மே 12, 2019

மரபுக்கவிதை

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
மரபுக்கவிதை

-பாகனூர்ச்செல்வன்

கரும்பாய்க்கற் கண்டாய் இனித்த குரல்கள் 
கருந்தேளாய்க் கொட்டினாலும் பாம்பாகச் சீறிவந்து
 வெற்றெனத் தீண்டினாலும் பெற்றபெரு வாழ்வினில் 

வெற்றிபெற வேண்டும் துணிவு.

***************************************
அன்பு
'''''''''''''''''''''''''' 
-பாகனூர்ச்செல்வன்

நெஞ்சம் நிறைந்திட்ட நண்பர் விடம்தந்து 
வஞ்சனை செய்தாலும் ஐயம் சிறிதுமிலாது 
நஞ்சினையும் நற்றேன் அமுதமாய் உட்கொண்டு 
நெஞ்சம் குளிர்ந்திடல் அன்பு. 

-பாகனூர்ச்செல்வன்

அனைவரையும் அரவணைப்பாய் 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதயத்தை நெறிப்படுத்தி உயர்வளிக்கும் பெருந்தகையான் 

பசிப்பிணியும் பிறவிப்பி ணியும்களையும் கொடையாளன் 

செழுந்தகைமை இறைவனாக அனைவரையும் அரவணைப்பாய் 


அளவற்ற அருளாளன் நிகரற்ற கருணையாளன் 

உலகத்தின் ஒளிவிளக்கு தனக்கென்றோர் உருவமிலான் 


எளியோர்க்கே எளிமையான் வலியோர்க்கு வலிமையான் 

பெருமாற்றல் உடைமையான் சிறுமைகள் சிறிதுமிலான் 


தவறிழைத்தார் ஒறுத்திடுவான் தவறிழைக்கார்க் கருள்செய்வான் 

தொழுகையை விரும்பிடுவான் அழுகையை நிறுத்திடுவான் 

எனவாங்கு

முதலும் முடிவும் இலாத தலைவன் 

மதலைபோல் வெள்ளை மனத்தை உடையவன் 

எல்லோரை யும்ஒன்றாய் எண்ணிடும் உள்ளத்தான் 

நல்லோன் அவனைப்பின் பற்று. 

-சோழவந்தானூர் முத்தையாப்புலவன்

பாகனூர்ச்செல்வன் கவிதைகள்
'''''''''''''''''''''''''''''''''''''''
1. அன்பெனும் பண்பை அணிந்து அறியார்க்கும் 
கேளாமல் அள்ளி வழங்கிடும் பேரருள் 
கூடலில் வீற்றிருக்கும் மாரியாய்ப் போற்றி 
எவருக்கும் அன்பறம் செய். 

2. யமன்எதிர் வந்த நிலையிலும் தன்னையே 
நம்பி அமர்ந்த உயிர்பல  காத்தநல் 
உத்தமன் பேருந்தின் ஓட்டுநன் நெஞ்சம்போல்
நன்மையே என்றும் புரி.

3. நெடுஞ்சாலை மேதினில் காய்த்து நசுங்கும் 
புளிநெஞ்சத் துன்பம் ஒருநொடியில் நீக்கும்
இணையின் அருட்பார்வை பெற்று மனமகிழ்ந்து
அன்புடன் என்றென்றும் வாழ். 

4.கால்கடுக்க நின்று வயிறுவாய் புண்ணாகத்
தால் துடிக்க ஊராரின் பிள்ளைக ளையும்தான்
ஈன்ற குழவியாய்ப் பேணிடும் ஆசிரியர்க்கு
என்றும் மதிப்புக் கொடு. 

5.மெனக்கெட்டுப் பேருந் திலிடம் பிடித்தே
அமர்ந்த இருக்கை வயிற்றுப்பிள் ளைக்காரி
கண்டதும் கேளாமல் தந்துதவும் ஆண்மனம்
போலக் கருணை யளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக