கவிஞர் ஞானா (எ) தா.ஞானமூர்த்தி
47, முருகாரெட்டி தெரு
சோளிங்கர் - 631 102.
இராணிப்பேட்டை மாவட்டம்.
தமிழ்நாடு, இந்தியா
அலைபேசி : 9444443249, 8489874291
Email id: gnanamoorthy974@gmail.com
எந்திரத்துவம்
கடமைக்குப் பரிசாக
தலையில் ஒரு கொட்டு
அலறிய கடிகாரம்
அடங்கிப் போய்விட்டது!
மௌனித்த மணித்துளிகளில்
மீண்டுமொரு
குட்டித் தூக்கம்!
விழித்துப் பார்க்கிறேன்
விடிந்தே போய்விட்டது
அலறியது
கடிகாரமல்ல
நான்தான்!
அவசர கதியில் - எல்லாம்
முடித்துவிட்டு
எந்திர வாழ்கையில்
எந்திரன் அவதாரம்!
அலுவலகம் நுழைந்ததும்
ஆரம்பமாகும்!
பசிக்கும்போது
சோறு கிடையாது!
ஆர அமர்ந்து
புசிக்க முடியாது!
கிடைக்கும் இடைவெளியில்
கிடைப்பதை விழுங்கும்
விரியன் குட்டிகளின்
வித்தை அறிந்தவன் நான்!
குரங்காட்டியின்
பார்வையிலிருந்துக் கூட
சில நேரம் குரங்கு
தப்பித்துக்கொள்கிறது! ஆனால்
நாங்கள்
தப்பிப்பதே இல்லை!
மூலை முடுக்கெல்லாம்
ஒளிப்படக் கருவி (சிசிடிவி)
முணுமுணுத்துக் கொண்டே
இருக்கிறது!
கைக்கட்டி, வாய்பொத்தி
வேலை செய்கின்ற
எந்திரங்களில்
நான் முதல்வன்!
கைநிறையச் சம்பளம்…
வெட்கமே இல்லாமல்
அனைத்தையும்
துடைத்துப் போடச்
சொல்கிறது!
அலுவலகம் முழுவதும்
குளிர்சாதன வசதி
மூடிய கண்ணாடி
புட்டிக்குள்
பூட்டப்பட்ட மீன்களாய்!
அன்னியப்பட்டு போகிறோம்.
பூவுலகோடு!
அந்திச் சாய்ந்ததும்
குருவி கூட்டை
அடைவதைப் போல்
அருவி ஆற்றை
அடைவதைப் போல்
வீட்டையடைவோம்!
அவசர உணவும்
ஆறிப்போச்சு அடடா
அதுவும் அமிர்தம்!
உண்ட களைப்பு
எந்திரனுக்கும் உண்டு!
சோர்ந்து விழுவோம்
அதிகாலை எழ வேண்டும்
கடிகாரத்தைத் தேடுவோம்!
காலையில் வாங்கிய
கொட்டின் வீக்கம்
கடிகாரத்தில் தெரிகிறது!
என்ன செய்வேன்
எந்திரன் நான்!
கவிஞர் ஞானா
சோளிங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக