பெரியாரிஸ்ட் ஆனேன் இப்ப எனக்கு 71 வயசு... இப்பவும் அப்படி தான்... [இதோ, இந்த படம் காரைக்குடியில் எடுத்தது என்று பெரியாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றைக் காட்டினர்]
கேள்வி: ’’சாதி பாதுகாப்பு அற்றவனின் புகலிடம் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்’’...இன்றைக்கு
அண்மைக் காலத்தில் இல்லை. ஏனென்றால் சாதியம் தன்னைத்தானே மறு உற்பத்தி செய்து கொள்கிறது. it reproduce itself... அது ரொம்ப கஷ்டம். புதுசு,புதுசா வர்றான். இருக்கிற சாதிகளைப் பற்றிய அளவீடுகளுமே [survey]யுமே நமக்குச் சரியா இல்ல. என்னை பார்க்க வந்த பையன் கூட வந்தவன் நாங்கள் பேசிக்கொண்டே இருக்கும் போது நாங்கள் பண்ணையார் சாதி என்றான். என்னடா இப்படிச் சொல்றானே என்று நினைத்தேன். திருசெந்தூரில் சூரசம்காரதிற்கு நாங்கள் தான் வேல் கொண்டு போவோம் என்றான். சரி நீங்கள் மீனவரா என்றேன். மீனவர்கள் எங்களுக்கு கீழே என்றான். நான் குழம்பிப் போய் இருந்தேன். அப்புறம் நேற்று விஜய வாகடன் வந்தார். அவர் தான் சொன்னார் அது உப்பளத் தொழிலாளர் என்று... பண்ணையார் என்ற ஒரு சாதியே இல்லை என்பது தான் உண்மை... கோனார், உடையார் போல இப்போது பண்ணையார் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
ஓரளவு, ஓரளவு தான் பெரியார் கண்டுபிடித்தது intercaste marriage...சாதிய கரைக்க முடியும். அழிக்க முடியாது. சாம்பார்ல உப்பைப் போட்டு கரைக்கிற மாதிரி intercaste marriage பண்ண பண்ண சாதி கரைந்து போய்டும். For example muslims. கன்வெர்ட் ஆன முஸ்லிம் கல்யாணம் பண்ணி, கல்யாணம் பண்ணி அவன் XY சேர்ந்த ஜாதிக்காரன் அவன் மனைவி AB சேர்ந்த ஜாதிக்காரன் எனக் கரைஞ்சி, கரைஞ்சி தன்னோட IDENDITYஐ இழந்துட்டாங்க. எனக்கு தெரிஞ்சி ஒரே ஒரே முஸ்லிம் தாம் என் அப்பா வழியில கோனார் என் அம்மா வழியில நாடார்கள் னு சொன்னார். வேற யாரும்கண்டுபிடிக்கல... முஸ்லிம் பொருத்தவரைக்கும் ஜாதியே கிடையாது. அவங்க கேக்கிறது ஜமாஅத் தான், தொழுகையில சில வித்தியாசம் இருக்கிறதால அதை மட்டும் கேப்பாங்க... அவங்க எங்க வேணாலும் பொண்ணு எடுப்பாங்க... அவங்க ஜாதியை கரைசிட்டங்க.
ஆனா,இங்க Christianity பொறுத்த வரைக்கும் இந்த ஊர்ல [பாளையங்கோட்டை] ஏசுவே நாடார் தான்...
கேள்வி: .இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் இந்திய தேசியத்திற்கு குறிப்பாக வட இந்தியாவிற்குத் திராவிடச் சித்தாந்தங்களைக் கடத்துவது அல்லது அவர்கள் திருந்த வாய்ப்பில்லை தமிழ் தேசியம் அமைக்கலாம் என்ற முடிவிற்கு வருவது இதில் எது சாத்தியமானது?
அவர்களை மாற்றவே முடியாது. அதே நேரத்தில் திராவிடம் என்ற கோட்பாட்டை அழிக்கவும் முடியாது...ஏனென்றால்
‘’பஞ்சாப சிந்து குஜராத்த
மராட்டா
திராவிட உத்கல வங்கா’’ என தேசிய கீதத்திலே திராவிடம் வருது. நாளைக்கு ஒரு பிள்ளை வந்து திராவிடம் என்றால் என்ன? என்று கேட்டால் இந்த நாடு என தென் மாநிலங்களதான் காட்டுவான். நம்ம காலத்தில இல்லைனாலும் ஒரு நாள் எழும்பும்.
கேள்வி:.உங்களை மிகவும் கவர்ந்த சமூக சீர்திருத்தவாதி அல்லது தலைவர் யார் ?
வேற யாரு ..பெரியார் தான். ஏனென்றால் அவர் வாழ்ந்து காட்டினார். சும்மா பேசிட்டுப் போகல.
கேள்வி:
தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை அதன் வேரில் இருந்து நீங்கள் ஆராய்ச்சி செய்து உள்ளீர்கள்...அந்த பண்பாட்டை தான் இன்றைக்கு இளைய தலைமுறை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது அதற்கு சரியான மாற்று பண்பாடு தேவை ...இதில் எது சரியாக இருக்கும்?
மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது.வேர்களை பற்றிய studies இல்லாததனால் நான் வேர்களை பார்த்தேன். என்ன பத்தி ஒரு டாக்குமென்ட் எடுத்தாங்க. அதுக்கு என்ன பேர் வைக்கிறது என்று கேட்டார்கள். வேரும் விழுதும் என்ற தலைப்பு கொடுத்தேன். வளர்ந்து போற விழுது மறுபடியும் எங்க போகுது? வேரைத் தேடி போகுது.அதைப் போல விழுது முழுக்க வேரைத் தேடி போகணும் என்பது தான் என் எண்ணம். விழுது போலவே வேரும் மரத்திற்கு பலம் தானே ..
கேள்வி: நீங்கள் விரும்பிப் படித்த புத்தகம் எது?
ஒரு புத்தகம்னு சொல்ல முடியாது. நிறைய இருக்கு .. ஏதாவது ஒன்னு என்று கேட்டால் அது ‘சிலப்பதிகாரம்’’ தான் சொல்லுவேன்.
கேள்வி:பார்ப்பனியப் பண்பாடு வேறு, தமிழ் சமூகத்தின் பண்பாடு வேறு.. ... உங்களின் இத்தனை வருட உழைப்பில் தமிழர்கள் இந்த இரண்டையும் வேறுபடுத்தி அறியும் அறிவைப் பெற்று விட்டார்கள் என நம்புகிறீர்களா?
ஆமாம். என்னைப் போன்றவர்கள், எழுத எழுத நான், மயிலை சீனி வேங்கடசாமி, வானமாமலை, P.L .சாமி இவர்கள் எழுத எழுத அதை மக்கள் வாசிக்க... வாசிக்க... மாறும்.
என்கிட்ட வைரமுத்து சொன்னார். உங்கள் புத்தகத்தை வாசித்த பின்பு தான் எனக்கு இந்து வேற, நாம வேறன்னு புரிஞ்சிது என்று.... அப்படி வாசிக்க, வாசிக்க மக்களும் புரிஞ்சிப்பாங்க.
கேள்வி: திராவிட இயக்கப் பண்பாடு அதாவது பெரியார் அமைக்க விரும்பிய பண்பாடு என்பது மண்ணை விட்டு செல்லும் ஜெட் போன்றது. அதற்குச் சொந்த நிலத்தின் அனைத்தையும் பண்பாடு, மரபை உட்பட விட்டுத்தர வேண்டும். ஆனால், உண்மையான தமிழ்ப் பண்பாடு திராவிடப் பண்பாட்டிற்கு முற்றிலும் வேறு பட்டது. இது இரண்டையும் எப்படி ஒரே தளத்தில் உங்களால் பார்க்க முடிந்தது?
பெரியார் சொன்ன பண்பாடு என்பது வள்ளுவர் சொன்னது தான். பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார். பெரியார் பேசியது மனித சமத்துவம். வள்ளுவர் பேசியது உயிர் சமத்துவம்.
வேர்களின் மீது தான் அனைத்து பண்பாடும் கட்டப்பட்டுள்ளது. தமிழ் பண்பாடும் மனித சமத்துவம் பேசுகிற பண்பாடு தான். [இரண்டு பண்பாட்டிற்கும் வேறுபாடு இல்லை என்பது போலச் சொன்னார்]
கேள்வி: இன்றைக்கு இருக்கின்ற ஆபத்தான அரசியல் சூழலில், பார்ப்பனீயம் இந்தியாவை விழுங்கக் காத்திருக்கும் இந்த சூழலில் வடக்கில் அம்பேத்கர், புத்தர் போன்றோ, தெற்கில் பெரியார்,ராவணர் போன்றோ ஒரு தலைவர்கள் வர வாய்ப்பு இருக்கிறதா? வந்தாலும் வீழ்த்த முடியாத தலைவர்களாக அவர்கள் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதா?
இருக்கு என்று நான் நம்புகிறேன். அம்பேத்கர் எப்படிப் பட்ட சூழலில், இடத்தில் இருந்து வந்தார். இன்னைக்கு அவருக்கு PARLIMENTல சிலை இருக்கு. அது போல வருவாங்க. பெரியார் பெற்ற வெற்றியைப் பெற வாய்ப்பு இல்லை என்றாலும் வருவாங்க.
[‘’மக்கள் சமூகம் எக்குலையாதே மிக்க துன்பம் மேவுகின்றதோ ‘’ என்ற பாரதிதாசன் பாடலை கூறி சூழ்நிலை தலைவர்களை தோற்றுவிக்கும் என்றார்.]
கேள்வி: நீங்கள் விரும்பி உண்ணும் உணவு எது?
நான் புலால் உன்ன மாட்டேன். சாதாரண பழைய சோறு தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பொறுப்பு & உரிமை: நேர்காணல் ஆசிரியருக்கே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக