ஒரு நிமிடக் கரிசனம் - புதுக்கவிதை
அலறியது அலாரம் ஐந்து மணியளவில் ,
செல்லமாய் கொட்டி ஏழ
இன்னும் சிறிது ஓய்வெடு
என்பது போல் வருடிய காலைத்தென்றல்.
அரக்கப்பரக்க ஓய்ந்தது
காலைவேளை ,தொடங்கியது அலுவலகம் வேலை .
அவசர ஓட்டம்
ஒரு நிமிட தாமதம் ,
பேருந்து போய் இருக்கும்
என்ற அச்சம்
ஒரு நிமிட தாமதமாய்
காத்திருக்கும் ஓட்டுநரின்
'ஒரு நிமிடக் கரிசனம்'
முட்டி தட்டி ஏறி ஆயிற்று,
அடுத்த நிறுத்தத்தில் இறங்க
இருக்கும் நடுத்தர பெண்மணி
பையை வாங்கி பயன
இருக்கையை பதிவு செய்யும்
'ஒரு நிமிடக் கரிசனம்,
அவசர கதியில் அலுவலகம்
அடைந்து வருகைப்பதிவேட்டில்
வருகையைப் பதிய
பையில் கை விட்டு
பேனாவைத் தேட
பக்கத்தில் நிற்பவர் பேனாவை நீட்டும்
'ஒரு நிமிடக் கரிசனம்'
காண்பவர்க்கு காலை வணக்கம் கூறி,
தொடங்கும் வேலை இடையிடையே
பல நக்கல் நகைச்சுவை
கலந்த வெட்டிப்பேச்சு
அருகிலுள்ளவர்களோடு ஆனந்தமாய் அருந்தும் மதிய இடைவேளை .
பரந்த அன்றைய நாளிதழை புரட்ட
பக்கத்துக்குப் பக்கம் கொலை-கொள்ளை ,விபத்து ,கற்பழிப்பு
விதவிதமான செய்தியில்
நொந்தது மனம்
என்ன உலகமடா?
மனிதநேயம் மறைந்து போனதா?
புலம்பித் தடுமாறியவளை பிடித்தது
'ஒரு நிமிடம் கரிசனம்'
அவள் நினைவுக்கு வந்தது
அன்றைய தின மனிதநேயத்தின் அடையாளமாய் !
ஒரு நிமிடக் கரிசனங்கள்.
அ.மகபுபூ
ந.ம.க.கல்லூரி
பொள்ளாச்சி
sulaimanathil786@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக